உத்தரப்பிரதேச அரசியலின் எதிரொலி சத்திஸ்கரிலும் கேட்கிறது; அது மட்டுமா? அந்தப் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுமையால் சத்திஸ்கர் மாநிலத்தின் முதல் அமைச்சராக உள்ள பூபேஷ் பாகல் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சரின் அரசியல் வியூகங்களும் வித்தைகளும் விலாநோகச் சிரிக்கும்படி உள்ளது!
இவர் 3 ஆண்டுகளாக முதல்வராக உள்ளதோடு, “பிற்படுத்தப்பட்டோரின் பெருந்தலைவராக’’ தன்னை உயர்த்திக்கொண்டு அச்சமூகத்தினரின் செல்வாக்குள்ள முதல்வராக ஆளும் நிலையில், பார்ப்பனரின் சூழ்ச்சிகளை நன்கு புரிந்துகொண்ட அவரது தந்தை நந்தகுமார் பாகல் (86 வயது நிறைந்தவர்) உ.பி.யின் முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டா _ ஆசிரியர்கள் நியமனத்தில் _ பின்பற்றப்படவில்லை என்பதால், “பார்ப்பனரைப் புறக்கணியுங்கள், அவர்கள் அந்நியர்கள்’’ என்று இந்தித் தொலைக்காட்சி ஒன்றில், சமூகநீதி உணர்வால் கொதித்துப் பேட்டி கொடுத்ததை வைத்து, பெரிதாக ஊதி, “இவர் ஜாதிகளுக்குக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டுகிறார்’’ என்று ஒரு புகாரை, ‘சர்வ பிராமணர் சமாஜ்’ என்ற அமைப்பைச் சார்ந்த ஒருவர் கொடுத்தார்.
உ.பி., சத்திஸ்கர் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் ஒருவரும் உ.பி.க்கான செயலாளர் ரமேஷ் திவாரி என்பவர்.
இந்தச் சூழலில் பீகார், உ.பி. அரசியலில் தனது செல்வாக்கினை வீழ்த்திட பார்ப்பனர்கள் இதனை ஓர் ஆயுதமாக _ முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை பார்ப்பனர் பற்றிக் கூறியதைப் பயன்படுத்துவர் என்று பயந்தோ என்னவோ முதல் அமைச்சர் பூபேஷ் பாகல் தனது தந்தையை (86 வயது நிறைந்தவர்) பார்ப்பனர் தந்த புகார் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்து, “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது; என் தந்தை என்றாலும் விலக்கில்லை’’ என்று ‘தத்துவம்’ பேசினார்! இதற்கு மற்றொரு முக்கியக் காரணம் _ இவரை காங்கிரஸ் மேலிடம் மாற்றிவிட்டு, டி.எஸ்.சிங் டியோ என்பவரை முதல் அமைச்சராக மாற்ற முயற்சிக்கும் வேலைகளும் மும்முரமாக நடைபெறுவதை அறிந்தே பூபேஷ் பாகல், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு நடவடிக்கை மூலம் ‘அரசியல்’ பாதுகாப்பைத் தேடுகிறார் போலும்!
86 வயதான நந்தகுமார் பாகல் நான் ஜாமீனில் வரமாட்டேன் என்று 15 நாள் காவலில் சிறையில் உறுதியுடன் உள்ளார்!
பிற்படுத்தப்பட்டவர்கள்கூட பார்ப்பன தயவும், சடகோபமும் இருந்தால்தான் தங்களால் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதும், அதற்காக தனது தந்தையைக்கூட சிறைக்கு அனுப்பி, பார்ப்பனரிடம் நல்ல பெயர், ஆதரவு பெற பிற்படுத்தப்பட்ட பிரபல தலைவராகவும் முதல் அமைச்சராகவும் உயர்ந்த பின்பும்கூட ‘அரசியல்’ வித்தையில் ஈடுபட வேண்டிய கட்டாயமும் வடஇந்திய அரசியலில் _ எப்படி இந்த 2021லும் _ உள்ளது பார்த்தீர்களா?
மறுமுறையும் அம்பேத்கரும், ஜெகஜீவன்ராமும், கன்சிராமும், ‘பெரியார் மேளா’ கொண்டாடிடும் உணர்வுகளும் அவசியம் தேவைப்படுவதைத்தானே காட்டுகிறது!
தமிழ்நாட்டில் மருந்துக்குக்கூட சட்டமன்றத்தில் பா.ஜ.க. உள்பட _ எந்த ஒரு கட்சியிலும், பார்ப்பனர் உள்ளனரா? இல்லை; இல்லவே இல்லை _ 234 இடங்களில்.
இதுதான் பெரியார் மண் _ சமூகநீதி மண்! புரிந்துகொள்க!
– கி.வீரமணி,
ஆசிரியர்