நூல் ஆய்வு : செயலூக்கி நூல்

ஜுலை 1-15,2021

முனைவர் வா.நேரு

வைக்கம் போராட்டம் பற்றி எவரேனும் வினா எழுப்பினால், குழப்பமான கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய, அடையாளம் காட்ட வேண்டிய ஓர் அருமையான ஆய்வு நூலை எழுத்தாளர், ஆய்வாளர் பழ.அதியமான் அவர்கள்  ‘வைக்கம் போராட்டம்’ என்னும் தலைப்பில் கொடுத்திருக்கிறார்.

தனது  முன்னுரையில் பழ.அதியமான் அவர்கள் இந்த நூலுக்கான தேவையைக் குறிப்பிடுகிறார். ”வைக்கம், சேரன்மாதேவி போராட்டங்களின் ஊடாகவே பெரியார் சமூக சீர்திருத்த வீரர் என்று உணரப்பட்டு வரலாற்றில் நிலைத்தார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த  போராட்ட வரலாற்றை  முழுமையாகத் தருவதே  இந்நூல் எழுதுவதற்கான காரணம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் 646 பக்கங்களையும் படித்து, பார்த்து முடிக்கிறபோது, நூல் ஆசிரியர், தன்னுடைய  நோக்கத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இப்போது 2021. இந்த நூல் வெளிவந்த ஆண்டு 2020. ஒரு 10, 15 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். வைக்கம் போராட்டம் நடந்த காலம் மார்ச்- 30, 1924 முதல் நவம்பர்-29, 1925 வரை. பழ.அதியமான் இந்தப் போராட்ட வரலாற்றை முழுமையாகத் தரவேண்டும் என்று களத்தில் இறங்கிய காலம் 2007_-08 என்று எடுத்துக் கொண்டால், ஒரு 82, 83 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த போராட்ட வரலாற்றுக்கான தரவுகளுக்காக ஒரு  கடுமையான உழைப்பை அளித்திருக்கிறார். பழ.அதியமான் அவர்கள், ஒரு முகமாய் தனது உழைப்பு முழுவதையும்  ஒருமுகப்படுத்தி, தரவுகளைத் திரட்டி, அதன் மூலம் உருவாக்கிய இந்த ‘வைக்கம் போராட்டம்’ என்னும் இந்த ஆய்வு நூல் ஓர் ஆய்வு நூல் என்பது எப்படி அமையவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டி இருக்கிறது. புதிதாய் ஆய்வு நூல், ஆய்வுக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டி  நிற்கிறது.

ஓர் ஆய்வு நூலுக்கான களப் பணியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதனை தனது அனுபவத்தால் இந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டு மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார். ”நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியைக் கொண்டு வரவும், இடைவெளிகளை நிரப்பவும் 90 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களின் பின்னால் ஒரு குப்பை பொறுக்குபவனைப் போல் (வார்த்தை உபயம் : மாண்புமிகு மனைவி) தேடித் திரிந்தேன்’’ எனக் குறிப்பிடுகிறார் பழ.அதியமான். வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ‘பசி நோக்கார், கண் துஞ்சார்’ என்பது போல ஒரே நோக்கமாக தரவுகளைத் தேடி அலைந்து, சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.

எத்தனை எத்தனை ஆதாரங்கள்: “வைக்கம் போராட்ட வரலாற்றை விவரிக்கும் இந்நூலின் முதன்மை ஆதாரங்களாகப் போராட்ட கால நாளிதழ்களும், கேரள ஆவணக் காப்பகங்களில் ஆய்வாளர்களுக்குத் தர அனுமதிக்கப்பட்டுள்ள வைக்கம் கோப்புகளும் அமைந்துள்ளன. இரண்டாம் நிலை ஆதாரங்களாகப் பயன்பட்டவை வைக்கம் தொடர்பான தமிழ், மலையாள, ஆங்கில நூல்கள்’’ என்று முன்னுரையில் பழ.அதியமான் குறிப்பிடுகின்றார்.

“வைக்கம் போராட்டம் குறித்துச் சமகாலத்தில் வெளிவந்த முக்கியமான தமிழ் இதழ்களைப் பார்வையிட்டுத் தரவுகளைச் சேர்த்திருக்கிறேன்.’’ என்று குறிப்பிட்டுப் பழ.அதியமான் அவர்கள் கொடுத்திருக்கும் பத்திரிகைகளின் பட்டியல் நம்மைத் திகைக்க வைக்கிறது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள ‘குடிஅரசு’க் களஞ்சியங்கள் (42 தொகுப்புகள்) வழி பார்த்தேன் என்று சொல்கின்றார். 97 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த பத்திரிகைகள், அந்தப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் அப்படி, அப்படியே புத்தகத்தில் கொடுத்திருக்கிறார்.

“வைக்கம் போராட்டம் பற்றிய இவ்வாய்வுக்கான தகவல்களைத் திரட்டக் கேரளா நகரங்களுக்கு (2011 முதல் 2017 வரை) ஏழாண்டில் 12 முறை சென்று வந்திருக்கிறேன்’’ என்று குறிப்பிடுகின்றார். ”சம்பவ இடத்தைக் கண்களால் காண வைக்கத்திற்குப் (17-20 பிப்ரவரி 2011, 8 ஜூன் 2011, 16, -17 மே 2017) போனேன். வைக்கம் பெரிய நகரமில்லை. இன்றைக்கும் மதியம் 2:30 மணிக்கு போனால் சாப்பிடச் சோறு கிடைக்காது. பெரியாரும் காந்தியும் வந்திறங்கிய அந்தப் படகுத்துறை அந்தக் காட்சிகளைக் கொண்டு தந்தது’’ என்று குறிப்பிடுகின்றார். ஓர் ஆய்வாளருக்கு காட்சிப்படுத்திப் பார்க்கும் (ஸ்வீsuஸ்ணீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ) தன்மை என்பது மிக முக்கியம். வரலாற்றுத் தகவல்களை, தந்தை பெரியாரை, அண்ணல் காந்தியைப் பற்றிப் படிக்கிறார். பல பத்தாண்டுகள் கழித்து, அவர்கள் வந்திறங்கிய வைக்கம் படகுத்துறை, அவர்கள் வந்திறங்கிய காட்சிகளைக் கண்முன்னால் தந்தது என்று குறிப்பிடுகிறார். வெறுமனே நிகழ்வுகளாக மட்டுமல்ல, அதனை அகக்கண் முன்னால் விரியும் திரைப்படம் போலப் பார்க்கும் தன்மை ஓர் ஆய்வாளருக்கு எப்படித் துணை செய்யும் என்பதனை பழ.அதியமான் குறிப்பிடுகின்றார்.

“கேரள நகரங்கள் தவிர, தில்லி நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்திற்குச் சென்றது (23_-30 ஏப்ரல்: 12 மே 2014). பெரும் பயனுடைய அதே சமயம் அதிகச் செலவு பிடித்த முயற்சி’’ என்று குறிப்பிடுகின்றார். மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். இவர் பல்கலைக் கழகப் பேராசிரியர் அல்ல. இவர் சென்று  வரும் இடங்களுக்கு பயணப் படியோ மற்ற சலுகைகளோ இவர் வேலை பார்த்த துறையில் இருந்து கிடைக்காது. தனது சொந்தப் பணத்தை, உழைப்பை, நேரத்தை ஓர் உன்னதமான நூலினை உருவாக்க இவர் பயன்படுத்தியதால் நம் நெஞ்சங்களில் நிற்கின்றார்.

முன்னுரை, வைக்கம் போரட்டம், வைக்கம் முன் முயற்சிகள், வைக்கமும் காந்தியும், வைக்கமும் பெரியாரும், வரலாற்றில் வைக்கம், முடிவுரை, பின்னிணைப்புகள், தமிழ்ச் சத்தியாகிரகிகள் பட்டியல், அருஞ்சொற்கள், துணை நூற்பட்டியல் என்று 646 பக்கம் உள்ள இந்தப் புத்தகம் பெரும் முயற்சியின் விளைவாய் விளைந்த பயன் என்பதனை ஒவ்வொரு பக்கமும் காட்டுகிறது.

‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் போராட்ட முறை, உலகப் போராட்டங்கள் எல்லாவற்றிற்கும் வழி காட்டக் கூடியது. எனது கோரிக்கை இதுதான். இது நியாயமான கோரிக்கை, சமூகம் முன்னேறுவதற்கான கோரிக்கை, மனித நேய அடிப்படையில் அமைந்த கோரிக்கை என்பதனைத் தெரிவித்துவிட்டு, இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை அறவழியிலான போராட்டங்களில், மக்களைத் திரட்டிப் போராடுவேன். வாதாடுவேன். அரசாங்கம் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வேன். தண்டனைக்குப் பயப்பட மாட்டேன். எடுத்துக் கொண்ட கொள்கையை நிறைவேற்றுவதில் ஓர் அடியும் பின்வாங்க மாட்டேன் என்று வைக்கம் சத்யாகிரகத்தில் தந்தை பெரியாரின் போர் முறையை, அகிம்சை அணுகுமுறையை, சிறைக்கஞ்சா சிங்கத்தின் நெறிமுறையைத் தனது ஆய்வால் ஓர் ஆவணமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் பழ.அதியமான்.

இந்திய அரசியல் வரலாற்றின் போக்கை மாற்றிய போராட்டம் வைக்கம் போராட்டமாகும். அண்ணல் அம்பேத்கர் அவர்கள், மகத் சத்யாகிரகப் போராட்டத்தை மார்ச் 20, 1927இல் நிகழ்த்தினார். இந்தப் போராட்டத்திற்கு ஊக்கமாக அமைந்தது வைக்கம் போராட்டமே என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். மக்களை ஒன்று திரட்டி, அகிம்சை வழியில் அடக்கு முறைக்கும், அரசாங்கத்திற்கும் அஞ்சாமல் போராடினால் வெற்றி உறுதி என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டிய போராட்டம் வைக்கம் போராட்டம். அதற்குப் பின் நடந்த எத்தனையோ சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு வழிகாட்டிய போராட்டம் வைக்கம் போராட்டமாகும்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள், ‘விடுதலை’யில் தான் எழுதும் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பற்றிய முதல் வாழ்வியல் கட்டுரையில் “அண்மைக் காலத்தில் நான் ஆர்வத்துடன் எத்தனையோ நூல்களை – பசித்தவன் உணவருந்துவதைப் போல் – ஏராளம் வாசித்திருக்கிறேன். ஆனால்,  நண்பர் பழ.அதியமான் அவர்கள் எழுதியுள்ள ‘வைக்கம் போராட்டம்’ என்ற சமூகப் புரட்சி வரலாற்று நூல் போல் எந்த ஒரு புத்தகத்தையும் படித்ததேயில்லை.

வியந்தேன். மகிழ்ந்தேன். ‘மாந்தி, மாந்தி’ அந்த அறிவுக்கு உணவான வரலாற்று ஆவணத்தை உண்டு களித்தேன். செரிமானம் செய்துகொண்டு, போராட்ட வீரர்களின் ரத்த ஓட்டத்தை சுத்திகரித்து, புது உணர்வோடும், மிடுக்கோடும் கண்கள் ஓட இந்நூல் ஒரு “செயலூக்கி நூல் என்றால் மிகையாகாது’’ என்று குறிப்பிட்டு மிக விரிவாக அய்யா அவர்கள் இந்த நூலைப் பற்றி 7 வாழ்வியல் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.

அய்யா ஆசிரியர் அவர்கள் இந்த நூலை ஒரு ‘செயலூக்கி நூல்’ என்று பாராட்டியுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு, அதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு சிறையில், கைகளில், கால்களில் விலங்கிடப்பட்டு, கழுத்திலே ஒரு மரப்பட்டை கட்டி விடப்பட்டு, சிறை வேலைகள் அத்தனையும் செய்ய வைக்கப்பட்டு இருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட வேலையில், கொள்கையில் சிறிதும் தளராமல், மனம் விடாமல், தான் ஈடுபட்டது மட்டுமல்ல தனது மனைவி நாகம்மையாரையும்  இந்தப் போராட்டத்திலே கலந்து கொள்ளச் செய்து, மழை கொட்டியபோதும் வைக்கம் வீதிகளில் அன்னை நாகம்மையார் அவர்கள் நனைந்து கொண்டே  நடத்திய  சத்தியாகிரகத்தைப் படிக்கிறபோது, உள்ளம் சிலிர்க்கிறது. எப்பேர்ப்பட்ட தலைவர் தந்தை பெரியார்! அவரது இயக்கத்தில் அவரது கொள்கைகளைப் பரப்ப நாமும் பாடுபடுகின்றோம் என்று நினைக்கிறபோது, ‘செயலூக்கம் பெறுகிறோம்’. “தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தந்தை பெரியார் போட்டுத்  தந்த பாதையில், அன்னை மணியம்மையார் காட்டிய வழியில், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தலைமையில், அவர் சுட்டும் திசையில் எந்தவிதச் சபலங்களுக்கும் ஆளாகாமல், பணி முடிப்போம்’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *