பல பேராசிரியர்களே கணினியைக் கண்டிராத அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர் ஒருவர், கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வந்து கணினியைக் காண விரும்பினார். அவருக்கு வயது 86. படியேற முடியாது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து மாடிக்குத் தூக்கிச் சென்றனர். கணினி பற்றித் தனக்குச் சொல்லப்பட்ட விளக்கங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட அவர், “இந்த அட்டையிலிருந்து தகவல்கள் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?” என்ற கூடுதல் வினா எழுப்பி விளக்கம் பெற்றுக் கொண்டார். நடுவில், தன்னுடன் வந்திருந்தவரிடம் கம்ப்யூட்டருக்குத் தமிழில் என்ன என்று கேட்டார். அவர் பதில் செல்லத் தயங்கியபோது, தனக்கு மிகவும் பிடித்த வசைச் சொல் ஒன்றை பயன்படுத்திவிட்டுச் சொன்னார் அந்தத் தலைவர். “நீ கம்ப்யூட்டரைக் கண்டு பிடித்திருந்தால் தானே அதற்கு பெயர் இருக்கும்“ என்று. தன்னுடைய தள்ளாத வயதில் அந்தப் புதுமையான கருவியைக் காண கிண்டி பொறியியல் கல்லூரிக்கு அன்று வருகை புரிந்தவர், தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி. தமிழரிடையே அறிவியல் மனப்பான்மை வளரவும் தமிழ் மொழி நவீனமடையவும் உரிமையுடன் பல விமர்சனங்களை முன்வைத்த பெரியார், தமிழ் மொழியைக் காக்க உணர்ச்சிமிகு எழுச்சிகள், பரவிக் கொண்டிருந்த காலத்திலும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கி கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தனக்கே உரிய தர்க்க நியாய கேள்விகளின் அடிப்படையிலேயே புதுமைக் கருவியின் செயல்பாட்டைக் கேட்டறிவதோடு, இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடாத தமிழினத்தை உரிமையுடன் குட்டுவதும் கணினித் தமிழ் கலைச் சொல்லாக்கத் தேவையை உணர்த்திச் செல்வதும் கவனிக்கத் தக்கது.
– த. உதயசந்திரன் அய்.ஏ.எஸ்.
சுத்தமாகும் தீவு
பசிபிக் பெருங்கடலில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன கேலபாகோஸ் தீவுகள். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றென அறிவிக்கப்பட்டுள்ள இங்கு இயற்கையே ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைக்க விரும்பியதைப் போல பூமியில் உள்ள பெரும்பான்மையான உயிரினங்களின் வகைமைகள் அமைந்துள்ளன. அதனால்தான் சார்லஸ் டார்வின் இங்கு சென்று ஆய்வுகள் செய்தார். அதன் பலனாகவே நமக்கு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய அடிப்படையே புரிந்தது. பரிணாமவியல் என்ற சிந்தனையும் மனிதகுலத்துக்கு அறிமுகமானது. இப்படிப்பட்ட அழகான இந்தத் தீவின் அருகே 2019ஆம் ஆண்டு ஒரு சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 600 கேலன் எண்ணெயும் கடலில் கலந்து பெரும் சுற்றுச்சூழல் கேடு உருவானது. இந்தத் தீவிலிருந்த பல நுண்ணுயிர்கள் அழிந்தன. தாவரங்கள் கடல்பாசிகள் பாதிக்கப்பட்டன. தற்போது, இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் மீட்புப் பணியால் நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதென யுனெஸ்கோ அறிவித்துள்ளது. கேலபாகோஸ் தன் இழந்த பொலிவை மீண்டும் அடைவதால் வலசை போன பறவைகள் மீண்டும் தீவுக்கே திரும்பிக் கொண்டிருக்கின்றனவாம்.