ஆசிரியர் பதில்கள் : மக்கள் சக்தி நிச்சயம் வெல்லும்!

ஜுலை 1-15,2021

கே:       ‘நீட்’ தேர்வு இவ்வாண்டு நடத்தப்படாமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

               – மா.கன்னியப்பன், உத்திரமேரூர்

ப:           அதற்குதான் சட்டமன்றத்தின் மூலம் – சட்டவழிமுறைகள் மூலம் தீர்வு காண முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு முயற்சியில் இறங்கி, கல்லில் நார் உறிப்பதைப் போல, ஒன்றிய அரசின் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்ததோடு, கடிதம் எழுதியதோடு நிறுத்திவிடாமல், ஜஸ்டீஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் வல்லுநர் குழு மூலம், மக்கள் கருத்தினைத் திரட்டுதலில் ஈடுபட்டுள்ளார். “முயற்சி திருவினையாக்கும்‘‘. – மக்கள் சக்தி இறுதியில் வென்றே தீரும்.

               24 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு நுழைவுத் தேர்வை ஒழித்த வரலாறு தமிழ் நாட்டின் பழைய வரலாறு.

கே:       உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குச் சிதையாமல் வலுவான அணியை அமைக்க தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?

               – பெ.புருஷோத்தமன், ஆரணி

ப:           நான் மிகச் சாதாரணமானவன். அத்தகைய ஒரு பணியைச் செய்ய இப்போதுள்ளச் சூழ்நிலை நமக்கு இல்லை; என்றாலும் மக்கள் எதிர்ப்பு நிலையே பலன் தரும்.   அதற்காகப் பலவித உத்திகளை மேற்கு வங்கம் போல், பா.ஜ.க. செய்து பார்க்கிறது — முடிவும் மேற்கு வங்கம்தான்! பொறுத்திருந்து பார்ப்போம்!

கே:       உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ‘நீட்’ தேர்வு வழக்கை விரைவில் முடிக்க என்ன செய்ய வேண்டும்?

               – கா.பரமேஸ்வரி, புதுக்கோட்டை

ப:           மேலே சொன்ன பதிலில் இதுவும் அடக்கம் – புரிந்து கொள்க.

கே:       ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்பு ஏற்பாடு செய்த விழாவில் தி.மு.க. அமைச்சர் கலந்துகொண்டது பற்றி தங்கள் கருத்து என்ன?

               – வே.அன்பழகன், மதுரை

ப:           தவறு. புரியாமல் செய்த இரண்டு அமைச்சர்களும், இனியாவது இம்மாதிரி தவறுகளைச் செய்யாமல் இருப்பார்களாக என்பதே நமது அறிவுரை.

கே:       பொய்யான, தப்பான, மோசடியான செய்திகளைப் பரப்பும் “யுடியூப்’’ சேனல்களை தடை செய்ய முடியாதா?

– மீ.ஆறுமுகம், வேளச்சேரி

ப:           ஏன் முடியாது? மனமிருந்தால் மார்க்கம் உண்டே!

கே:       அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையே அரசு எடுத்து நடத்தும்போது, குற்றம் புரியும் கல்வி நிறுவனங்களை அரசு ஏற்று நடத்த வேண்டியது கட்டாயம் அல்லவா?

               – தா.வேல்முருகன், திருத்தணி

ப:           நிச்சயம் தேவைப்படும்போது, செய்யத் தவறாது தி.மு.க. அரசு.

கே:       தமிழ்நாட்டிற்குரிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும், தடுப்பூசியையும் உடனடியாக வழங்கும்படி உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டி வழக்கு தொடர்ந்தால் என்ன?

               – அ.கோவிந்தசாமி, வேலூர்

ப:           நீதிமன்றங்களைவிட மக்கள் மன்றமே சரியான இறுதித் தீர்ப்பு வழங்கும் அமைப்பாகும்.

 கே:       மதுக் கடைகளை படிப்படியாகக் குறைத்து அய்ந்து ஆண்டுகளில் அறவே ஒழிப்பது சரியான நடவடிக்கை என்று கொள்ளலாமா?

               – கு.மணிகண்டன், திருச்சி

ப:           பொருளாதார, நிதி நிலைமை சரியாகட்டும்; பிறகு யோசிக்கலாம் என்ற அணுகுமுறையே புத்திசாலித்தனமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *