அன்றைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியனூர் கிராமத்தில் இரட்டைமலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன் (1860 ஜூலை 7).
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர்.
1893இல் ‘பறையன்’ என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார்.
1891இல் ஆதிதிராவிட மகாசபையில் சேர்ந்து செயல்பட்டு, பின்னர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்து அரும்பணியாற்றினார். 1923 இல் சட்ட சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு நீதிக் கட்சி ஆட்சியைப் பயன்படுத்தி பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் ஆகியவற்றில் தாராளமாக தாழ்த்தப்பட்டவர்கள் புழங்கிட வழிவகை செய்தார். ஒரு முக்கியமான தகவலைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.
1895ஆம் ஆண்டில் லண்டனில் சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அத் தேர்வில் வெற்றி பெறுகிறவர்கள் வெள்ளைக்காரர்களே! அவர்களில் இருந்துதான் மாவட்ட ஆட்சியர், நீதிபதிகள் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
அத்தேர்வு இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்று லண்டன் பார்லிமெண்டுக்குக் காங்கிரஸ் சார்பில் மனு ஒன்றை அனுப்பினர்.
இதற்கு அதிகாரப் பூர்வமான எதிர்ப்பைத் தெரிவிக்கக் காரணமாகவிருந்தார் இரட்டைமலை சீனிவாசன். 112 அடிநீளமுள்ள ஒரு மனுவைத் தயாரித்து அதில் 3412 பேர்களின் கையொப்பங்களைப் பெற்றார்.
இந்தத் தேர்வு இந்தியாவில் நடந்தால் உயர்ஜாதி இந்துக்களான பார்ப்பனர்கள் உயர்தர உத்தியோகங்களை வகித்து, ஏழை ஜாதியினரை, தாழ்த்தப்பட்டோரை இம்சை செய்வார்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஜெனரல் சர் சார்ஜ் செஸ்னி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் இந்த மனுவை அனுப்பி வைத்தார்.ஸீ