முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் விழா
கி.வீரமணி
தஞ்சை மாவட்டம் குடந்தையில் சுற்றுப் பயணத்தின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் 7.2.1997 அன்று கலந்துகொண்டேன். வழிநெடுகிலும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவாக கல்வெட்டு திறப்பும், கொடியேற்ற நிகழ்ச்சியும், கடவுள் மறுப்புக் கல்வெட்டுகள் திறப்பு விழாவையும் செய்து வைத்தேன். பெருமண்டி என்னும் பகுதியில் குடந்தை நகர தோழர்கள், மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் டி.மாரிமுத்து, பார்வதி, எம்.தங்கவேல் ஆகியோரது நினைவாக மீனாட்சி தங்கவேல் அவர்கள் ஏற்பாடு செய்து உருவாக்கிய கல்வெட்டினைத் திறந்து வைத்தேன். அதனைத் தொடர்ந்து மேலக் காவேரி செக்கடித் தெருவில் இராசேஸ்வரி நாகராசன் அவர்களால் கட்டப்பட்டிருந்த தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கல்வெட்டினையும், சக்கரபாணி கீழ சன்னதியில் மாவட்ட மகளிரணி தலைவர் சரசு பழனி அவர்களின் கணவர் பழனியின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவுக் கொடிக் கம்பத்தையும், சுயமரியாதைச் சுடரொளி சி.மாரிமுத்து அவர்களது நினைவாக மா.பாலு, ஆர்.அன்பாளன், தெ.ஜெயராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த கல்வெட்டினையும், குடந்தை நகர முன்னாள் தி.க. தலைவர் மறைந்த சி.தெட்சிணாமூர்த்தி அவர்களது நினைவுக் கல்வெட்டினையும், தாராசுரத்தில் ப.ராஜமாணிக்கம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுயமரியாதை வீரர் ஜி.என்.சாமி அவர்களது நினைவுக் கல்வெட்டினையும், தொடர்ச்சியாக கும்பகோணம் நகரமே பெரும் எழுச்சிக்குள்ளாகும் வகையில் திறந்து வைத்து உரையாற்றினேன். அங்கங்கே கழகத் தோழர்களின் உற்சாக வரவேற்பு மனமகிழச் செய்தது. நகரமெங்கும் கழகக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
முன்னதாக சோழன் போக்குவரத்துக் கழகம் முன் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி இளைஞரணித் தலைவர் தி.மில்லர் புறப்பட்டது. பெரியார் மாளிகையின் முன்புறத்திலிருந்து பேரணியைப் பார்வையிட்டேன். அதனைத் தொடர்ந்து பெரியார் மாளிகையில் சில பகுதிகளை இடித்து மிகச் சிறப்பான அளவுக்கு பல அங்காடிகளைக் கொண்ட புதிய கட்டட நிறுவனங்களைத் திறந்து வைத்தேன். அதில், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் ஞாபகார்த்த வாசக சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாசக சாலையின் அவசியத்தைக் குறித்து உரையாற்றினேன். பின்னர் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். கும்பகோணம் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகப் பொறுப்பாளர்களைப் பாராட்டி சிறப்புரையாற்றினேன்.
செங்கல்பட்டு சின்னம்மன் கோயில் தெரு பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் மணமக்கள் பூ.சுந்தரம்_பா.ஆனந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று 9.2.1997 அன்று நடத்திவைத்தேன். மணமக்கள் இருவரும் முழுமையான சுயமரியாதைத் திருமண முறையில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியைக் கூறச் செய்து, வந்திருந்தவரின் கைத்தட்டலுக்குமிடையே நடத்தி வைத்து சிறப்புரையாற்றினேன். விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் வகையில் தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் அனுப்பிய மருந்துகள், பொருள்கள் சரிவர அவர்களிடம் போய்ச் சேர்கிறதா என்பதை முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்திக்கூறி தெரியப்படுத்த வேண்டும் என்று 11.2.1997 அன்று விடுதலையில் அறிக்கை வாயிலாக வேண்டுகோளாகக் கேட்டுக் கொண்டோம். அதில், தி.மு.க. சார்பில் அதன் தலைவர் கலைஞர் ரூபாய் 25 லட்சத்தை மருந்துகளுக்காக மற்ற உதவிக்காகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகத் தந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் நண்பர் வை.கோபால்சாமி அவர்களும் அதேபோல மருந்து மற்றும் நிதி உதவிகளை அறிவித்து அனுப்பினார். ஆனால், என்ன நடந்தது? இலங்கை அதிபர் சந்திரிகா அரசு அத்தொகை _ உதவிகளை ஈழத் தமிழருக்கு கிட்டும்படிச் செய்ததா? இல்லை! இல்லவே இல்லை!! இது, உதவியவர்கள் முதல் உலகோர் வரை அனைவரும் அறிந்த செய்தியே! இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டவட்டமான நிலை எடுத்து, அங்குள்ள தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசினை செயல்பட வைக்க அழுத்தம் தரும் வகையில் செயல்பட வேண்டும். ஈழத் தமிழர்களை அனாதைகளாக்கிவிடாமல் நாம் உற்றுழி உதவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மனிதநேய அடிப்படையில் முதல்வருக்கு இவ்வேண்டு கோளை வைக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டோம்.
வடஆர்க்காடு மாவட்ட முன்னாள் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்-தொண்டருமான (ஆம்பூர்) வடசேரி து.ஜெகதீசன் அவர்கள் 11.2.1997 அன்று திடீரென்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து வேதனையால் தாக்-குண்டு துயரத் தீயில் தள்ளப்-பட்டேன்.
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களாலும், அன்னை மணியம்மை-யாராலும் மிகவும் மதிக்கப்-பட்டவரான அவரது பணி மிகவும் சிறப்பான தொண்டாகும். அவரது குடும்பமே இயக்கக் குடும்பம் ஆகும்.
ஆம்பூர் வடசேரியில் அவர், அம்மா அவர்கள் காலத்தில் மிகச் சிறப்பான முறையில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து நடத்தியவர்!
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது சென்னை _ பெரியார் திடலில் அவர் குடும்பத்துடன் குடியிருந்தார்; உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றதனால், பிழைத்து மறுபடியும் பழையபடி பணியாற்றத் தொடங்கினார்!
காலஞ்சென்ற ஆம்பூர் தோழர் மணிவாசகம் அவர்களும், நண்பர் ஜெகதீசன் அவர்களும் ‘இரட்டையர்களாக’ எப்போதும் இருப்பார்கள். செயல்பட்டார்கள். 1973இல் அய்யா நடத்திய மாநாட்டில் நன்கொடை வசூலித்து அவர்கள் தந்ததை அய்யாவே பாராட்டி எழுதியுள்ளார்கள்!
அவரது துணைவியார் திருமதி மீரா ஜெகதீசன், மகன்கள் துரைசாமி, வீரமணி, மகள்கள் _ சித்ரா, சுமதி, மருமகன் மற்றும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் நாம் எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை!
இயக்கத்தில் கட்டுப்பாடு காக்கப்பட வேண்டும்; துரோகம் தலை தூக்கவே கூடாது என்பதில் கருஞ்சட்டை இராணுவ வீரனாக இருந்து கடைசிவரை பணிபுரிந்தவர்.
குடும்பத்திற்கு மட்டுமல்ல; இயக்கத்திற்கும் அவரது மறைவு பேரிழப்பாகும். அவருக்கு நமது வீர வணக்கம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என அறிக்கை வெளியிட்டு ஆற்றுப்படுத்திக் கொண்டோம்.
புதுக்கோட்டையில் கல்லாக்கோட்டை ஜமீன் திரு.இராமச்சந்திர துரை அவர்கள் 13.2.1997 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
தந்தை பெரியார் அவர்களிடமும், நமது இயக்கத்திடமும் மிகுந்த பற்றும், மரியாதையும் கொண்ட பெருந்தகையாளர் அவர். புதுக்கோட்டை திராவிடர் கழகத்தில் ஒரு காலத்தில் மிகச் சிறப்பாகத் தொண்டு செய்த சுயமரியாதை வீரர்.
1996 செப்டம்பரில் புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டிற்குப் பின் நேரில் நம்மைச் சந்தித்து மிகுந்த மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்து, இயக்கம் இவ்வளவு வலிமையோடு இளைஞர்களைக் கொண்டதாக இப்போது திகழ்வது சிறப்பானது! எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது என்று கூறினார்.
கருப்புச் சட்டை அணிந்து பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்ட அவர்கள், பிறகு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து அரசியலுக்குச் சென்ற போதிலும் கூட, இறுதிவரை ஒரு சுயமரியாதை உணர்வுள்ளவராகவே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!
புதுக்கோட்டை அரசர் அவர்கள் மறைவுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் அந்தக் குடும்பத்து உறவின் முறையினரான இவரது இழப்பு, புதுக்கோட்டைக்கு மட்டுமல்ல; சுயமரியாதை இயக்கத்திற்கும்கூட மிகப் பெரும் இழப்பு ஆகும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்ப உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
தமிழ்நாட்டிற்குப் புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநர் மேதகு பாத்திமா பீவி அவர்களை 12.2.1997 அன்று கழகத்தின் சார்பில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தேன். ஆளுநருக்குப் பொன்னாடை போர்த்தி, தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய ஆங்கில நூல்களையும், கழக இதழ்களையும் வழங்கினேன். அப்போது அவருடன் பேசுகையில், பெண்கள் எல்லாத் துறைகளிலும், நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக வரவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்து _ விருப்பம்! அந்த முறையில் தாங்கள் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருப்பது கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றேன். உடனே, ஆளுநர், ‘Periyar The Visionary’ (தொலைநோக்காளர்) என்று பெருமையுடன் பதில் கூறினார். மேலும், ஓர் ஆணைப் படிக்க வைத்தால், அது அவருக்கு மட்டுமே பயன்; ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் – அந்தக் குடும்பத்திற்கே பயன் என்று பெரியார் கூறியுள்ள கருத்தைக் குறிப்பிட்டு மகிழ்ந்தார். தந்தை பெரியாருடன் எனது சமூகப் பயணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு வியந்தார். ஆளுநர் மிகவும் சரளமாக தமிழில் உரையாடியது வியப்பில் ஆழ்த்தியது. இந்த சந்திப்பின்போது கழகப் பொறுப்பாளர்கள், கோ.சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் ‘விடுதலை’ துணை மேலாளர் ப.சீதாராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
அறந்தாங்கி நகர தி.க. தலைவர் கு.கண்ணுச்சாமி அவர்களின் தம்பி மகன் கு.அப்பாவு _ அ.கற்பகம் ஆகியோரின் செல்வி அ.சாந்திக்கும், மன்னார்குடி ப.இராதா கிருட்டினன் _ அனுசுயா ஆகியோரின் செல்வன் இரா.முரளிதரனுக்கும் 16.2.1997 அன்று வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று, மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன். அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையில் மண்டபத்தில் நிறைந்திருந்த பெண்கள் உன்னிப்பாக உரையினைக் கேட்டு கைதட்டி, வரவேற்று உற்சாகப்படுத்தினர்.
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் முதலாமாண்டு நிறைவு விழா 17.2.1997 அன்று துவங்கி மூன்று நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியினை தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அருமைச் சகோதரர் திரு.என்.வி.என்.சோமு அவர்கள் மின்சார குத்துவிளக்கை ஏற்றிவைத்து துவக்கி வைத்தார். விழாவில் ஏராளமான தமிழ் அறிஞர்களும், இசைக்கலைஞர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக இசைப் பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதர் அவர்களின் உருவப் படத்தை செந்தமிழ்ச் சொல்லாய்வறிஞர் முனைவர் இரா.மதிவாணன் திறந்து வைத்து ஆய்வுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியை வழங்கிய டி.கே.எஸ்.கலைவாணன் அவர்களுக்கு முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ‘தமிழிசை ஏந்தல்’ என்ற பட்டத்தையும், விருதையும் வழங்கி, சால்வை போர்த்தி கவுரவித்தோம். விழாவில் சிறப்புரையாற்றுகையில், “1944இல் ‘குடிஅரசு’ (19.2.1994) இதழில், “தமிழிசையும் கிழக்கும் மேற்கும்’’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை முக்கியமான தொன்று. தமிழ்நாடும் தமிழ் மொழியும் தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன் அவன் எப்படிப் பட்டவனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். அதைத்தான் இன்றும் நாம் கேட்கிறோம். வீழ்ந்து கிடக்கும் இனம் எழுந்து நிற்க இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் பயன்பட வேண்டும். தமிழ் இசைக் கலைஞர்கள் வாழ்வியல் சிந்தனைகளைப் பாடல்களாகப் பாட வேண்டும். இத்துறையில் திராவிடர் கழகமும், பெரியார் திடலும் உங்களுக்குத் துணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்’’ என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
மறுநாள், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர் உருவப் படத்தை முத்தமிழ்ச் செம்மல் முனைவர் புரட்சிதாசன் திறந்து வைத்து உரையாற்றினார். இதற்கடுத்து, “தமிழிசைத் தென்பொழில்’’ பண்டுவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் _ தந்தை பெரியார், எம்.எம்.தண்டபாணி தேசிகர் ஆகியோர்களைப் பற்றியும், வாழ்வியல் பாடல்களையும் மிகச் சிறப்பாகப் பாடி பார்வையாளர்களை தன்வயப்படுத்தினார். மன்றத்தின் சார்பில் சிவ.சிதம்பரம் அவர்களுக்குச் சால்வை போர்த்தி, இசைக் குழுவினர்க்குப் புத்தாடை அணிவித்துப் பாராட்டினோம். அதனைத் தொடர்ந்து, “கருணாமிர்த சாகரம்’’ என்னும் இசைத் தமிழ் நூலைப் பதிப்பித்து வெளியிட்ட கோ.இளவழகன் அவர்களைப் பாராட்டி, சால்வை அணிவித்து பெருமைப்படுத்தினோம்.
அன்றைய தினம் உரையாற்றுகையில், “வைதீகத்திலே, பக்தியிலே, மதத்திலே பாடல்களைச் சுவைத்துத்தான் நம் மக்களுக்குப் பழக்கம். அந்த நிலையை இன்று பாடிய சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் அதற்கப்பாற்பட்டு வாழ்வியலைப் பற்றியும், தன்னம்பிக்கையைப் பற்றியும், வாழ்வியல் முன்னேற்றத்தைப் பற்றியும், தந்தை பெரியாரைப் பற்றியும் தன்மானத்தைப் பற்றியும் பாடியிருப்பது நம்மை ஆழமாகச் சுவைத்துக் கேட்கச் செய்துள்ளது. நாட்டிலே இசைத்துறை, கலைத்துறை என்பது மதச் சார்போடு ஆக்கப்பட்ட காரணத்தினாலேயே அதனுடைய வளர்ச்சி வளர வேண்டிய அளவுக்கு வளராமல் தேக்கத்திலேயே இருக்கிறது. தமிழ் இசையை உலகமெங்கும் கொண்டு செல்ல இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் மறைந்த நேரத்திலே அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்தோம். இயல், இசை, நாடக மன்ற கல்லூரிக்கு இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களுடைய பெயர் சூட்டப்பட வேண்டும் என்பதே அது. தமிழ் இசையை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி நாடகக் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழ் நாடகத் துறையில் அரிய சாதனைகளைச் செய்து கொண்டிருக்கும் சாதனையாளர்கள் பாராட்டப்பட்டனர். நிகழ்வின் துவக்கமாக தமிழ் நாடகத் தந்தை சங்கரதாசு சாமிகளின் உருவப் படத்தை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் இராமர் இளங்கோ திறந்து வைத்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் செயராமன் தம்பி மகன் இசைச் செல்வன் எஸ்.மீனாட்சிசுந்தரம் குழுவினர் பல பாடல்களைப் பாடி கூடியிருந்தவர்களை ரசிக்கச் செய்தனர். வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினோம். எஸ்.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு, “தமிழிசைக் கொண்டல்’’ என்னும் விருதையும், பேராசிரியர் மு.செ.அறிவரசன் அவர்களுக்கு “தமிழிசைப் பாவாணர்’’ என்னும் விருதையும் கழகத்தின் சார்பில் வழங்கிப் பெருமைப்படுத்தினோம்.
விழாவிற்கு எதிர்பாராதவிதமாக வந்திருந்த பழ.நெடுமாறன் அவர்கள் உரையாற்றுகையில், “சங்கரதாசுசாமி அவர்களோடு அவருடைய குடும்பத்திற்கு உள்ள கொள்கைத் தொடர்பினை’’ எடுத்துக் கூறினார். இறுதியாக நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில், “ஒரு குறிப்பிட்ட மதம், சடங்கு, சாஸ்திரம் இவைகளைப் பற்றி பாடிக் கொண்டிருந்தால் மற்ற மதக்துக்காரர்களோ, மதத்திற்கு அப்பாற்பட்டவர்களோ அதைச் சுவைப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அதை வெறுப்போடு பார்க்கக் கூடிய சூழல்தான் ஏற்படும். ஆனால், கடந்த மூன்று நாள்களாக இங்கு நடைபெற்ற இயல், இசை, நாடக நிகழ்வுகளைப் பார்க்கையில் தமிழிசையின் பெருமையை இளைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய வடிவில் படைத்து, வந்திருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் என்பது வெறும் கச்சேரிக்காகவும் அல்லது பாடல்களைக் கேட்பதற்கும் அல்லது இளைப்பாறுவதற்கும் மட்டுமே இருக்கக் கூடிய அமைப்பு அல்ல. மிக ஆழமான சிந்தனை வயப்பட்டு ஒரு வரலாற்றுப் பெருமையைத் துவக்குவதற்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்’’ என்பன போன்ற பல கருத்துகளைக் கூறினேன். கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் அ.இறையன் ஆகியோர் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப் பாளர்களாக இருந்து செயல்பட்டனர். கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பாகப் பணியாற்றி விழாவினை சிறக்கச் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனந்தபுரத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை திறப்பு விழா 20.2.1997 அன்று சிறப்பாக நடைபெற்றது. அனந்தபுரம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் த.மு.ர என்ற முத்துரதி (சார்பதிவாளர்), குருசாமி முதலிய தோழர்களின் உழைப்பின் பயனாய் அனந்தபுரம் காவல் நிலையம் அருகில் கடவுளர் பற்றிய மூடநம்பிக்கைகளையும், ஆபாசங்களையும் விளக்குகின்ற பல கருத்துப் படங்கள் விளக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் கூட்டமாக நின்று பார்த்து தெளிவு பெற்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7:00 மணியளவில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறிவு ஆசான் சிலையை அதிர்வேட்டுகளும், வாழ்த்தொலிகளும் ஒலிக்க திறந்துவைத்தேன். இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த கெடார் நடராசன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிவித்து பாராட்டிப் பெருமைப்படுத்தினேன். விழாவில் சிறப்புரையாற்றுகையில் பெரியாரின் சமூகநீதிக் கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
திராவிடர் கழக கவிஞர் கலி.பூங்குன்றன் _ ஆசிரியை சி.வெற்றிச்செல்வி ஆகியோரின் மகள் க.அன்புமதி பி.ஈ., அவர்களுக்கும் தருமபுரி மாவட்டம் பண்டஅள்ளி திருவாளர்கள் முனியாசெட்டி_குப்பம்மாள் ஆகியோரின் மகன் மு.குணசேகரன் பி.ஏ., எல்.எல்.பி அவர்களுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 23.2.1997 அன்று மயிலாடுதுறை ஏ.வி.சி. புதிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமையேற்று நடத்தினேன். மாநாடுபோல் பெருமக்கள் வருகை தந்த அவ்விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி தலைமை உரையாற்றிய பின், மணமக்களை உறுதிமொழியினை கூறச் செய்து வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன்.
விழாவில் உரையாற்றுகையில், “இங்கே பலதரப்பட்ட நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே, பூங்குன்றனுடைய ஆற்றல், தொண்டு இவற்றால் இந்த இயக்கத்துக்கு உள்ள பெருமை, கொள்கைப் பிடிப்புகளை எண்ணி எண்ணிப் பூரித்து மகிழ்ச்சி அடைகிறேன். மணமகள் அன்புமதியை நினைக்கும்போது, சிறு குழந்தையாக இருக்கும்போதே எங்களிடம் விவாதம் செய்வார். பெரிய வேலை பார்ப்பவர்தான் மணமகனாக இருக்க வேண்டுமென்று கூறாமல், கழகத்தவராக இருக்க வேண்டும் என்று அன்புமதி கூறியதானது, மணமகளின் கொள்கைப் பற்றையும், வளர்க்கப்பட்ட விதத்தையும்தான் காட்டுகிறது. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.
கவிஞர் கலி.பூங்குன்றன் குடும்பத்தைப் பொறுத்தவரை சிறு குழந்தைகள் முதல் கருப்புச் சட்டை அணிந்து வளர்க்கப்-படுபவர்கள். அவர் தந்தையார் தமிழரசுக் கழகத்திலே இருந்து, போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைச்கெல்லாம் சென்றவர். அதன் பின் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ‘விடுதலை’யை விடாமல் படிக்கும் அளவுக்குக் கொள்கையின்பால் அவர் தந்தை மாற்றப்பட்டார். அதே மாதிரிதான் குணசேகரன். அவர் எங்களது மாணவரணியில் பயிற்சி பெற்றவர். நமக்கு இருக்கும் ஒரே பெருமை நாம் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் நிரந்தரப் பெருமை. எங்களோடு பழகியதால் திறமைகளை வளர்த்துக் கொண்டு, தனக்கு இருக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு ‘தினமணி’ நாளேட்டின் செய்தியாளராக இருக்கிறார். பொதுவாக வெறும் முதுகுடன் இருப்பவர்கள் யாராவது செய்தியாளராக இருக்கிறார்கள் என்றால் இல்லை. முதுகைத் தடவிப் பார்த்தால் அதில் ஏதாவது நூல் இருந்தால்தான் செய்தியாளர்களாக இருக்க முடியும். இப்போதுதான் சிலர் வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் தகுதி இல்லை என்று வைத்திருந்தது போக _ இப்போது நமது இளைஞர்கள் எங்கு சென்றார்கள் என்றாலும் தகுதி உண்டு என்று முத்திரை பதிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த ஒருவர் மு.குணசேகரன்.
ஜாதி ஒழிப்பை நாங்கள் பேசக் கூடியவர்கள் மட்டுமல்ல, செய்யக் கூடியவர்கள் என்பதற்கு அடையாளம்தான் இந்தத் திருமணம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரே குடும்பத்தவர்கள்.
எங்கள் வீட்டுத் திருமணமாக இருந்தாலும் அங்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கக் கூடியவர் நண்பர் கலி.பூங்குன்றன்தான். தந்தை பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்கிறது என்பது யாருடைய தனிப்பட்ட சிறப்பும் அல்ல. ஒரு கூட்டுக் குடும்பம் போல இங்கே இருக்கின்ற அத்தனைபேரும் ஒத்துழைத்த காரணத்தால் இது வளர்ந்து கொண்டிருக்கிறது. இதில் அடுத்த தலைமுறை, கொள்கைத் தலைமுறை உருவாக வேண்டும் என்பதுதான் அடையாளம் _ அதன் உதாரணமே இந்த மணவிழா!’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். நிறைவாக மணமகன் மு.குணசேகரன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
இத்திருமண நிகழ்வில் கழகத்தவரின் கொள்கை உறுதி பற்றி உரையாற்றியதை குறிப்பிட்டதைப் போலவே, நமது இயக்கத்தின் கொள்கை உறுதி பற்றியும், குறிப்பிட விரும்புகிறேன்.
1967 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து, அண்ணா பெரியாரைச் சந்தித்து, அந்த ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கியது முதற்கொண்டு தி.க.விற்கும் தி.மு.க.விற்கும் இடையில் பல ஆண்டுகளாய் நிலவிய கருத்து மோதல்களும், எதிர் நிலைப்பாடுகளும் அறவே முடிவுக்கு வந்தன. அது முதல் இரட்டைக் குழல் துப்பாக்கியான இந்த இரு இயக்கங்களுக்கும் இடையே தாய் பிள்ளை உறவே நெருக்கமாக நீடித்தது.
எம்.ஜி.ஆர் பிரிந்து அ.தி.மு.கவை தொடங்கிய பின்னும் அவர் ஆட்சிக்கு வந்து, திராவிடர் கழகத்திற்கு பல நன்மைகளைச் செய்த நிலையிலும், திராவிடர் கழகம் தி.மு.கவையே தொடர்ந்து ஆதரித்தது.
எம்.ஜி.ஆர் இறப்புக்குப் பின் செல்வி ஜெயலலிதா முதலமைச்சரான போது, 69% இடஒதுக்கீட்டுக்குச் சட்ட அங்கீகாரம் பெற வேண்டும் என்ற கட்டாயச் சூழலில், செல்வி ஜெயலலிதாவுக்கு இதன் அவசியத்தை விளக்கி அவரை சம்மதிக்கச் செய்தோம்.
பார்ப்பன முதலமைச்சர், பார்ப்பன பிரதமர், பார்ப்பன குடியரசுத் தலைவர் என்று இருந்த சூழலில் அரசியல் சாசனத்தின் 9ஆம் அட்டவணையில் சேர்த்தது என்பது சமூகநீதி வரலாற்றில் சாதனை மட்டுமல்ல, வியப்புக்குரியதும் ஆகும்.
இச்சாதனை படைக்க பெருமளவிற்குத் துணை நின்று செயல்பட்ட செல்வி ஜெயலலிதாவிற்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் தந்து பாராட்டினோம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களை வேலை வாங்கி சமூக நலனுக்கு உரியதைச் செய்ய வைப்பது தான் செயல்முறை. இதில் அரசியல் விருப்பு வெறுப்புகளைப் பார்ப்பதில்லை.
ஆனால், நமது இந்த அணுகுமுறையால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கசப்பிற்கும் வெறுப்பிற்கும் நாம் ஆளானதுண்டு அப்படிப்பட்ட நிகழ்வுகள் 1991 முதல் தொடங்கி 1997 வரை அதிகம் நடந்தன.
ஆம். செல்வி ஜெயலலிதா அவர்கள் திராவிடர் கழகத்தின் மக்கள் நலப் பணிகளை முழுமையாய் அறிந்து மகிழ்ந்து, அதன் வெளிப்பாடாய் இயக்க வளர்ச்சிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடையாக அளித்த போதே நமது இயக்கம் விமர்சனத்திற்கு உள்ளானது. தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்தன.
அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிதி இது. இதனைப் பிரச்சினையாக்கத் தேவையில்லை என விளக்கம் அளித்து, நம் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருந்தோம். விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மக்களுக்குத் தொண்டு செய்வதிலும், சமூகநீதி காப்பதிலும் உறுதியாய் நின்று அதன் வழியில் செயல்பட்டோம்.
1996ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இக்காரணங்களினால் தி.மு.க.வுக்கும் நமக்கும் கருத்து மோதல்கள் தொடங்கி, 1997 ஆண்டின் துவக்கமான இக்காலக் கட்டத்தில் அதிகமாயிற்று. அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்ததால் ஆட்சி சார்ந்த நெருக்கடிகளும், குறிப்பாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக அமைவிடம் சார்ந்த நெருக்குதல்களும் தரப்பட்டன.
ஆட்சிக்கு யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்போம் என்பதைப் பொய்யாக்குவதாயும்; நாம் கொண்ட கொள்கையில் எத்தனை இடர் வந்தாலும், இழப்பு வந்தாலும் உறுதியாய் இருப்போம்; ஒருவரை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் கொள்கை மற்றும் இனநலன் சார்ந்து மட்டுமே என்பதை உலகுக்குக் காட்டுவதாயும், தி.மு.க உடனான உறவும், எதிர்ப்பும், அ.தி.மு.கவுக்கு அளித்த ஆதரவும் தெளிவுபடுத்தின.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களே, ‘திராவிடர் கழகத் தலைவர் எனது இளவல் கி.வீரமணி அவர்கள் என்றைக்கும் கொண்ட கொள்கையில் எத்தனை இடர் இழப்பு வந்தாலும் உறுதியாய் நிற்பவர்’ என்று நற்சான்று வழங்கவும் இதுவே காரணம்.
1999இல் பி.ஜே.பியோடு தி.மு.க. கூட்டணி சேர்ந்தபோது நாம் காட்டிய தீவிர எதிர்ப்பும் 2004இல் தி.மு.க1 பி.ஜே.பி அணியிலிருந்து விலகிய போது நாம் தி.மு.கவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியதும் கலைஞரை இவ்வாறு சொல்ல வைத்தன. அதன் விவரங்களை பின்னால் அக்கால இயக்க வரலாற்றை எழுதும் போது எடுத்துக் கூறுவேன்.
(நினைவுகள் நீளும்…)