முனைவர் வா.நேரு
“பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டு விட்டால், சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பிறகு தங்கள் கணவன்மார்களைத் தாங்களே தேர்ந்-தெடுக்கவும், அல்லது பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகிவிடும்’’ என்றார் தந்தை பெரியார்.
“பெண்களுக்குப் படிப்பு கற்பிக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் இருந்தால் முதலில் பெண் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும்’’ என்ற தந்தை பெரியாரின் அறிவுரை தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் மனதில் ஆழமாக ஊடுருவிய காரணத்தால், இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்விப் படிப்பு சதவிகிதம் தமிழ்நாட்டில் மிக அதிகம் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இன்றைக்கு கிராமம் தோறும் படித்த பெண்கள், பட்டம், முதுகலைப் பட்டம், பொறியியல் பட்டம் எனப் படித்த பெண்கள் இருக்கிறார்கள். மிகக் குறைந்த படிப்பு படித்து, உடல் உழைப்பில் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில் கற்பித்து, அவர்களை சம்பாதிக்கும் சக்தி உடையவர்களாக ஆக்கும் அருமையான திட்டம்தான் மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்.
இன்றைக்கு இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் பரவியிருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதனைப் போல இந்திய ஒன்றிய அரசும் மகளிர் சுயஉதவிக் குழு பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், ஒரு 15 ஆண்டுகளுக்கு முன் 2006ஆம் ஆண்டிலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து, ஒரு வெற்றிகரமான திட்டமாக அதனை நடத்திக் காட்டியவர் இன்றைய முதலமைச்சர், அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார்.
அன்றைக்கே, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கான வழிகளில் ஒன்று, மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்பதனை அடையாளம் கண்டு கொண்டார். அதனால்தான் சமூக நலத்துறையில், பத்தோடு பதினொன்றாக இருந்த, மகளிர் சுயஉதவிக் குழு நிருவாகத்தை, தன்னுடைய உள்ளாட்சித் துறைக்குக் கொண்டு வந்து, மகளிர் சுயஉதவிக்குழு நிருவாகத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்.
“பெண்ணே, வீட்டிற்குள் நீ முடக்கப் படுகிறாய். விடுதலை பெற வெளியில் வா’’ என்றார் தந்தை பெரியார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் _ வீட்டிற்குள் இருக்கும் பெண்கள் சமூகத்துடன் கலப்பதற்கும், அவர்களின் பங்களிப்பை சமூகத்திற்கு அளிப்பதற்கும் ஓர் அருமையான வாய்ப்பைத் தந்த திட்டம். அதனை நன்றாக அறிந்த இன்றைய முதலமைச்சர் அவர்கள் அன்று, 2006இ-ல் ஒரு இலட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களை உண்டாக்கினார்.
ஆண்கள் எளிமையாக, எங்கோ சென்று தங்கி தொழில் நுணுக்கங்களை, வழி முறைகளைக் கற்றுக் கொள்கின்றனர். அனுபவங்களைப் பெறுகின்றனர். ஆனால், தொழில் நுணுக்கங்களை, அனுபவங்களைப் பெற்ற பெண்கள் தங்கள் தொழில் நுணுக்கங்களை, அனுபவங்களை மற்ற பெண்களுக்கு அள்ளிக் கொடுக்கும் ஓர் அற்புதத் திட்டமாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைந்தன.
பெண்ணை அடிமையாக்க, ஆணுக்கு கிடைத்த மிகப் பெரிய வசதி பொருளாதாரம். எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன மனுதர்மம், எதைக் கொடுத்தாலும் பெண்ணுக்கு சொத்துரிமை கொடுத்து விடாதே, கல்வியைக் கொடுத்து விடாதே என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியது. பொருளாதார அடிமையாக இருந்த பெண்கள், பொருளாதாரச் சுதந்திரம் பெறுவதற்கு வாய்ப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைந்தன. கோடிக் கணக்கான பணம் சுழற்சி முறையில் மகளிரிடம் புழங்கியது _ புழங்குகிறது.
சமூக அமைதிக்கான அடித்தளம் சுய உதவிக் குழுக்கள். சமூக அமைதியின்மை ஏற்பட அடிப்படைக் காரணம் வேலையின்மை. சில ஆண்டுகளுக்கு முன்னால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஜாதிக் கலவரம் பற்றி கொடுத்த அறிக்கை ஒன்று, சமூக அமைதியின்மைக்கும், ஜாதி மோதலுக்கும் காரணம் வேலை யின்மையே என்று குறிப்பிட்டது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் சுய உதவிக் குழுக்கள் போன்றவை சமூக அமைதிக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். நகரங்களில், கிராமங்களில் சோம்பேறிகள் உருவாகாமல் தடுப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.
“ஜாதி என்னும் தாழ்ந்த படி,
நமக்கெல்லாம் தள்ளுபடி,
சேதி தெரிந்துபடி, இல்லையேல்
தீமை வந்துடுமே மறுபடி’’
என்றார் புரட்சிக்கவிஞர். தமிழ் நாட்டுக்குள் ஊடுருவும் இந்துத்துவா அமைப்புகள், ஜாதித் தீயை எரிய வைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்களின் பசப்புச் சொற்களில் மயங்காமல் இருக்க சுயஉதவிக் குழுக்கள் பெரும் வாய்ப்பாகும்.
“பெண்களே, நீங்கள் என்ன நகை மாட்டும் ஸ்டாண்டுகளா?’’ என்றார் தந்தை பெரியார். வீட்டிற்குள்ளேயே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள், பெண்களைச் சரிப்படுத்துவதற்காகச் செய்யும் செயல் நகை வாங்கிக் கொடுத்தல். பெண்களை ஏமாற்றுவதற்கு நகையை, அணிகலன்களை வாங்கிக் கொடுத்தால் போதும் என்பதே பெரும்பாலான ஆண்களின் கருத்தாக இருக்கிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களில், மற்ற பெண்களோடு பழகும் வாய்ப்பு ஏற்படுகிறபோது நகை, அணிகலன் மோகம் எல்லாம் அழிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தொலைக்காட்சித் தொடர்கள் என்னும் பெயரில், மிகப் பெரிய பண்பாட்டுப் படையெடுப்பு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. வடநாட்டு முதலாளிகள் கைகளில் இருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள், பக்தி என்னும் பெயரில் மூடநம்பிக்கைக் குப்பைகளைக் கொட்டுகிறார்கள். காலை முதல் இரவு வரை பேய், பிசாசு, மாந்த்ரீகம், ஜோதிடக் குறைபாடு, பரிகாரம் என அவர்கள் தங்கள் சேனல்களின் வழியாகப் பரப்பும் மூடநம்பிக்கைகளிலிருந்து மீள்வதற்கு இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வழியாக ஏற்படுத்தப்படும் தொழில் வாய்ப்புகள் உதவுகின்றன.
விளக்குப் பூஜைகளுக்கும் விழாக்களுக்கும் திராவிடப் பெண்களை பக்தி எனும் பெயரில் மயக்கி, ஏமாற்றி ஓட்டிச் சென்று இந்து மதப் பட்டியில் அடைக்கும் பார்ப்பனர்கள், பார்ப்பன அமைப்புகளிடமிருந்து நமது பெண்களை விடுவிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. நமது வீட்டுப் பெண்களை, மூடநம்பிக்கை மிகுந்த தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்குவதற்கு பழக்கப்படுத்திவிட்டு, பார்ப்பனர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை பரத நாட்டியம் முதல் பங்குச் சந்தை வரை கற்றுக் கொள்ளவும், பங்கேற்கவும் பழக்கப்படுத்துகின்றனர். இதனை நம் திராவிட இனத்துப் பெண்களிடம் விரிவாக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
2006இ-ல் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஒரு மாபெரும் பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. 2011 -முதல் 2021 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில்; சுய உதவிக் குழுக்களின் நோக்கம் சிதைக்கப் பட்டிருக்கிறது. அதன் உண்மையான புத்தாக்கத்தினை நோக்கிச் செயல்படுத்தும் ஓர் அரசு இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைந்திருப்பது நம்மைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் கொரோனா தொற்று, மகளிர் சுய உதவிக் குழுக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகளால், தொழில்களைத் தொடர்ந்து நடத்த முடியாமல், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிலை உணர்ந்து, கூட்டுறவுக் கடன் 2,756 கோடி ரூபாய் கடன் தொகையை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்க, பாராட்டப்பட வேண்டிய செயலாகும். இதற்கு எதிராக சில முணங்கல்கள் கேட்கின்றன. பல இலட்சம் கோடிக் கடன் தொகை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு _ அம்பானி -அதானி போன்றவர்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட போது முணங்காதவர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட போது முணங்குகிறார்கள். புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.
அரசின் திட்டங்களை தலைநகரம் முதல் தனித்த கிராமங்களுக்கும் விரைவாகவும் எளிதாகவும் எடுத்துச்செல்ல வாய்ப்பான வாய்க்கால்களாக அமைபவை இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களாகும். கிராமம் முதல் தலை நகரம் வரை தனது அமைப்புகளை ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தி, உயிர்ப்பாகத் தனது அமைப்பை தனித்துவமாக வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முடியும்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என்று தமிழ் நாட்டின் பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. 2006இல் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இணைய வழித் தொடர்புகள் இந்த அளவுக்கு இல்லை. இன்றைக்கு முகநூல், வாட்சப் போன்ற பல்வேறு ஊடகங்கள் உள்ளன. இந்த ஊடகங்களைப் பயன்படுத்தி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். சங்கிலித் தொடர் போல கிராமம் முதல் மாவட்டத் தலைநகர் வரை கண்காணிப்பதற்கும், என்ன நிகழ்கிறது, என்ன தேவை என்பதைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்வதற்கு கணினி வழித்தொடர்பு இன்றைக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
இன்னும் அதிக அளவில் பெண்களுக்கு தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க மகளிர் சுய உதவிக்குழு சங்கிலித் தொடர்கள் பயன்பட வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகச் செய்யப்படும் பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு, 2006-லேயே அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சராய் இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்றைக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, கற்பித்தல் போன்ற பணிகளுக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆன்லைன் மூலமாகக் கற்பித்தல் என்பது இன்றைய கொரோனா காலத்தில் எளிதாகி இருக்கிறது. கொரோனோ பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்றிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் இல்லை என்கிற நிலை வருகின்ற நிலையிலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகக் கற்பித்தல் என்னும் பணி நடைபெற வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்கும் வாய்ப்பினை, மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் படித்த பெண்களுக்கு அளிக்க வேண்டும். கிராமங்களில் இருக்கும் படித்த பெண்களுக்கு, கணினி வாங்கவும், இணைய இணைப்பு கிடைக்கவும், ஸ்கைப் போன்ற மென்பொருள் கிடைக்கவும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அவர்களை அடையாளம் கண்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கச் செய்யலாம். அதன் மூலம் அந்தப் பெண்கள் உள்ளூரில், தமிழ்நாட்டில், வெளிநாட்டில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்குப் பாடங்களை நடத்த முடியும். அதன் மூலம் சொத்து சம்பாதிக்கும் வாய்ப்பும் ஏற்படும்.
இதனைப் போல, புதுப்புது வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாடு அடையவும், அதன் மூலம் தமிழ்நாடு பொருளாதாரத் தன்னிறைவு அடையவும் வழி கிடைக்கும். “எல்லார்க்கும் எல்லாம்” என்னும் ‘திராவிட மாடல்’ திட்டங்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்-களால் வியந்து நோக்கப்படுகிறது. விவரித்து எழுதப்படுகிறது. அந்தப் பாதையில் மேலும் மேலும் முன்னேற்றத் திக்கு நோக்கிப் பயணம் செய்ய மகளிர் சுய உதவிக் குழுக்கள் திட்டம் மேலும் மேலும் செழுமைப் படுத்தப்படட்டும்.ஸீ