நான் பார்ப்பனீய சமயம், கொள்கை, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றியே குறைகூறி வருகிறேன். அதுவே வெகு நாளைய எனது கொள்கையுமாகும். அதை நான் இதுவரை மாற்றிக் கொண்டதுமில்லை. பலனடையும் வரை இனி மாற்றப் போவதும் இல்லை. எதுவரை என்றால் அவர்களால் நமக்குக் கொடுமையில்லை, துன்பமில்லை. இருவரும் சமம் என்றாகும் வரை. ஆனால், பார்ப்பனர்களில் தனிப்பட்ட எவரிடத்திலும் எனக்கு எவ்வித விரோத பாவமுமில்லை. அப்படி இருப்பதும் தப்பிதம். எனவே, எதிரிகளைத் தனிப்பட்ட முறையில் நாம் யார் மீதும் குறை கூற வேண்டாம்.
ஆனால், பார்ப்பனர்களோ யார் என்ன செய்தாலும் இது ராமசாமி வேலை, அந்த அயோக்கியன் தூண்டிவிட்டிருக்கிறான் என்று கூறுவதோடு ராமசாமியை அழிக்க எவ்வளவு இழிவான வேலையும் செய்கிறார்கள்.
இதற்கு உதாரணம் கூறுகின்றேன். 10 வருடங்களுக்கு முன்பு நானும் தோழர் கண்ணப்பரும் மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். நான் கண்ணப்பரிடம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த ஒரு அய்யர் 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இன்ஷ்யூரன்ஸ் ஆபீசர். எங்கள் பேச்சிடையே புகுந்து சிறிது கிண்டலாகப் பேசினார். அவருடன் கண்ணப்பர் சிறிது கோபமாகப் பேசினார். நான் கண்ணப்பரைத் தடுத்து, “அந்த அய்யருடன் சமாதானமாகப் பேசி நியாயங்களை எடுத்துச் சொல்லக் கூடாதா? நீயும் ஏன் அவர் போல் ஆத்திரப்படுகிறாய்’’ என்றேன். அந்த அய்யர் கண்ணப்பரைக் காட்டி “இவர் ஈரோட்டு ராமசாமி நாயக்கன் இருக்கிறானே அவனுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர். அவனுடைய சிஷ்யப் பிள்ளை. அதனால்தான் வேகமாகப் பேசுகிறார்’’ என்று என்னிடம் கூறினார்.
என்னை அறிந்த, பக்கத்திலிருந்த சிலர் சிரித்தனர். நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரும் பேசாதிருந்துவிட்டார். பின்பு கண்ணப்பர் வேறு வண்டிக்குப் போனார். நான் கக்கூசு அறைக்குச் சென்றேன். அப்போது பக்கத்திலிருந்தவரால் நான்தான் ராமசாமி எனத் தெரிந்த அவர் உடனே என்னை வந்து வணங்கி ‘மன்னிக்கவும் நீங்கள் இவ்வளவு நல்லவர் என்று நினைக்கவில்லை. உங்களைப் பற்றி நீங்கள் பெரிய பார்ப்பனத் துவேஷி என்றும், ரொம்பக் கெட்டவர் என்றும் பார்ப்பனர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டு அதை நம்பி இப்படிக் கூறிவிட்டேன்’ என்று வருந்தினார். நான் சமாதானம் சொல்லி நன்றி தெரிவித்தேன்.
இதை இங்கு ஏன் கூறுகின்றேன் என்றால் இப்படி நம்மைப் பற்றி எதிரிகள் பொதுமக்களிடையே பலவாறாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நமது ஒழுக்கங்களைப் பற்றி மனந்துணிந்து இழி பிரச்சாரம் செய்கிறார்கள். இப்பவும் அதுபோல என்னைப் பற்றி விஷமப் பிரச்சாரம் செய்து தப்புந் தவறுமாக காங்கிரஸ் தொண்டர்கள் கூட, ஏன், நேற்று ஆச்சாரியார்கூட இதே இடத்தில் பேசியிருக்கிறார். அதற்குப் பதில் சொல்லும்போது உண்மையில் வேகம் வருகின்றது. துவேஷம் வளருகிறது. வளர்ந்தால் அது எங்குபோய் முடியுமென பயப்படுவதோடு அவர்கள் அப்படி செய்தாலும் நாம் பொறுமையாக இருக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், நமது பொறுப்பு அதிகம். அவர்களுக்கு இந்தப் பிழைப்பு போனால் வேறு பல பிழைப்பு உண்டு. ஆதலால், நம்மவர்கள் நாவையும் கையையும் அடக்க வேண்டுமெனக் கோருகிறேன்.
– ‘விடுதலை’ – 24.6.1939