எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (84)

செப்டம்பர் 16-30,2021

தமிழை தரம்

தாழ்த்தும் பாரதி

நேயன்

இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது’’ என்னும் பாடலில்,

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழித்து நம்

ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்.

… … …

பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில்

அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்,

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு

அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்.

மாட்டுதீர் மிலேச்சர் மனப்படிஆளும்

ஆட்சியில் அடக்குவோன் ஆரியன் அல்லன்

ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்

யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!

என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார்.

“ஆரிய பூமியில்

நாரியரும் நர

சூரியரும் சொலும்

வீரிய வாசகம் வந்தே மாதரம்”

என்று 1907இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தேமாதரம்’’ பாடலில் கூறுகிறார்.

இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார்.

“அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே

ஆரியர் வாழ்வினைஆதரிப்போனே

வெற்றி தருந்துணை நின்னருள் அன்றோ?

… … …

ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ?

வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே

வீரசிகாமணி, ஆரியர் கோனே”               

               (இந்தியா, 1908)

என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்’’ என்னும் பாடலில் கூறுகின்றார். இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார்.

பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.’’

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே’’ என்கிறார் பாரதியார்.

இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்-களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ‘ஆரிய ஸம்பத்து’. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி _ இவையனைத்துக்கும் பொதுப் பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ் மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் _ இவை அனைத்துக்கும் பொதுப் பெயர் ஆர்ய ஸம்பத்து.’’

இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி, முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பவுத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ஆரியச் செல்வம் என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.

‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.

பார்ப்பனர் _ பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினை வந்தவுடன் பாரதி பார்ப்பனர்-களைக் காப்பதற்காக, ஆர். எஸ். எஸ். பாணியில் வேண்டுமென்றே ஒரு குழப்பமான கருத்தை எழுதுகிறார்.

பிராமணர் யார்? ஓர் உபநிஷத்தின் கருத்து என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு பாரதி எழுதியுள்ளார்:

“பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்… பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று… ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துக்களுக்குப் பிறந்திருக்கிறார்கள், ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமாயின் அதுவுமன்று. அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.

வேதம், உபநிடதம், மனுநீதி முதலியவற்றை நன்கு படித்த பாரதியாருக்குப் பிறப்பினால் தான் பிராமணன் என்பது தெரியாதா என்ன? தெரியும். நம் முன்னோர்கள் பிராமணர் அல்லாதார் வளர்ச்சிக்கு என ஒரு கட்சி வைத்தவுடன் நம் மக்களைக் குழப்பத்தில் தள்ளவே பாரதி இக்கருத்தை எழுதியுள்ளார். இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாரதியின் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார்கள் பாரதியைப் பின்பற்றித்தான் ‘துக்ளக்’ சோ “எங்கே பிராமணன்?’’ என்று எழுதினார்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *