கணையமும் நீரிழிவு நோயும்
(pancreas and diabetes mellitus)
மரு.இரா.கவுதமன்
அறிகுறிகள்:
திடீர் கணைய அழற்சி:
¨ காய்ச்சல்
¨ வேகமான இதயத்துடிப்பு
¨ குமட்டல், வாந்தி
¨ வயிற்றின் இடப்புறம் வலி
¨ வலி வயிற்றின் மேல் பகுதியில் தொடங்கி, வயிற்றுப் பகுதி முழுதும் பரவி, முதுகுவரை நீளும்.
¨ வயிற்றில் வீக்கம்.
நாள்பட்ட கணைய அழற்சி:
¨ தாங்க முடியாத மேல் வயிற்றில் வலி ஏற்படும். வலி வயிறு முழுதும் பரவும்.
¨ எக்காரணமுமின்றி உடல் இளைத்துவிடும். கணையம் செயல் இழப்பதால், கணைய நொதிகள் சுரத்தல் நின்று விடும். இதன் விளைவாக உணவு சரியாக செரிக்காது.
¨ உணவு செரிமானக் குறைவினால், உயிரணுக்களில் (Cells) வளர்சிதை மாற்றங்கள் (Metabolism) பாதிப்படையும். அதன் காரணமாகவே உடல் இளைப்பு ஏற்படும்.
¨ வயிற்றில் ‘உப்பசம்’ ஏற்படும்.
¨ குமட்டல், வாந்தி ஏற்படும்.
¨ அரைகுறையாக செரித்த உணவு காரணமாக வயிற்றுப் போக்கு (Diarrhoea) ஏற்படும்.
¨ வயிற்றில் பல வகைகளில் ஏற்படும் தொல்லைகளால் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்படும்.
¨ கணையம் முழுமையாகப் பாதிப்படைந்த நிலையில், லாங்கர்ஹான் திட்டுகளும் (Islets of Langerhans) சிதைவடையும். அதனால் “ஊக்கி நீர்’’ (Hormones) உற்பத்தியும் நின்று விடும். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி நீரிழிவு நோய் ஏற்பட வழி வகுக்கும்.
கணைய அழற்சிக்குக் காரணிகள்:
¨ நீண்ட நாள் மதுப்பழக்கம்
¨ நோய்த்தொற்று (Infection)
¨ பித்தப்பை கற்கள் (Gal bladder Stones)
¨ வளர், சிதை மாற்றங்களில் மாறுபாடு (Metabolic Disorders)
¨ மருந்துகளின் பக்க விளைவுகள் (Side effects of Medicines)
¨ அடிபடுதல்(Trauma)
¨ புற்றுநோய் போன்றவற்றால், பகுதி கணையம் அகற்றப்படுதல் (Surgery)
¨ அதிகக் கொழுப்பு (High Triglycerides)
¨ பாரம்பரிய நோயாக வருதல்(Family History)
¨ தன்னுடல் தாக்கு நோய்கள் (Auto-Immune Disease)
இயல்பாக 20 முதல் 30 விழுக்காடு நோயாளிகளுக்கு இந்நோய் மேற்சொன்ன காரணம் ஏதுமின்றிகூட வரும் வாய்ப்பு உண்டு. சாதாரணமாக 30 முதல் 40 வயது ஆண்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கணைய அழற்சியால் ஏற்படும் விளைவுகள்:
¨ நீரிழிவு நோய் (Diabetes)
¨ கணைய நோய்த் தொற்று (Infection)
¨ சிறுநீரகச் செயலிழப்பு (Kidnney Failure)
¨ செரிமானக் குறைபாடு, உடல் மெலிதல்.
¨ கணையப் புற்றுநோய் (Pancreatic Cancer)
¨ கணையச் சிதைவு (Pancreatic Necrosis)
¨ மூச்சுத் திணறல் (Breathlessness)
¨ கணைய நீர்க்கட்டிகள் (Cysts)
¨ சில நேரங்களில் நீர்க் கட்டிகள் உடைந்து நோய்த் தொற்றை உண்டாக்கும் நிலை
நோயறிதல்:
¨ இரத்தச் சோதனை: இரத்தத்தில், “அமைலேஸ்’’ (Amylase), “லைப்பேஸ்’’ (Lipase) ஆகிய நொதியங்களை அளவிடல்மூலம் கணைய அழற்சியை அறியலாம்.
¨ கணைய செயல்பாடு சோதனை: (Pancreatic Function Test)
¨ “மீள் ஒலி ஆய்வு’’ (Ultra Sound) மூலம் எளிதில் கணைய அழற்சியையும், வீக்கத்தையும் அறிய முடியும்.
¨ ‘கணினி வரைவி’ (Computerised Tomography) யின் மூலமும் நோய் அறிய முடியும்.
¨ ‘காந்த அதிர்வலை வரைவி’ (Magnetic Resonance Imaging) யும் நோயறிதலில் சிறந்த பலனைத் தரும்.
¨ “உடற்குழாய் உள்நோக்கி’’ (Endoscopy) மூலம் நேரடியாக நோயைக் கண்டறியலாம்.
¨ “திசுச் சோதனை’’ (Biopsy): ஊசி மூலம் கணையத்திலிருந்து ஒரு சிறு துகளை எடுத்து சோதிக்கும் முறை.
மருத்துவம்: இந்நோய் தாக்கியவர்கள் மருத்துவமனையில் சேர்தல் தேவையாக இருக்கும். திடீர் கணைய அழற்சி ஏற்பட்டவர்களுக்கு நோய்க் காரணியை அறிந்து மருத்துவம் செய்வர்.
¨ நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு “கிருமிக் கொல்லிகளை’’ (Anti-biotics) கொடுக்க வேண்டும்.
¨ நீர்ச் சத்துக் குறைபாட்டைச் சீராக்க, சிரைகள் மூலம், நீர்மங்களைச் செலுத்த வேண்டும். (IV Fluids)
¨ கொழுப்பு குறைந்த உணவு(Low Fat diet)
¨ வாய்வழியே எடுக்கும் உணவை நிறுத்த வேண்டும். இதனால் கணையத்திற்கு ஓய்வு கிடைக்கும்.
¨ உணவு வயிற்றுக்குச் செலுத்த, குழாய் பயன்பாடு (Ryle’s Tube) இருக்கும்.
¨ வயிற்று வலியைக் குறைக்கும் மருந்துகள்.
¨ பித்தப்பை கற்கள் இருப்பின் அவற்றை நீக்க வேண்டியது இருக்கும்.
¨ கணைய அறுவை மருத்துவத்தின் மூலம், கணையத்தில் உள்ள இறந்த திசுக்களை அகற்றவும், நீர்க் கட்டிகளை (Cysts) நீக்கவும், கணையத்தில் நீர்க் கோப்பு இருப்பின் அதை வெளியேற்றவும் செய்ய வேண்டி இருக்கும்.
நாள்பட்ட கணைய அழற்சி:
¨ நீரிழிவு நோயை சீராக்க, “இன்சுலின்’’ மருந்தைச் செலுத்த வேண்டும்.
¨ வலி நீக்கும் மருந்துகள்.
¨ கணைய சுரப்பு -_ மருந்தாகச் செலுத்த வேண்டும்.
¨ அறுவை மருத்துவம் மூலம் கணைய நீரை வெளியேற்றல், கெட்ட திசுக்களை அகற்றுதல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
வருமுன் காத்தல்:
¨ மதுப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
¨ புகைப்பிடித்தல் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
¨ ஆரம்ப அறிகுறிகள் தெரிந்ததுமே, மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.
கணையம், நம் உடல் வளர்ச்சிக்கும், செரிமானத்திற்கும் தேவையான ஒரு முக்கிய உறுப்பாகும். ஆனால், பாதுகாப்பது எளிது. தேவையற்ற பழக்கங்களைத் தவிர்த்தாலே கணையம் பாதுகாக்கப்படும்.
(தொடரும்)