ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயர் வருமா? வராதா? என நாம் ஆவலாகப் பார்த்துக்கொண்டு இருக்கையில், எதிர்பார்த்தவர்களைவிட எதிர்பாராத ஒருவர், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு என்னும் பெண் வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்தியாவின் பதக்க வெற்றியைத் துவக்கி வைத்தார். கடந்த காலங்களின் தோல்விகளை, அவமானங்களை, ஏமாற்றங்களை தன் தோள்மீது சுமந்து கொண்டுதான் மீராபாயின் கைகள் அந்த 202 கிலோ பளுவைக் கூடுதலாகத் தூக்கி நம்மை அகம் மகிழச் செய்தார்.
மணிப்பூர் மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பத்தில் சாய்கோம் கிரிடி _ சாய்கோம் டோம்பி லீமா அவர்களின் கடைசி மகள்தான் மீராபாய் சானு. அப்பா சாய்கோம் கட்டுமான வேலை செய்பவர், அம்மா சாய்கோம் டோம்பி லீமா வீட்டு பக்கத்தில் சின்ன டீக்கடை வைத்திருக்கிறார். நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். இந்தக் குடும்பத்திலிருந்து போராடி வென்றவர்தான் மீரா.
மீராபாயின் திறமையைத் தெரிந்துகொண்ட விதமே நம்மை வியப்பில் ஆழ்த்தக் கூடியது. வீட்டுக்கும் கடைக்கும் தேவையான விறகுக் கட்டைகளை எடுத்து வருவதுதான் அந்தக் குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கொடுக்கப் பட்டிருந்த முக்கிய வேலை. மீராவின் அண்ணன் அந்தக் கட்டைகளைத் தரையிலிருந்து தூக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதனை வெகு எளிதாக அதைத் தூக்கி வந்திருக்கிறார் குட்டிப் பெண் மீரா. அதைப் பார்த்து வியந்த குடும்பத்தினர் அந்தத் திறமையை வீணடிக்க விரும்பவில்லை.
20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பயிற்சி மய்யத்தில் சேர்த்து விட்டனர். தினந்தோறும் ரயிலில் பயணம் செய்து பயிற்சி பெற்றுவந்தார். தன் தொடக்க கால நாள்களைப் பற்றி அவர் கூறுகையில், “நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் ‘டயட்’ பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும். குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டு எனக்கான உணவினை வாங்கித் தந்தனர்’’ என்கிறார்.
2014இல் இருந்து பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்து பல பதக்கங்களைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் க்ளீன் அண்ட் ஜெர்க் டெக்ஷனின் மூன்று தேர்வுகளிலும் ஒருமுறை கூட தூக்க முடியாமல் தோல்வியைத் தழுவினார். தோல்வியால் நாடு திரும்பிய மீரா பயிற்சி செய்யாமல் துவண்டிருந்த சமயத்தில், அவருடைய அம்மா மீண்டும் ஊக்கப்படுத்தி, 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளை வெற்றிக் கனியைப் பறிக்கச் செய்துள்ளார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் 48 கிலோ எடைப்பிரிவில் இருந்த மீராபாய், 2021 ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொள்கிறார் எனப் பார்க்கையில் அவருடைய உழைப்பும், பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை நாம் உணர முடியும்.
பெண்களின் வெற்றி அந்தக் குடும்பத்தின் வெற்றியாகும் -_ நாட்டின் வெற்றியாகும். மீராவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மணிப்பூர் மாநில அரசு அவருக்கு ரூபாய் ஒரு கோடி பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது. இன்னும் நிறைய மீரா போன்ற வெற்றி வீரர்கள் கிராமங்களிலிருந்து வெளிவருவார்கள் என நம்புவோம். (தகவல்:சந்தோஷ்)