கவிப்பேரரசு வைரமுத்து
சரித்திர மடியில் தங்கிக் கிடந்த
கருப்பிருள் போக்கிய காஞ்சி விடியலே
அழுகையை உலர்த்திய அண்ணனே உன்றன்
எழுதுகோல் துப்பிய எச்சிலே எங்கள்
தாகங் களுக்குத் தடாக மானது
சோக நெருப்பைச் சுட்டுத் தீய்த்தது
ஆயதோர் காலையில் ஆலய வீதியில்
நாயக னேஉன் நாத்திகம் கேட்க
தெய்வங்க ளெல்லாம் தேர்களில் வந்தன
பொய்தான் தாமெனப் புலம்பிப் போயின
அரிதாய்க் கிடைத்த அமுத சுரபியே
பெரிய சாவுனைப் பிச்சை கொண்டதே
கடற்கரை மணலில் கண்ணா மூச்சி
நடத்து கிறாயே நாங்கள் உன்னை
எப்படித் தொடுவது? எப்படி? நீதான்
உப்பு மணலுள் ஒளிந்துகொண் டாயே
அணையா விளக்கின் அடிவெளிச் சத்தில்
இணையிலாக் காவியம் எழுதுகி றாயா?
முத்தமி ழில்நீ முழங்கிய மொழிகளை
முத்துக் கடலலை மொழிபெயர்க் கின்றதா?
தூயவன் மேனியைச் சுமந்தகல் லறையே
நாயகன் பூமியே நான்கடி இமயமே
அன்னைத் தமிழின் ‘அ’கரம் போனபின்
என்ன கவிதைநான் எழுதப் போகிறேன்?
ஏழு வண்ணம் இருந்தும் வான வில்
வாழு வதற்கு வானமே இல்லையே
குறைந்து விடாமல் கோலம் இருக்க
வரைந்து வைத்த வாசலைக் காணோம்
கல்லறை வாசலே கதவுகள் திறநீ
பல்லவன் மேனியைப் பார்க்கப் போகிறேன்.
ஒருமுறை அன்னவன் உருவம் பார்த்தபின்
குருட னாகவும் கோடிச் சம்மதம்
கண்டதும் அண்ணனின் காலடிப் பூவில்
என்னையே மாலையாய் இடப்போ கின்றேன்.ஸீ
(கவிப் பேரரசு வைரமுத்து தனது 17ஆவது வயதில் அண்ணா நினைவிடத்தைப் பார்த்தபோது எழுதிய கவிதை)