மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [36]

ஆகஸ்ட் 16-31,2021

சிறுநீரகங்களும்  நோய்த் தொற்றும்

(KIDNEYS & INFECTIONS)

சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளாகும். இவை ஒரு தொழிற்சாலைக்கு நிகரான பணிகளை நம் உடலில் செய்கிறது என்றால் மிகையாகாது. நம் உடலில் இதயம், நுரையீரல், இரத்த ஓட்டம் போன்றவை எப்படி 24 மணி நேரமும் தொடர்ச்சியாக, ஓய்வின்றி இயங்குகின்றனவோ, அதேபோல் உழைக்கும் உறுப்புகள்தாம் சிறுநீரகங்கள். சிறுநீர் பிரிப்பு என்கிற செயலைச் செய்வது மட்டுமன்றி, மேலும் பல செயல்பாடுகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

நம் உடலில் உள்ள நீர்மங்களை ஒரே சீராக வைப்பது சிறுநீரகங்கள்தாம். வளர், சிதை மாற்றங்களால் உண்டாகும் கழிவுகளை (Metabolic Waste Products) வெளியேற்றுவதும், அவற்றை இரத்தத்தில் இருந்து பிரிக்கும் பெரும்பணியை சிறுநீரகங்களே செய்கின்றன. நீர்மச் சத்தைச் சீராக வைப்பதும், உடலில் உள்ள “மின் பகுபொருள்களை’’ (Electrolytes) சமநிலையில் வைப்பதும், உடலில் அமிலங்களை, காரங்களை (Acid-base balance) ஒழுங்குபடுத்துவதும் சிறுநீரகங்களின் முக்கிய பணிகளாக இருக்கின்றன. உடலின் இரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பதும், சிவப்பணுக்கள் உற்பத்தியையும், எலும்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் சிறுநீரகங்கள் செம்மையாகச் செய்கின்றன. உடலின் உயிரணுக்களின் உள் நீர்மங்களையும் உயிரணுக்களின் வெளி நீர்மங்களையும் (Intracellular & Extracellular) சீரான நிலையில் வைப்பவை நம் சிறுநீரகங்களே. அதன் விளைவாகத்தான் உடலின் அனைத்து உயிரணுக்களும் (Cell) சீராகச் செயல்படுகின்றன.

சிறுநீரகங்கள் செயல்பாடுகளில் குறைபாடுகள் நிகழ்ந்தால், நம் உடலின் செயல்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், நம் உடலின் நீர்மத்தன்மை சீராக இருப்பதும், அதன் மூலம் இரத்த அழுத்தத்தை ஒழுங்கான அளவில் வைத்துக் கொள்வதும் பாதிப்படையும். அமிலம், காரம் ஒழுங்கின்மை ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஆபத்து ஏற்படக் கூடும். வளர், சிதை மாற்றங்களில் சிக்கல்கள் ஏற்படும். சிறுநீரகங்கள் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டால், உடலின் மொத்த சமநிலைகளிலும் சீரின்மை ஏற்பட்டு, உடல் செயல்பாடுகள் முழுமையாகப் பாதிப்படைந்து மரணமே நிகழும் நிலை ஏற்படும்.

ஒவ்வொரு சிறுநீரகத்திலும், சிறுநீரகத் தமனியிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்களும், சிறுநீரகச் சிரையில் இணையும் இரத்தக் குழாய்களும், மிக, மிகச் சிறிய தந்துகிகளாகப் பிரிந்தும், இணைந்தும் செயல்படுகின்றன. இச்சிறிய தந்துகிகளே. பவ்மேன் கிண்ணத்தின் உள்ளே அமைந்துள்ள, வடிப்பான்களாக (Nephrons) உள்ளன. உடலின் அனைத்து இரத்தமும் சிறுநீரகத்திற்குச் சென்றே சுத்திகரிக்கப்படுகிறது. வடிப்பான்கள்தான் சிறுநீரகத்தின் செயல்படும் பொறிகளாகும். ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 9,00,000 (ஒன்பது லட்சம்) முதல் 10,30,000 (பத்து இலட்சத்து முப்பதாயிரம்) வடிப்பான்கள் இருக்கும். 24 மணி நேரமும் செல்லும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியினை இடைவிடாமல் செய்து கொண்டே இருக்கும். வடிப்பான்களுக்குச் செல்லும் தந்துகிகள் 20  mm அகலம்தான் இருக்கும். இரத்தம் அந்தத் தந்துகிகள் வழியே செல்லும்பொழுது தேவையற்ற பொருள்கள், பவ்மேன் கிண்ணத்தில் உள்ள நீர்ம அழுத்தத்தால், சவ்வூடு பரவல் முறையில் மாவுச் சத்துகள், வேதிப் பொருள்கள் உறிஞ்சப்படுகின்றன. அதில் உடலின் தேவைக்கான நீர்மங்களும், மற்ற வேதிப் பொருள்களும், மாவுச் சத்துகளும் (Carbohydrates) “மீள் உறிஞ்சும்’’ (Re-absorption) முறையில், அருகாமைக் குழாய்கள் மூலம் உறிஞ்சப்படுகின்றன. தேவையான பொருள்கள் உறிஞ்சப்பட்டவுடன், தேவையற்ற பொருள்கள் நீரோடு கரைக்கப்பட்டு, சிறுநீராக வெளியேற்றப்படுகின்றன.

சிறுநீரகத்தின் முக்கியப் பணிகள்:

¨           இதயம் வெளியேற்றும்(Cardiac Output) இரத்தத்தில் 25 சதவிகித இரத்தம் சிறுநீரகத்தின் வழியே சென்று சுத்திகரிக்கப்படுகிறது.

¨           உடலின் நீர்மங்களை சமநிலையில் (Fluid Balance) வைப்பதில் சிறுநீரகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.

¨           வளர், சிதை மாற்றங்களின் செயல்பாடுகளில் உண்டாகும், கழிவுகளை வெளியேற்றும் பணியையும சிறுநீரகங்களே செய்கின்றன.

¨           உடலுக்குத் தேவையான நீர்மங்களை மீள் உறிஞ்சும் வேலையையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

¨           நீர்மங்கள் சமநிலையில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கும் பணியையும் சிறுநீரகங்கள் செய்கின்றன.

¨           அமிலங்கள், காரங்கள் சமநிலையில் (Acid-Base Balance) வைக்கும் பணியையும் சிறுநீரகங்களே செய்கின்றன.

¨           தேவையற்ற கழிவுகளை சிறுநீராக வெளியேற்றும் பெரும்பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

இப்புனல்களில் சேகரிக்கப்படும் சிறுநீர், (சுமார் 5 முதல் 10 மி.லி. வரை) சிறுநீர்க் குழாயில் வடியும் (Ureter), வடிகின்ற சிறுநீர், சிறுநீர்ப்பையை (Urinary Bladder), வடிநீர்க் குழாய் முடிச்சுகள் (Glomerulus) அமைப்பு, அருகாமை(Proximal) குழாய்கள், ஹென்லே வளையம், தொலைக் குழாய்கள் அமைப்புகள் ஆகியவை ‘வடிப்பான்’ (Nephrons) கள்என்று அழைக்கப்படும். இந்த வடிப்பான்கள்தான் தேவையற்ற பொருள்களையும், கழிவுப் பொருள்களையும் இரத்தக் குழாய்களிலிருந்து வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மாவுச் சத்துகள் அருகாமைக் குழாய்களில் மீண்டும் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலக்கும். ஹென்லே வளையம், U வடிவத்தில் அமைந்துள்ள குழாயாகும். இறங்கு குழாய் (descending), ஏறு குழாய் (Ascending) என்று இரு பிரிவாக இருக்கும். சேகரிப்புக் குழாய்களும், தொலைக்குழாய்களும் நீரை உறிஞ்சாது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *