Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இளைஞர் பகுதி : விடாமுயற்சியால் வெற்றியின் உச்சம் தொட்டவர்!

“என் முழுப் பெயர் அப்துல் சமத். செங்குன்றத்தில்  (Redhills) அப்பாவின் கோழிப்பண்ணை இருந்தது. வசதியாகத்தான் இருந்தோம். அங்கு எங்கள் குடும்பத்தின் மீது அனைவருக்கும் மரியாதை இருந்தது.
அப்பா பெயர் சுபான், அம்மா பெயர் ஷமீம். இந்த இருவரின் முதல் எழுத்துகள்தான் எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி. அப்பாவிடம் ஒரு கோழிப்பண்ணை இருந்தது.
என்ன நடந்ததோ… ஒருநாள் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது. திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வாழ்க்கை வந்து நின்றது. கையில் எதுவும் இல்லை. பள்ளிகளில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்தோம். அனைத்தையும் இழந்து தெருவுக்கு வந்தோம்.  நான் ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தேன். தினமும் காலையிலும் மாலையிலும் கோழிகளைக் கணக்கெடுப்பது என் வேலை. அதாவது எத்தனை கோழிகள் பிழைத்திருக்கின்றன என்று கணக்கு எடுக்க வேண்டும்.
இந்த வேலையில் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் சிக்கன் பக்கோடா போடலாம் என்று முடிவு செய்தேன். அம்மா நன்றாக சமைப்பார். அவர் கைப்பக்குவம் அருமையாக இருக்கும். இதில் எனக்கு உதவி செய்தவர் என் நண்பர் சாதிக். வண்டி வாங்க என்னிடம் பணமில்லை. எனவே நண்பர் சாதிக்கிடம் தினமும் 50 ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி ரூ.5 ஆயிரத்தை வாங்கினேன்.

தன் திருமணத்துக்காகப் போட்ட வளையலை அம்மா கழற்றாமல் இருந்தார். அதை சோப்பு போட்டு கழற்றி என்னிடம் கொடுத்தார். எதற்குத் தெரியுமா..? பாத்திரங்கள் வாங்க. அப்பொழுது மனதுக்குள் தீர்மானித்தேன். ‘எப்படியாவது இந்த நகையை மீட்டு அம்மாவுக்குக் கொடுக்க வேண்டும்…’
வளையலைத் தரும்போதே என்னென்ன வாங்க வேண்டும் என்ற பட்டியலையும் அம்மா கொடுத்தார். சிக்கன் அரித்துப் போட வடிகட்டி கரண்டி, பரிமாற தட்டுகள்…
அம்மா உள்ளுக்குள் அழுததை பார்த்துக் கொண்டிருந்தேன். நன்றாக வாழ்ந்த குடும்பம்… நன்றாகப் படிக்கும் மகன்… பத்தாவது தேர்வு எழுத வேண்டியவன்… இப்பொழுது தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா விற்று வாழ வேண்டிய நிலை…
அந்தத் தள்ளு வண்டி எனக்கு எட்டாது. தக்காளிப் பெட்டி என்று சொல்வோம் இல்லையா… அதன் மீது ஏறி பக்கோடா போட்டுக் கொடுப்பேன். வாங்கிச் சாப்பிடுபவர்களின் முகம் மலரும்போது நானும் மலர்வேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. என்ன இருந்தாலும் சிக்கன் பக்கோடாதானே… தினமும் ஒரே சிக்கனை எப்படி திரும்பத் திரும்ப வாங்குவார்கள்..?
சிக்கனுடன் இடியாப்பம் தரலாம் என முடிவு செய்தோம். ஆனால், இதுவும் சரியாகப் போகவில்லை. இந்த நேரத்தில்தான் அம்மாவின் கைப்பக்குவத்தில் மணக்க மணக்கத் தயாராகும் பிரியாணி நினைவுக்கு வந்தது. அம்மாவிடம் சொன்னேன். அவர்களும் இருக்கும் பாத்திரத்தில் சிரமப்பட்டு பிரியாணி செய்து கொடுத்தார்கள். சிக்கன் பக்கோடாவும் பிரியாணியுமாக விற்கத் தொடங்கினேன்.
என் நண்பர் சாதிக்தான் பழைய ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தார். அதில் பெரிய பிரியாணி அண்டாவை சுடச்சுட எடுத்துச் செல்வேன்.
ஆனாலும் தினமும் பிரியாணி மீந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறியபடி மிஞ்சும் பிரியாணியை பொட்டலங்களாகக் கட்டி அருகில் இருந்த ஆட்டோ ரிக்ஷா ஸ்டாண்டுகளில் விற்கத் தொடங்கினேன்.
நல்ல வருமானம். நிறைய வி.அய்.பி.களின் தொடர்புகள் கிடைத்தது. பிரியாணிச் சட்டியைத் கொண்டு போய் தூக்கி வந்ததில் சூடு பட்டு என் முதுகு முன்பக்கமாக வளைய ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்.
அதைப் பொருட்படுத்தாமல் அம்மாவின் உடல்நிலையைக் கருதி நானே பிரியாணி செய்யக் கற்றுக் கொண்டேன். பாண்டியன் அண்ணன் மூலமாக பெரம்பூரில் ஒரு கடை வாடகைக்கு கிடைத்தது. அவரிடமே கடன் வாங்கி வாடகை உள்பட, கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கினேன்.
அம்மாதான் ரிப்பன் வெட்டித் துவங்கி வைத்தார். அப்பாவை கல்லாவில் அமர வைத்தேன். நானே பரிமாறுபவன்; நானே சுத்தப்படுத்துபவன். நானே சமைப்பவன். இப்படி ஆரம்பித்த  வாழ்க்கை இன்று 1000 பேருக்கு மேல் எங்களிடம் வேலை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இன்றும் ஒவ்வொரு பிரியாணிப் பாத்திரமும் என் கண் பார்வையில்தான் வைக்கிறார்கள். எல்லா கிளைகளிலும் ஒரே பிரியாணி ஃபார்முலாதான். அது என் அம்மா கொடுத்த ஃபார்முலா. அன்றன்று செய்வதை அன்றே விற்று விடுவோம். மீதமானாலும் அதை ஏழைகளுக்குக் கொடுப்போமே தவிர, மறுநாள் அதை சுடவைத்து கொடுக்க மாட்டோம்.
எந்தத் தொழில் செய்தாலும் அதற்கான முழு ஈடுபாட்டோடும், விடா முயற்சியும் செய்தால் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
– வெண்மேகம்