12.7.2021 அன்று வட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரே நாளில் 68 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற கொடுமையான செய்தி மனிதாபிமானம் உள்ள அனைவரது நெஞ்சங்களையும் உருக்கும் செய்தியாகும்!
இது ஏதோ எப்போதோ நடப்பது என்று இச்செய்தி குறித்து அலட்சியப்படுத்தாமல், தட்பவெட்பத் துறை ஆய்வாளர்கள் இதுபற்றி தந்துள்ள செய்தி மற்ற எல்லா மாநிலங்களுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும்கூட பாடமாகி, அதற்கான காரண காரியங்கள் விஞ்ஞானிகளாலும், சுற்றுச் சூழலியலாளர்களாலும் கூறப்படுவதிலிருந்து போதிய, ‘வருமுன் காக்கும்’ முன்யோசனை முயற்சிகளில் ஈடுபடவேண்டியது தமிழ்நாடு அரசின் அவசர அவசியமான கடமையாகும்!
இதற்கு மூலம் – காரணம் – வெப்பச் சலனம் என்ற Global Warming தான் என்று அறிந்து, எச்சரிக்கை விடுத்துள்ளதை அலட்சியப் படுத்தாமல் – அதனை முக்கியமான ஒன்றாகக் கருதவேண்டும்.
கடல் வெப்பமாதலும் – விளைவும்!
சுற்றுச்சூழல் அமைச்சகமும், முதலமைச்சரும் இந்த ஆபத்தான போக்குக்குரிய தடுப்பணை முயற்சிகளில் ஈடுபடுவது இன்றியமையாக் கடமையாகும்.
(பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் சார்பில் பல ஆண்டுகளாக பன்னாட்டு சுற்றுச் சூழலியல் நிபுணர்களையும், ஆய்வாளர்களையும், பூவுலகின் நண்பர்கள் குழுவினரையும் அழைத்து பல ஆய்வியல் கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்).
இதுபற்றி பன்னாட்டு அறிஞர்களின் முக்கிய கருத்துகள் பரிமாறப்பட்டதை தமிழ்நாடு அரசின் குறிப்பாக முதலமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் ஆகியவர்களின் கவனத்திற்கும், மூல நடவடிக்கைக்கான திட்டமிடலுக்கெனவும் முன்வைக்கிறோம்.
1. தற்போது கடல் வெப்பமாவதால், ‘Heat Dome’ என்ற ஒன்று உருவாகி, அமெரிக்கா, கனடா வடமேற்குப் பகுதியை அனலாய் தகிக்க வைக்கிறது. வரலாறு காணா வெப்பம் 120 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிக் கொண்டிருக்கிறது – உயிரிழப்புகள் மிகுதி.
2. கடல் மட்டமும், கடல் வெப்பமும் உயருவதால் உலக அளாவிய கடற்கரைகளில் புயல் காற்றின் தீவிரமும், உயர் அலைகளின்போது பல அடிகள் கடலலைகள் உயர்ந்து மக்கள் வாழும் பகுதிகளை அழிப்பதும் உலகின் பல பகுதிகளில் நடந்து கொண்டுள்ளன. தமிழ்நாடு நீளமான கடற்கரைப் பகுதியை உடைய மாநிலம்.
3. சென்ற ஜூலை 3ஆம் தேதி ‘The Economist’ ஏட்டில் 2041ஆம் ஆண்டு டில்லியிலும், சென்னையிலும் இதுபோன்ற வெப்ப அலை அடித்தால் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் கிடைத்துள்ள அறிவியல் அடிப்படைத் தகவல்களை வைத்தே இவ்வறிக்கையை எழுதுகிறோம்.
4. இன்னும் 20 ஆண்டுகள் என்பது மிக அருகில் உள்ளது என்பதால், தமிழ்நாடு சூழியல் பேரிடர்பற்றிய கல்வியையும், கருத்தாக்கத்தையும் முன்னின்று பரப்ப ஏற்பாடு செய்யவேண்டும்.
தமிழ்நாடு சூழியல் ஆணையம் தேவை!
5. முக்கியமாக, தமிழ்நாடு அரசு, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ‘‘தமிழ்நாடு சூழியல் ஆணையம்’’ போன்ற ஓர் அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கென தனி ஆணையர் – அத்துறை வல்லுநர் நியமிக்கப்பட்டு (உறுப்பினர்களும் இருப்பது முக்கியம்). அந்த அலுவலகம் தமிழ்நாடு மாநில சூழியல் பேரிடர் தடுப்புக்கான பல ஆக்கபூர்வ பணிகளை மேற்கொள்ள பல பல்கலைக் கழகங்கள், பல துறைகள், பொதுமக்கள் மத்தியில் அறிவுறுத்தும் பிரச்சாரம் முதலிய பல கட்டமைப்புகளை உள்ளடக்கியதாக அமையலாம்!
தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களின் ‘‘குறுங்காடு வளர்ப்புத் திட்டம்’’ – அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
வெப்பச் சலனம் பல வகையில் மக்களின் தொடர் தொல்லையாகவும், பலி பீடமாகவும் ஆகும் பேரபாயம் உண்டு என்பதால், இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இதனைப் பாடத் திட்டங்களிலும் அறிவுறுத்திட அத்துணை முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
விஞ்ஞானிகளின் எண்ணிக்கை
எங்கெங்கும் பசுமையான பூமி என்று பார்த்து மனங்குளிரும் வண்ணம் பல லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான செடிகளை, மரங்களை வளர்க்கவும், காடுகள் அழிக்கப்படாமலும் இருக்க முயற்சிகள் செய்வோம். புயல், இடி, மின்னல் போன்ற உற்பாதங்களோடு உயிர்க் கொல்லிகளுக்கும், வெப்பச் சலன வீச்சுகளுக்கும் மிகுந்த தொடர்புண்டு என்னும் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை நமக்குப் பாடமாகி, மாற்று வழிபற்றி சிந்திக்கத் திட்டமிடல் அவசரம், அவசியம்!
எதையும் ஆழ்ந்து யோசித்து, திட்டமிட்டு வெற்றி பெறும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபற்றி ஆழ்ந்து வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து – பரிசீலித்து, அரிய வரலாற்றுச் சாதனை செய்யவேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.
– கி.வீரமணி,
ஆசிரியர்