தலையங்கம் : மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை பதிவிக்கலாம்!

ஆகஸ்ட் 16-31,2021

சமூகநீதி என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை தொடங்கி, அடிப்படை உரிமைகள், அதற்கு அப்பாலும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி என்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்று வதற்காக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள், கல்வியறிவு, வேலைவாய்ப்புகளில் தடுக்கப்பட்ட மக்களாக இருந்தவர்கள் சமூகநீதி, இழப்பீடு கொடுத்து முன்னேற்றும் வகையில் (Compensatory Justice for the disadvantaged groups of our people) தான் இடஒதுக்கிடு _ சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், எஸ்.சி., எஸ்.டி. ஆகிய வஞ்சிக்கப்பட்டோருக்கு வாழ்வளிக்கும் வரிசையில் தரப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணிக்கையும் பதிவு செய்யப்படுதல் மூலம்தான் சமூகநீதியை அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட முடியும்.

எஸ்.சி. என்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், எஸ்.டி. என்ற பழங்குடியினருக்கு மட்டும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (சென்சஸ்) 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நடத்தப்படுவது. அதில் அவர்களது அரசியல், கல்வி, பொருளாதார நிலைப்பாடும் பதிவு செய்யப்படும்.

இந்தக் கணக்கெடுப்பில் எஸ்.சி., எஸ்.டி. இவர்களுக்கு மட்டும் (ஜாதிவாரி) கணக்கெடுப்பு உண்டு; மற்றும் பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அது குறிக்கப்படாது என்று ஒன்றிய அரசு பிடிவாதம் காட்டுவது எவ்வகையில் சமூகநீதியாகும்?

ஜாதியை ஒழிக்கின்ற வரையில், ஜாதி அடிப்படையில் அத்தகைய சமூக மக்கள் அடையாளம் காணப்பட்டு மாநிலப் பட்டியலில் இடம்பெறும் நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை இதில் அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு _ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். அரசு முரண்டு பிடிப்பது அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, முரண்பாடும் ஆகும்!

‘ஜாதி’ என்னும் சொல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப் படுவதால்தான் 18 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

ஜாதி என்பது அப்பட்டமான உண்மை; இன்னமும் தேர்தல் காலங்களில் ஜாதியை மூலதனமாகக் கொண்டுதான் அத்துணை அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்!

ஜாதியின் சின்னங்களான நெற்றிக் குறிகளும், பூணூல் போன்றவை (Caste Marks) அடிப்படை உரிமை என்று நீதிமன்றங்களிலும் வாதாடப்படுகின்றது இன்றும்கூட!

இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) அடையாளம் காணும் எண்ணிக்கைக்கு மட்டும் இப்படி ஒரு கதவு மூடல் ஏன்? எதற்காக?

எஸ்.சி., எஸ்.டி. மக்கள் தொகை எவ்வளவு  என்று கணக்கெடுக்கப்படுவது போலவே, ஓ.பி.சி. என்ற இதர பிற்படுத்தப்பட்டவர்களின் தொகையும் கண்டறியப்பட்டால்தானே அவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் தற்போது வழங்கும் (கல்வி, உத்தியோகம் இடஒதுக்கீடு) அதீதமானது அல்ல; போதுமானது (Adequately) என்பதற்கான போதிய அளவைக் கண்டறிய துணைகோலும் கருவியாக அமையும் அல்லவா?

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு (மூன்று மாநிலங்கள்: உ.பி., உத்தரகாண்ட், கோவா போன்ற மாநில  மாநிலங்களின் 2022 சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டே) ஓ.பி.சி. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27சதவிகிதத்திற்கு ஒப்புக்கொண்டதோடு, மாநிலங்களே அவர்களை அடையாளப் படுத்தும், முன்பு பறிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் தரும் நிலையில் 127ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றியது.

அதன்மூலம் ஒரே நாளில் பிரதமர் ‘சமூகநீதிக் காவலர்’ என்று ஆக்கப்படுகிறார். உண்மையிலேயே சமூகநீதிக் காவலராக அவர் செயல்பட்டால் நம்மைவிட மகிழ்பவர்களோ, பாராட்டக் கூடியவர்களோ எவரும் இருக்க முடியாதே!

ஆனால், அந்தச் சாயம் கலைகிறதே _ இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு _ பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மறுக்கப்படுவது. மற்ற இரண்டு எஸ்.சி., எஸ்.டி.களுக்கும் ஓ.பி.சி.க்கும் அதே முறை அனுமதி மூலம்தானே _ நீதிமன்றங்கள் பல வழக்குகளில் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான நியாயபூர்வமான இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம்தானே அமைய முடியும்?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு தந்ததே பெரிய சாதனை என்றால், இப்படி மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, அவர்களை அடையாளப்படுத்த புள்ளி விவரம் சேகரிப்பது கூடாது என்றால், அவர்களது உள்நோக்கம் புரிகிறது அல்லவா? அனைத்துக் கட்சிகளும், குறிப்பாக,  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்(NDA) கட்சியான ஜனதா தளம், ஒரிசா பிஜு ஜனதா தளம் (BJD) முதலியவை கூட ஆதரித்து இதனைக் கேட்கும்போது பிடிவாதம் காட்டலாமா? எனவே, மறு ஆய்வு தேவை! தேவை!!

– கி.வீரமணி,

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *