முனைவர் கடவூர் மணிமாறன்
குடியரசில் விடுதலையில், முழங்கி வந்த
கூட்டங்கள் யாவிலுமே தமிழி னத்தார்
துடித்தெழவே விழிப்புணர்ச்சி நல்கி வந்தார்¢
துயர்ச்சேற்றில் பழிசுமந்த தமிழர் தம்மின்
விடியலுக்குப் போர்முரசம் ஆர்த்து வந்தார்;
வெறிகொண்டோர் ‘சூத்திரனே’ என்று கூறி
அடிமைக்கே ஆட்படுத்திச் சிறுமை சேர்த்த
அவலத்தைத் துடைத்தவரே அய்யா ஆவார்!
பொல்லாத தொன்மங்கள், ஏற்க வொண்ணாப்
புளுகுகளின் பொய்மூட்டை அவிழ்த்தே நாளும்
இல்லாத கற்பனைத்தேர் ஊர்ந்து சென்றே
ஏமாற்றி ஆனவரை சுரண்டி வாழ்ந்தார்!
வல்லாண்மை மிக்கோர்யாம் மேலோர் என்னும்
வாய்க்கொழுப்பில் நமைக்காலில் மிதித்து வந்தார்;
அல்லல்கள் வயப்பட்டோம்; பெரியார் என்னும்
அறிவாசான் தெளிவுரையால் உய்ந்தோம் நாமே!
கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வழியே இன்றிக்
கடுமுழைப்பால் நாள்தோறும் களைத்துப் போனோம்!
மேல்சாதிக் காரர்தம் ஏவல் நாயாய்
மிடுக்கிழந்தோம்; பழம்புகழை இழக்க லானோம்;
நால்வருணக் கதையளந்து தமிழர் தம்மை
நரிக்குணத்தார் ஏய்த்திட்டார்;நாணம் போக்கித்
தோல்மயக்கில் வீழ்ந்தவரோ ஆரி யத்தைத்
தொழு(ம்)நோயர் ஆகிவிட்ட கொடுமை என்னே!
பகுத்தறிவு,தன்மானம் மதிப்பு யாவும்
பைந்தமிழர் மீட்கின்ற உணர்வைத் தந்தார்;
மிகத்தெளிவாய்ப் பரப்புரைகள் சிற்றூர் தோறும்
மேற்கொண்டே அறிவொளியை வழங்க லானார்!
மகளிர்தம் முன்னேற்றம், உரிமை தன்னை
மாண்புறவே எடுத்துரைத்த அய்யா என்றும்
திகழ்ந்திட்டார் திராவிடத்தின் ஆசான் ஆக!
தீந்தமிழர் எந்நாளும் மறவோம்! வெல்வோம்!ஸீ