எய்ட்ஸ் தடுப்பு அதிகாரியின் கருத்துக்கு அனைத்து கட்சிகள் கண்டனம்
திருப்பதியில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிர்ச்சித் தகவல்
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில், இந்துக்களின் உலகப் பிரசித்தி பெற்ற புனிதக் கோவிலாகத் திகழ்கிறது. இந்தியாவிலிருந்தும், வெளிநாட்டி லிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டுச் செல்கிறார்கள்.
இந்த நிலையில், திருமலையில் விபசார அழகிகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு இயக்குநர் ஆர்.வி.சந்திரவதன் வெளியிட்ட தகவல் பக்தர்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி சந்திரவதன் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
25 செக்ஸ் மய்யங்கள்
திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேற்கண்டவாறு சந்திரவதன் கூறினார்.
திருப்பதி நகரில் மட்டும் 3 ஆயிரத்து 500 அழகிகள் விபசாரத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலைபார்க்கும் கட்டிடத் தொழிலாளர்கள் தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதிகாரிகள் விளக்கம்
எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி வெளியிட்ட தகவலும் அது தொடர்பான புள்ளி விவரங்களும் ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் நேற்று பரபரப்புச் செய்தியாக ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்து வெளியிட்டன. இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். மனம் குமுறிய அவர்களது கேள்விக் கணைகள் திருப்பதி தேவஸ்தானத்தை நோக்கிப் பாய்ந்தன.
எனவே, இதுபற்றி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான நிருவாக அதிகாரி ரமணாச்சாரியும், தகவலை வெளியிட்ட எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அவர்கள் இருவரும் செய்தி நிறுவனங்கள், இந்தத் தகவல்களை மிகைப்படுத்தி வெளியிட்டு இருப்பதாகக் குற்றம் சாற்றினார்கள்.
கட்சிகள் கண்டனம்
இதற்கிடையே, ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனுக்கு ஆந்திர மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்குக் காரணம் எய்ட்ஸ் தடுப்பு இயக்குநர் சந்திரவதன்தான். இந்தத் தகவல் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்-படுத்துவதாக அமையும் என்பதால், புள்ளி விவரங்களை முழுமையாகச் சரிபார்த்த பின்பே அவர் தகவல்களைத் தெரிவித்து இருக்க வேண்டும்’ என்று இந்தக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
– ‘தினத்தந்தி’ – 21.6.2008 – பக்கம் 17
Leave a Reply