கவிதை : பகுத்தறிவுப் பாடம்

ஜுன் 16-30 ,2021

“எல்லார்க்கும் எல்லாமென் றிருப்ப தான

                இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்’’

கல்லாமை இழிவாலே ஒதுக்கப் பெற்ற

                கடைக்கோடி மாந்தருக்கும் கல்வி நல்கா

வல்லாண்மை ஆரியமோ இற்றை நாளில்

                வாலாட்டிப் பார்க்கிறது; நுழைவுத் தேர்வால்

பொல்லாத நரிக்குணத்தால் சூத்தி ரர்கள்

                புகழ்மிக்க உயர்வாய்ப்பைத் தடுக்கின் றார்கள்!

 

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

                ஒப்பப்பர் ஆகிடவே வேண்டும் என்றும்

தேடரிய நற்கல்வி பெண்க ளுக்கும்

                திருநாட்டில் கிடைத்திடவே வேண்டும் என்றும்

பாடுபடும் பாட்டாளி உழைப்பா ளர்க்கும்

                பயன்முழுதும் கிடைத்திடவே வேண்டும் என்றும்

பீடுறவே நம்புரட்சிக் கவிஞர் அந்நாள்

                பெருமைமிகு பகுத்தறிவுப் பாடம் சொன்னார்!

 

செத்தமொழி சமற்கிருத மேன்மைக் காக

                செலவழிப்பார் பலநூறு கோடி; வாழும்

முத்தமிழ்க்கு மிகக்குறைவாய் நிதியைத் தந்து

                முடக்கிவிடத் துடிக்கின்றார்; பெரியார் மண்ணில்

எத்தர்தம் ஏற்கவொணாப் பித்த லாட்டம்

                இற்றுவிழும்; தகர்ந்துவிடும்; அஞ்சி நாளும்

நத்திவந்த இனஅடிமை தோளில் ஏறி

                நாட்டாண்மை செய்ததெலாம் கடந்த காலம்!

 

புதியகுலக் கல்வியினைக் கொண்டு வந்தே

                பூணூலார் ஆடுகிற ஆட்டம் என்னே!

முதுகினிலே ஆரியத்தைச் சுமக்கும் மோடி

                முத்தமிழைக் கருவறுக்கும் முனைப்புக் கொண்டார்!

இதுவரைக்கும் பொறுத்ததெலாம் போதும்! நாமும்

                எரிமலையாய்க் கனன்றெழுவோம்; எழுச்சி கொள்வோம்;

பொதிசுமக்கும் கழுதைகளா தமிழர் கூட்டம்?

                புலிக்கூட்டம் என்பதனை உணர்த்து வோமே!

பேராசிரியர் கடவூர் மணிமாறன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *