கங்கையின் சுத்தம் இதுதான்!
மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங்களால் அந்தப் பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற்றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றன.
இதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, “எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாகத் தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதியில்லாத காரணத்தால் ஆள் அரவமற்ற பகுதிகளில் கங்கைக் கரையில் விட்டுவிடுவார்கள். இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு. ஆனால், திடீரென இவ்வளவு பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இதுகுறித்து வாரணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறியதாவது, “கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானாகவே மிதந்து சென்று விடும். ஆனால், தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.
தற்போது மகர சங்ராந்தி விழா இன்றிலிருந்து துவங்குகிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாகக் கருதுகின்றனர். ஆனால், அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.
வாரணாசி சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது: “கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார். அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகரணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.
ஒன்றிய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசைக் கண்டித்து விட்டது. இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர, பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக்கில் எங்கே கொடுப்பார்கள்?’’ என்று கூறியுள்ளார்.
சொல்லுவது ‘ஆனந்தவிகடன்’
கேள்வி: மகாபாரதத்தில் கிருஷ்ணன் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன் உள்பட கவுரவர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குருசேத்திர போர் வரை செல்லவிட்டார்?
பதில்: முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதிநிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்துரைக்க மட்டுமே கிருஷ்ணனால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப் பிற்பட்ட காலத்தில்தான். பிறகு கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாட்டை முதலில் துவக்கி வைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!
(‘ஆனந்த விகடன்’ 31.10.2007)
அரசன் கடவுளானது எப்படி? யார் அப்படி ஆக்கினார்கள்? மனிதன்தானே!
மனிதன்தான் கடவுளைக் கற்பித்தானே தவிர, கடவுள் மனிதனைப் படைக்கவில்லை என்பது இப்பொழுது புரிகிறதா?