சிந்தனை : “வினைச்சொல்லாக ‘பெரியார்’ என்னும் பெயர்ச்சொல்’

செப்டம்பர் 16-30,2021

முனைவர் வா.நேரு

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தந்தை பெரியாரின் 143-ஆம்  பிறந்த நாள் வாழ்த்துகள்!

தந்தை பெரியாரின் இயக்கம் தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்பு இருக்காது என்று நினைத்தவர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஏன்…. உலகத்தின் பல பகுதிகளில் இன்று பரவிக்கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்து எதிரிகள் திகைத்துப்போய்  நிற்கிறார்கள். பெரியாரின் சிலைக்கு காவிச் சாயத் தண்ணீரை ஊற்றினோம், பெரியாரின் சிலையை உடைக்கச் செய்தோம், பெரியார் பேசிய பேச்சினை, எழுதிய எழுத்தினை என்ன செய்வது? அதனை ஒன்றும் செய்ய இயலவில்லையே?… பாதுகாத்து வைத்திருக்கிறார்களே, பரப்பிக்கொண்டு இருக்கிறார்களே, காட்டுத்தீயாய் அது பரவிக் கொண்டிருக்கிறதே… என எதிரிகள் கவலை கொண்டு, இன்னும் கூடுதலாக சமூக ஊடகங்கள் வாயிலாக தந்தை பெரியார் மீது அவதூறை அள்ளி எறிகின்றார்கள். ஆனால் அவர்கள் எறியும் அவதூறுச் சேறு அவர்கள் மீதே திரும்பி வந்து விழும் வேகம் கண்டு, திருப்பி எறியும் இளைஞர்களின் கோபம் கண்டு, பெரியாரின் தத்துவத்தை எப்படி எதிர்கொள்வது என்று மலைத்துப்போய்  நிற்கிறார்கள் நம் பரம்பரைப் பகைவர்கள்… இருக்கட்டும்!

“மதம் உன்னை

யோசிக்க விடாமல் தடுத்தது

அந்த விஷப்பாம்பு

உன்னைக் கொத்த வரும்போதெல்லாம்

பெரியார்தான்

பாதுகாப்பாக இருந்தார்”

என்று கவிதை பாடினார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார். மத விஷப்பாம்பு தன்னுடைய முழு ஆற்றலையும் திரட்டிக்கொண்டு, இந்தியாவின் பல பாகங்களில் சீறிக்கொண்டு, பயமுறுத்தும் நிலையில் அதனை அடித்து நொறுக்கும் தடி தந்தை பெரியாரின் கொள்கைத் தடி என்பதை இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும்  இன்றைய இளைஞர்கள் உணர்வதும் உணர்த்துவதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அண்மையில் கர்நாடகத்தில் ‘பிராமணியம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினார் என்று கன்னட நடிகரும் சிந்தனையாளருமான சேட்டன் குமார் அவர்கள் மீது கர்நாடகக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. காவல்துறையினர் அவரை அழைத்து, கர்நாடக மாநிலம் பசவனக்குடி காவல் நிலையத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஜாதிக் கொடுமை-களுக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளுக்கும் பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) தான் காரணம் என்ற அடிப்படையில் நிறைய இடங்களில் சேட்டன் குமார் பேசுகின்றார். ஜாதிரீதியான தீண்டாமையை, வேறுபாட்டை எல்லா ஜாதிகளைச் சார்ந்தவர்களும்தான் கடைப்-பிடிக்கிறார்கள். ஆனால், இதற்கு எல்லாம் நாங்கள்தான் காரணம் என்ற அடிப்படையில் சேட்டன்குமார் பேசுகின்றார் என்று பிராமணர் சங்கத்தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கர்நாடக பி.ஜே.பி. அரசாங்கம் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தியிருக்கிறது. (‘டெக்கான் க்ரானிக்கல்’ -ஆங்கில நாளிதழ்- 17.8.2021). ஆனால், சேட்டன் குமார் இதற்கெல்லாம் பயப்படவில்லை. “பசவய்யாவும், அம்பேத்கரும், பெரியாரும் எனக்குக் கற்பித்த பாடம் இதுதான். இந்தியாவில் இருக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் பெரும் பயன் பெறுபவர்கள் பிராமணர்கள்தான். ஜாதி ஏற்றத்தாழ்வு அழிந்து விடாமல் கட்டிக் காப்பவர்கள் பிராமணர்கள்தான். ஜாதி ஏற்றத்தாழ்வை உருவாக்கி இன்றுவரை அதனைப் போற்றுபவர்கள் பிராமணர்கள்தான்’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பாக நடைபெற்ற ஒரு  நிகழ்வில் (26.6.2021) தோழர் சேட்டன் குமார் உரையாற்றினார் (காணொலி வாயிலாக). சேட்டன் குமார் அவர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தி பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர், மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார். சேட்டன் குமாரின் பெற்றோர் அமெரிக்காவில் மருத்துவர்கள். அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். சேட்டன் குமார் பிறந்தது அமெரிக்காவில், வளர்ந்தது அமெரிக்காவில், படித்துப் பட்டம் பெற்றது  அமெரிக்காவில். நம் இளைஞர்கள் படித்து, பட்டம் பெற்று, அமெரிக்காவிற்கு செல்ல ஆசைப்பட்டுச் செல்லும் வேளையில், சேட்டன் குமார் அமெரிக்காவில் படித்து தனது பெற்றோர்கள் பிறந்த மாநிலமான கர்நாடக மாநிலத்திற்கு வந்தவர். வந்தவருக்கு அமெரிக்-காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. ஜாதி என்னும் கொடுமை அவரைச் சுடுகிறது. புத்தரை, பசவய்யாவை, அண்ணல் அம்பேத்கரைப் படிக்க ஆரம்பிக்கிறார். இவர்களைப் படிக்க ஆரம்பித்து முடிவில் நான் பெரியாரைப் பற்றி அறிந்து கொண்டு அவரைப் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்கிறார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குச் செல்கிறார். இந்துத்துவா என்னும் பெயரில் நடக்கும் அநீதிகளைக் காணுகின்றார். ‘இந்துத்துவா’ என்னும் தத்துவம் உழைக்கும் மக்களுக்கு எதிரானது. இந்துத்துவாவிற்கு எதிராக பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களை ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகின்றார். ‘இந்துத்துவா’ என்னும் கோட்பாடு பக்கத்திலேயே வரமுடியாத சுடும் நெருப்பாக எவரின் தத்துவம் இருக்கிறது என்று அவருக்குள்ளேயே கேள்விகள் கேட்கிறார்; ஆராய்கின்றார்.

பார்ப்பனியத்தை மிகக் கடுமையாக எதிர்த்த புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். பசவய்யா அமைப்பையும் இந்துத்துவா தனக்குள் கொண்டு வர முயற்சி செய்து கர்நாடகாவில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் இந்துத்துவாவின்  கடும் எதிரி. ஆனால், அவருக்கு மரியாதை அளிக்கிறோம் என்ற பெயரில் அம்பேத்கரையும் உள்ளே இழுக்கப் பார்க்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தத்துவத்தையும் விழுங்கும் -_ விழுங்கப் பார்க்கும் பார்ப்பன சூழ்ச்சி சேட்டன் குமாரைச் சிந்திக்க வைக்கிறது. அப்படி சிந்தித்த அவர், இந்துத்துவா பக்கத்திலேயே  வரமுடியாத அளவிற்கு அனலாய் இருக்கும் கருத்துகளைக் கொண்டவராகப் பெரியாரை சேட்டன் குமார் பார்க்கிறார். சேட்டன் குமார் “பெரியார் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் அவரிடம்தான் இந்துத்துவா எதிர்ப்புக்கான உயிர்ப்பு இருக்கிறது’’ என்று அந்த உரையிலே குறிப்பிட்டார். மேலும் ‘எனது பகுத்தறிவு பெரியாரைப் பயன்படுத்து என்று சொல்கிறது’  என்றும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

“நான் புரிந்து கொண்டேன். பெரியார் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கர்நாடக நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால், பிராமணியத்திற்கு எதிரான பெரியாரின் போராட்டம் இன்னும் உயிர்ப்புத் தன்மையோடு இருக்கிறது. அவரது கொள்கைகள் பயன்படும் என்று கருதினேன். பெரியார் தெருவில் இறங்கிப் போராடும் போராட்டக்காரர். பெண்களின் சமத்துவத்திற்கு, மனித நேயத்திற்கு அவரின் போராட்ட முறை அசாதாரணமானது. அந்த வகையில் பெரியார் மிகத் தேவையானவர்’’ என்று குறிப்பிட்டு உரையாற்றியபோது கேட்டுக்கொண்டிருந்த எனக்கு தந்தை பெரியாரின் தேவையை அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சேட்டன் குமார் எவ்வளவு அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்னும் பெருமிதம் உண்டானது. மேலும் உரையாற்றியபோது, “இன்னொரு வகையில் பெரியாரின் தனித்தன்மை என்பது பெரியாரின், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றிய புரிதல். கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்னும் முழக்கம் நேரிடையாக மதவாதிகளுக்குச் சவால் விடுக்கிறது. அவர்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. பெரியாரின் கருத்து எரிமலையைப் போல் இருக்கிறது’’ என்றார். தமிழ்நாட்டில் இந்துத்துவாவை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும், பெரிய அளவிற்கு கொண்டு வரவேண்டும் என்று  நினைக்கும் நமது பரம்பரை எதிரிகளை பக்கத்திலேயே வரவிடாத நெருப்பாக, எரிமலையாக தந்தை  பெரியார் கருத்துகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மேல் அளவற்ற மரியாதை வைத்திருந்தார். “எனக்குத் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது அம்பேத்கர்’’ என்று சொன்னார். தந்தை  பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் இருந்த புரிதலும் சேட்டன் குமாரைக் கவர்ந்திருக்கிறது. அவர் தனது  உரையில், “அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்திருக்கிறது. இருவரும்  நிறைய உரையாடியிருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் வெகுவாக மதித்து இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தை எழுதி முடித்த பிறகு அம்பேத்கர் பெரியாரைச் சந்திக்கின்றார். எல்லோருக்கும் உரிமை கொடுக்கவேண்டும், சரி. ஆனால், நாத்திகர்களுக்கும் கடவுளைப் பற்றிக் கவலைப் படாதவர்களுக்கும் என்ன உரிமை கொடுத்திருக்கிறீர்கள் என்று பெரியார் அம்பேத்கரிடம் கேட்டிருக்கின்றார். அம்பேத்கர் விளக்கியிருக்கின்றார். இம்மாதிரியான செய்திகள் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கின்றன’’ என்று சேட்டன் குமார் குறிப்பிட்டார். அமெரிக்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் நாத்திகர்களுக்கு இவ்வளவு உரிமைகள் இல்லை. ஆனால், அண்ணல் அம்பேத்கர் முயற்சியால் நாத்திகர்-களுக்கும், கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்-களுக்கும் இந்தியாவில் உரிமைகள் கொடுக்கப்-பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்-கின்றார். அந்த உரையில் சேட்டன் குமார் ‘பெரியார் எனக்கு வழிகாட்டி’  எனக் குறிப்பிட்டார்.

இன்றைய நிலையில் பெரியாரின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஆப்கனில் ஆட்டம் போடும் பழமை இஸ்லாமிய மதவாதிகளின் போக்கும், அங்கிருந்து மக்கள் எப்படியாவது தப்பித்து ஓடிவிட வேண்டும் என்று துடிப்பதும், மதமற்ற, கடவுளற்ற உலகத்தைக் கனவு கண்ட, தந்தை பெரியாரின் தேவையைப் புரிய வைக்கிறது. இந்துத்துவாவை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் மதத்திற்கு எதிராக நிற்கும் பகுத்தறிவாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வினைச்சொல்லாக ‘பெரியார்’ என்னும் பெயர்ச்சொல் இருக்கிறது.

‘தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம், உலகத்தை பெரியார் மயமாக்குவோம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்து, நம்மையெல்லாம் வழி நடத்தும் திராவிடர் கழகத்தின் தலைவர்  ஆசிரியர் வீரமணி அவர்கள் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். உலகம் பெரியார் மயமானால், உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கும் என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக, திருச்சிக்கு அருகில் சிறுகனூரில் பெரியார் உலகம் அமைய இருக்கிறது. பல ஆண்டுகளாக கிடைக்காத அனுமதி, விரைவாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர், வாராது வந்த மாமணியாகக் கிடைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருச்சி பெரியார் உலகம்,  உலகம் பெரியார் கொள்கைப்படி அமைந்தால் எவ்வளவு சிறப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் என்பதனைக் காட்டப்போகிறது. உலகத்தின் பல பாகங்களில் இருந்து வந்து பெரியார் உலகத்தைப் பார்த்துச்செல்லும் பல நாட்டவருக்கு, பல மொழியினருக்கு, உலகம் உய்வதற்கான கொள்கையை ஓவியங்களாக, ஒலி-ஒளிக் காட்சிகளாக, இன்னும் பல்வேறு கணினி வடிவக் காட்சிகளாகக் காட்டப்போகிறது. இனி வரும் உலகம் பெரியார் உலகம்தான். ‘பெரியார் உலகம்’ வேலைத் திட்டங்களில் பங்கேற்போம்; பங்களிப்போம். உணர்ச்சியும் உவகையும் அடைவோம். மனித நேயம் மிக்க புதியதோர் உலகம் செய்ய, கொள்கை வகுத்திட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *