திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பரம்பரை யுத்தத்தை அண்ணா, கலைஞர் வரிசையில் தளபதி மு.க.ஸ்டாலின் தொடருகிறார் _- தொய்வின்றி களத்தில் கன வெற்றிகளைக் குவிக்கிறார்!
ஓயாத உழைப்பு, வற்றாத அன்பு, வளமற்ற நம் மக்கள்மீது, எதையும் ஆழ்ந்து பரிசீலித்து, அனுபவத்தோடு இணைத்து சீரிய செயலாக்கம், தொண்டர்களை அரவணைப்பதில் அண்ணா, கலைஞரிடம் கற்ற பாடம் -_ எதிர் நீச்சலாயினும் எதிர்கொண்டு வெற்றி – வாகை சூடும் தளராத தந்தை பெரியாரின் போர்க் குணம் _- இவற்றை நன்கு வரித்துக்கொண்ட கொள்கை வைரம்தான் திராவிடத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவரது ஆளுமையின் முழு வீச்சை இன்னும் சில மாதங்களில் அகிலமே அறிந்து அதிசயிக்கக் காத்திருக்கும் இத்தேர்தல் காலத்தில், அவரது இயக்கத்தையும், கூட்டணியையும் வீழ்த்திட விபீடணர்களின் துணை கொண்டு ஆரியம் வீரியம் கொள்ள நினைப்பதைச் சரியாகப் புரிந்துகொண்டோம். ஏமாறமாட்டோம்; எதிர்கொண்டு முறியடிப்போம் என்பதை ஒளிவு மறைவின்றி பிரகடனப்படுத்தி, தேர்தல் அரசியல் போர்க் களத்தில் கம்பீரமாக நின்று, இன எதிரிகளைச் சந்திக்க சரியாக சூளுரைத்து, சுயமரியாதைச் சூடு போட்டுள்ளார்.
‘‘அவர் (பிரதமர் மோடி)’’ ஆரியத்தைப் புகுத்த நினைப்பவர்; நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டிருப்பவர்கள். இந்த மோதல், காலம் காலமாக நடந்துவருவதுதான் என்பதை விளக்கமாகப் பேசிடும் நம் தளபதியின் கையில் ‘‘திராவிடம் வெல்லும்’’ என்று காட்டிடும் வண்ணம் வெற்றிக் கனி பறித்து அளிக்கக் கட்டுப்பாட்டுடன் கண்ணியத்தோடு, கடமையாற்றி அயர்வின்றி உழைத்து வெற்றி மாலையை அவர் கழுத்தில் அணிவிப்போம்!
தி.மு.க. அணியின் வெற்றி – திராவிடத்தின் மீட்சியாக – திக்கெட்டும் புகழ் பரப்பும் தீரர்களின் ஆட்சியாக – மலரட்டும்!