தந்தை பெரியார்
தோழர்களே, தாய்மார்களே, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி முறை நீண்ட நாள் நடப்புக்கு மாறாக நடப்பதினாலும், இம்மாதிரி மாற்றத்துக்கு நானும் காரணமானவன் ஆனபடியால் சிறிது விளக்கிப் பேச எண்ணுகிறேன்.
நம் நாட்டில் திருமணத்துக்கு வருகின்றவர்களை மகிழ்ச்சி அடைய வைக்கவோ, பெருமை சம்பாதிக்கவோ மேளவாத்தியம், சதிர், பாட்டுக் கச்சேரி முதலியவை ஏற்பாடு செய்து பொருள் விரயமும், நேரப் போக்கையும் உண்டாக்குவார்கள்.
இவற்றை நான் கண்டிப்பது போலவே சுயமரியாதைத் திருமணத்திலும் பொருள் அதிகம் செலவு செய்து ஆடம்பரமாக செய்யப்படும் திருமணங்களையும் வெறுக்கின்றேன்.
இப்போது நான் பேசப் போவதைச் சிந்திக்கும் முன்பு நான் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு பழுத்த நாஸ்திகன், நாஸ்திகன் என்ற வார்த்தையை, மக்கள் தவறாக உணர வேண்டும், வெறுக்க வேண்டும் என்ற கருத்தில், கடவுள் இல்லை என்பவன் என்று கூறி விட்டார்கள். அதுபற்றிக் கவலையில்லை.
எவன் ஒருவன் எந்த விஷயத்தையும் அறிவு கொண்டு சிந்தித்து, தன் புத்திக்குட்பட்டபடி நடக்க வேண்டும் என்று கூறுகிறானோ, அவன் நாஸ்திகன் என்றும், கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ அறிவு கொண்டு ஆராயாமல் அப்படியே நம்பி நடப்பவன் ஆஸ்திகன் என்றும் கூறி வருகின்றார்கள்.
இப்படி ஆஸ்திகத்தின் பேரால் நடைபெறும் நடப்புகள் மக்கள் சமுதாயத்தை மடையர்களாக ஆக்குவதோடு ஒழுக்கக் கேட்டையும், நாணயக் கேட்டையும் கூட ஏற்படுத்தி வருகின்றன. எவன் ஒருவன் அறிவைப் பயன்படுத்தி முன்னோர் முறையையும், சாஸ்திரங்களையும், கடவுளையும் ஆராய்கின்றானோ அவன் நாத்திகன். அவனை அரசன் நாட்டைவிட்டு விரட்ட வேண்டும். அவர்கள் கேடானவர்கள் என்றுதான் பாரதம், இராமாயணம், பாகவதம் முதலியனவும் கூறுகின்றன.
பகுத்தறிவு கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்தித்து உன் அறிவுக்குப்பட்டதை ஏற்றுக் கொள்க! உட்படாததைத் தள்ளிவிடு! என்று சொல்ல 2,000 ஆண்டுகளாக ஆளே இல்லை. ஏதோ 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர்தான் தோன்றி முதல் முதல் இப்படிப்பட்ட அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவர் காலத்தில் வெற்றி பெற்றாலும்கூட, அவருக்குப் பிறகு அவர் மறுத்தத்தை பார்ப்பனர்கள் ஒழித்துக் கட்டி விட்டார்கள். புத்த மார்க்கத்தை ஒழிக்கவேதான் அவதாரங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலியவர்கள் உண்டாக்கப்பட்டனர்.
பாரதம் உற்பத்திக்கே காரணம் புத்தனை ஒழிக்க என்று தேவி பாகவதம் கூறுகின்றது. காரணம், எல்லாம் அறிவு கொண்டு சிந்திக்கச் சொன்னார். சாஸ்திரப்படி, முன்னோர்கள் கூற்றுப்படி நடக்காதே. அறிவு கொண்டு அலசிப் பார்த்து ஏற்றுக்கொள் என்று கூறியதற்காகவே ஒழிக்கப்பட்டார்.
புத்தருக்குப் பிறகு நாங்கள்தான் அக்காரியத்தைச் செய்து வருகிறோம். எங்கள் பிரச்சாரமே கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றோம். இதன் காரணமாகவே எங்களையும் நாத்திகர்கள் என்று கூறுகின்றார்கள். நாங்கள் கவலைப்படவில்லை. கவுரவமாகவே ஏற்றுக் கொள்ளலாம்.
நாங்கள் தோன்றி எங்கள் அறிவுப் பிரச்சாரத்தினால் மக்களை ஆஸ்திகத் துறையின்று கை கழுவும்படி செய்து கொண்டு வருகின்றோம். எந்த ஆஸ்திகனும் என்னை ஒன்றும் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூற முடியாது.
இந்த 1961ஆம் ஆண்டில் விஞ்ஞான அதிசய அற்புதக் காலத்தில் நாம் எவ்வளவோ மாறுதல்களை எல்லாம் அனுபவிக்கின்றோம், பார்க்கின்றோம். நாம் எந்த வகையிலாவது உணர்ந்து இருக்கின்றோமா என்றால் கிடையாது. நம்மை முட்டாளாக, மடையனாக ஆக்க ஏற்ற சாதனங்கள்தான் மிகுதியாக உள்ளன.
இவற்றை ஒழிப்பதுதான் எங்கள் தொண்டு. இதற்கான முயற்சியில் ஒன்றுதான் இப்படிப்பட்ட சீர்திருத்தத் திருமண முறையுமாகும்.
நமது பழைய திருமண முறைகள் எல்லாம் நம்மை மானமற்றவர்களாக, மடையர்களாக ஆக்கவே நமது திருமண முறைகள் எல்லாம் இருந்து வருகின்றன.
தமிழன் தோன்றி எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இப்படிப் பட்டவனுடைய சமுதாய வாழ்வுக்கு இப்படிப்பட்ட திருமணத்துக்கு என்ன முறை இருந்தது என்று கூற முடியுமா? கிடையாது. தொடர்ந்து பார்த்துக் கொண்டே போனால் முறை இருந்ததா என்பதே சந்தேகமாகத் தோன்றும்.
ஏதோ புராணங்கள், பிரபந்தங்களில் வரும் முறைகளைத்தான் கூறுவார்கள். சைவன், மீனாட்சி _ சொக்கன் திருமண முறைப்படி என்பான். வைணவன், இராமன் _ சீதை திருமணத்தை உதாரணம் காட்டுவான். புலவர்கள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி _ கோவலன் திருமணத்தைக் காட்டுவார்கள். இவற்றைத் தவிர வேறு காட்ட முடியாது. இவற்றை எல்லாம் தமிழர்களுடையது என்று சொல்லவும் முடியாது.
நம்மிடையே நடைபெற்று வரும் திருமண முறைகள் எல்லாம் ஜாதியையும், மதத்தையும் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதாகும். நாம் எதனால் கீழ்மக்கள் என்றால், இந்த ஜாதி மதத்தின் காரணமாகவேயாகும்.
தொல்காப்பியத்திலேயே ஆதியில் சூத்திரருக்கு திருமணம் கிடையாது. பிற்காலத்தில்தான் மற்ற 3 வருணத்துக்காரர்களுக்கும் உண்டான திருமணமானது நம் வருணத்தாருக்கும் வந்தது என்று கூறப்பட்டு உள்ளது.
நம்மிடையே பார்ப்பனைக் கூப்பிட்டு திருமணம் செய்வது மிகவும் பிற்காலத்தில்தான் நடந்து வந்திருக்கிறது. எங்கள் பகுதியில் கொங்கு வேளாளர்களுக்கு பார்ப்பான் வந்து திருமணம் செய்து வைப்பது கிடையாது. அவர்கள் ஜாதியிலேயே அருமைக்காரர் என்ற ஓர் ஆள் இருப்பார். அவரும் பரிகாரியுமே சடங்குகள் செய்தார்கள்.
எங்கள் சுயமரியாதைத் திருமணத்துக்கு புறம்பான புரோகிதத் திருமணத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை. கல்யாணம் என்றாலே ஓர் ஆண் ஒரு பெண்ணை வீட்டு வேலைக்காக அடிமை கொள்ளுதல் என்று தான் பொருள். கணவன் கொடுமைப் படுத்தினாலும், அடித்தாலும், உதைத்தாலும் ஏன் என்று கூட கேட்க முடியாது. சொத்து உரிமை, மணவிலக்கு உரிமை முதலியனவும் கிடையாது.
1929இல் நாங்கள் எங்கள் செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுடைய குறைபாடுகள் இன்ன இன்ன இதுகளுக்குப் பரிகாரம், இன்ன இன்ன வேண்டும் என்று எல்லாம் தீர்மானங்கள் போட்டோம். பெண்களுக்கு சொத்துரிமை, மணவிலக்கு உரிமை, மற்ற மற்ற துறைகளிலும் உரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டு உள்ளோம். அதுகள் எல்லாம் இன்று சட்டமாக ஆகி வருகின்றதைப் பார்க்கின்றோம்.
தோழர்களே, நமக்கு எல்லாவிதமான வசதிகளும் உள்ளது. ஆனால், பகுத்தறிவினைப் பின்பற்றும்படியான எண்ணம் நம்மிடையே எத்தனை பேர்களுக்கு உள்ளது? எல்லோரும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றைப் பற்றி நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, யாருக்குத் தெரியும்? கடவுள் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? சாஸ்திரம் என்றால் என்ன என்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், எல்லோரும் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுகின்றார்களே ஒழிய, எவன் உள்ளபடியே நம்புகின்றான்?
இவற்றைப் பற்றி விளக்க நல்ல ஆட்களோ, சாதனங்களோ, நூல்களோ இல்லை. இந்த நாட்டில் இதுபற்றிப் பேசுகின்றவர்கள் பாடுபடுபவர்கள் நாங்கள்தான்.
பல துறைகளிலும் எங்கள் நாஸ்திகப் பிரச்சாரம் புகுந்ததன் காரணமாகத்தான் மாறுதல்கள் நல்லவண்ணம் ஏற்பட்டு வருகின்றது என்று குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், பகுத்தறிவுடனும் வாழ வேண்டியதன் அவசியம் பற்றியும் தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்.
(27.8.1961 அன்று ஆம்பூரில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – விடுதலை 6.9.1961.)