இனிய தலைமுறை இனிதே வருக:சமூக அக்கறையினை வெளிப்படுத்தி ஆக்கப்பணிக்கு வலிமை கூட்டுவோம்!

மார்ச் 16-31,2021

தனி ஒருவருக்கு ஒரு துறை சார்ந்த வல்லமை இல்லாவிட்டாலும், எதார்த்தமான, திருத்தங்களைத் துணிச்சலாகச் சுட்டிக் காட்டியதால், அந்த வல்லமை படைத்தோர்களே பாராட்டிடும் அளவிற்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. வல்லமை பெற்றோர் படைத்ததைவிட, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களே நிலைத்து, பலராலும் நினைவுகூர்ந்து பேசப்படும் நிலை கவிஞர் கண்ணதாசனின் படைப்புக்கும் நேர்ந்தது உண்டு.

தந்தை பெரியார், 1962ஆம் ஆண்டில் ‘விடுதலை’ ஏட்டின் முழுப் பொறுப்பையும், சிறுவயது முதல் தொடர்ந்து திராவிடர் கழகத்தில் இயக்கப் பணியாற்றி வரும் கி.வீரமணி அவர்களிடம் ஒப்படைத்தார். கடலூரில் வழக்குரைஞர் பணிக்கு  விடைகொடுத்துவிட்டு சென்னைக்கு இடம்பெயர்ந்து முழுமையாக இயக்கப்பணி ஆற்றிட வந்தார்ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாளில் தந்தை பெரியாருக்கு பிறந்தநாள் மலரினை – ’விடுதலை’ ஏட்டின் ஆண்டு மலராக பதிப்பித்து கொள்கைப் பிரச்சாரத்திற்குப் புதுப் பாதையை ஏற்படுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரிடம் பழக்கத்தில் இருந்தோர், சமகால பொது வாழ்க்கையில் பயணித்தவர்கள், பல்துறைச் சான்றோர்கள் என பல தரப்பினரிடமிருந்தும் அவர்தம் படைப்புகளைப் பெற்று ஆண்டு மலரில் இடம்பெறச் செய்து வந்தார். அத்தகைய ‘விடுதலை’ ஆண்டு மலர்கள் இயக்கச் செயல்பாடு, பொதுவெளியில் நிலவிடும் இயக்கம் பற்றிய கண்ணோட்டம், விமர்சனத்திற்கு உரிய விளக்கங்கள் அடங்கிய கருவூலமாக ஒவ்வொரு ஆண்டும் வெளிவந்து விளங்கிக் கொண்டிருக்கின்றன.

இயக்கச் செயல்பாட்டை, வரலாற்றை ஆவணப்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயத்தையே ஆசிரியர் கி.வீரமணி உருவாக்கினார். 1964ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் தயாரிக்கும் பணியில், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றிய ஒரு கவிதைப் படைப்பினை கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டிருந்தார். தொடர்ந்து நினைவூட்டியும் வந்தார். பிறந்த நாள் நெருங்கிய வேளையில் ஆசிரியர் அவர்கள் கவிஞருக்கு அழுத்தமே கொடுத்துவிட்டார். காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த கவிஞர் அவருக்கே உரிய கவிபுனையும் ஆற்றல் கொண்டு தந்தை பெரியார் பற்றிய தனது படைப்பினை அனுப்பிவைத்தார். தந்தை பெரியாரின் பெருமையினைப் போற்றி, பாமரரும் பளிச்சென்று புரிந்து கொள்ளும் வகையில் கவிதை படைத்தது கவிஞர் கண்ணதாசனுக்கு உள்ள தனிச்சிறப்பு.

இதுதான் கவிஞர் அனுப்பிய கவிதை,

ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும்

உள்ளத்தின் உரத்தினிலே நடுக்க மில்லை

தோன்றவரும் வடிவினிலே நடுக்கந் தோன்றும்

துவளாத கொள்கையிலே நடுக்க மில்லை

வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும்

வளமான சிந்தனைக்கோர் ஆட்ட மில்லை

ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்

அய்யாவுக் கிணைஅவரே மற்றோர் இல்லை!

 

நீதிமன்றின் நீதிக்கும் நீதி சொல்வார்

நெறிகெட்டு வளைந்ததெலாம் நிமிர்த்தி வைப்பார்

சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்

சாகடித்த பெருமை அவர் தமக்கே உண்டு

நாதியிலார் நாதிபெற நாப் படைத்தார்

நாற்பத்தி அய்ங்கோடி மக்களுக்கும்

பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்

பிறப்பினிலே பெரியாராய்த் தான் பிறந்தார்

 

ஆக்காத நூலில்லை; ஆய்ந்து தேர்ந்து

அளிக்காத கருத்தில்லை; அழுத்த மாக(த்)

தாக்காத பழமையிலை; தந்தை நெஞ்சில்

தழைக்காத உவமையிலை; தமிழ் நிலத்தில்

நீக்காத களையில்லை; நினைத்துச் சொல்லி

நிலைக்காத பொருளில்லை; நீதி கூட(க்)

காக்காத உலகத்தைப் பெரியார் காத்தார்

கருணைமழை மேகத்தைக் காலம் காக்கும்!

கவிதை வரிகளைப் படித்த ஆசிரியர் கி.வீரமணி அதன் சிறப்பை, கவிதை வரிகளின் வலிமையினை உணர்ந்து பெருமைப்பட்ட வேளையில், தந்தை பெரியார் அவர்களுடன் அணுக்கமாக, கொள்கை பூர்வமாக இருந்ததால் கவிதை வரிகளில் ஒரு வரிபற்றி கூடுதல் அழுத்தமாக, அதே நேரத்தில் பொருத்தமாக இருந்தால் சிறப்பாக இருக்குமே என நினைத்தார். அந்த கவிதை வரிகள் இவைதான்.

“சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்

சாகடித்த பெருமைஅவர் தமக்கே உண்டு”

இந்த வரிகளில் உள்ள ‘அவர் தமக்கே’ எனும் வரிகளில் அழுத்தம், கூடுதல் பொருத்தம் வேண்டி, அந்த வரிகளை மாற்றிட வேண்டி துணிச்சலாகக் கவிஞரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ‘என்ன மாற்றம் செய்திடலாம்?’ என கவிஞரும் மிகவும் ஆர்வமாக ஆசிரியரிடம் கேட்டார்.

ஆசிரியரும் எடுத்துரைத்தார். “சாதி ஒழிப்பில் தந்தை பெரியாரின் பங்கு முதன்மையானது. அந்த சாதியை விஷம் கக்கும் நாகத்திற்கு ஒப்பிட்டது மிகவும் அருமை. அடுத்த வரியான ‘சாகடித்த பெருமைஅவர் தமக்கே உண்டு’ என்பதில் ஒருவித பண்டித மொழி வெளிப்பாடுதான் உள்ளது; ‘பாம்பு’ என்பது அடித்துக் கொல்லப்பட வேண்டியது. பாம்பைக் கொல்வதற்கு தடி வேண்டும்; தந்தை பெரியார் (அந்தக் காலத்தில்) கைத்தடியுடன் நடந்திடும் தோற்றப் பொலிவுதான் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. ஏன் அந்தத் தடிகொண்டு, ‘ஜாதி’ நாகத்தைத் தாக்கியதாக கவிதை வரிகள் இருக்கக் கூடாது? கவிஞரின் வரிகள் ‘சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு’ என இருந்தால் பொருத்தமாக இருக்கும்’’ – என்றார் ஆசிரியர்.

கவிதை வரிகளில் ஆசிரியர் பரிந்துரைத்த மாற்றத்தில் உள்ள அழுத்தத்தை, பொருத்தப்பாட்டை உணர்ந்த கவி ஆளுமை,

ஆற்றல்மிக்க கவிஞர், மிகவும் மனம் மகிழ்ந்து  சற்றும் தாமதிக்காமல் உடனே ‘சிறப்பாகச் சொற்கள் வந்து விழுந்துள்ளன; மாற்றிக் கொள்ளுங்கள்’ என தெரிவித்தாராம். மாற்றம் பெற்ற கவிதை வரிகள் இப்படியாக அமைந்தன.

               ‘சாதி எனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்

               சாகடித்த பெருமைஅவர் தடிக்கே உண்டு’

மாற்றம் பெற்ற வரிகளுடன், ‘நடுங்கும் வயது – நடுங்காத கொள்கை’ எனும் தலைப்பில் கவிஞரது படைப்பு தந்தை பெரியாரின் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரில் வெளிவந்தது. ஆசிரியர் பரிந்துரைத்த வரிகளே கவிதைக்கு செழுமையையும் அழுத்தத்தையும் அளித்தது. ஆசிரியர் அவர்களும் பிற தளங்களிலே படைப்பாற்றல் கொண்டவராக இருந்தாலும், கவிஞரல்ல. மாபெரும் கவிஞரின் கவிதை வரிகளில் தனக்குப் பட்டதை துணிச்சலாகக் கூறியதால் அந்த மாற்றத்தின் சிறப்பை கவிஞரும் ஏற்றுக் கொண்டதால் கவிதைக்கே கூடுதல் சிறப்பு கிடைத்தது. கவிஞரின் இந்தப் பாடலை – ஆசிரியர் பரிந்துரைத்த மாற்றத்துடன் உள்ள பாடலை – கம்பீரமான குரலில் ‘இசைச் சித்தர்’ சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன் இசையோடு பாடுவதைக் கேட்கின்ற நேரத்தில் எழுச்சி கொள்ளாதவர் எவரும் இருக்க முடியாது. இளைஞர்களே, நீங்களும் ஒருமுறை அந்தப் பாடலைக் (கணினி ‘யு டியூப்’இல் உள்ளது) கேட்டால் எழுகின்ற கொள்கை உணர்வுகளை உணர்வீர்கள். சமூகம் சார்ந்த அக்கறையினை உருவாக்கிடும், பெருக்கிடும் அந்தப் பாடலை அவசியம் கேட்டுப்பாருங்கள்!

கணினித் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் பரந்துபட்ட அளவில் தொடர்புகளை மேற்கொள்ளவும், தகவல்களைப் பறிமாறிக் கொள்ளவும் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் இன்றைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. முந்தைய தலைமுறையினரிடம் செய்திகள் அறிந்த அளவிற்கு அதனை எழுத்து மூலம் வெளிப்படுத்திடும் வழக்கம் இல்லை. குறைவாகவே இருந்தது. பெரிய அளவில் செய்தி தெரிந்தவர்களும், நான்கு வரி எழுதுவதற்குத் தயக்கம் காட்டும் நிலைமை இன்றும் காணக் கூடியதே. ஆனால் கணினியுகத்தில் பிறந்த தலைமுறையினர்,- வளர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் பரந்துபட்ட தளத்தில் செய்திகளை வாசிக்கவும், பகிர்ந்து கொள்ளவுமான செயல்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர். இந்தப் பழக்கம் மிகவும் பாராட்டுக்குரியதே;. ஓரளவிற்கு சிறிய குறிப்புகள் எழுதிடவும் பகிரவும் செய்து வருவது மகிழ்ச்சிக்கு உரியதே. இருப்பினும் படித்த செய்திகள் பலவாக இருப்பதாலும், முழுமையாகத் தெரிந்து கொள்ளும் முன்பே எதிர்வினை ஆற்றிடும் வகையில் கருத்துத் தெரிவித்திட வேண்டுமெனக் கருதி மேம்போக்கான நிலையில் மட்டுமே உள்ளனர். அதிகச் செய்திகளைத் தெரிந்து கொள்வது ஆழமாக அறிந்து கொள்வதைவிட மேலோங்கி நிற்கிறது. இப்படி உள்ளாகும் உளப் பாங்கிலிருந்து இளைஞர்கள் மீண்டு வர வேண்டும். 

கணினிச் செய்திகளை போகிற போக்கில் அறிந்து கொள்வதைவிட, படித்த செய்திகள் குறித்து சிந்தித்துச் செயல்பட முன்வர வேண்டும். சமூக அக்கறையுடன் செயல்பட, சமூகம் பற்றிய பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சென்ற தலைமுறையினை விட இன்றைய தலைமுறையினருக்கு அதிகமாகவே உள்ளது.

தனி மனித செயல்பாட்டின் மூலம் ஆகக்கூடியதற்கு வரையறை உண்டு. தனிமனித அளவில் மேலோட்டமான கருத்துப் பரிமாறலுடன் சமூகம் சார்ந்த அக்கறையென்பது சுருங்கி விடக்கூடாது. அமைப்பாகச் சேர்ந்து பணியாற்றிடப் பழகிக் கொள்ளவேண்டும். முற்போக்குக் கருத்துகளைக் கொண்டிருப்பது எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதைவிட அந்தக் கருத்துகளுக்கு எதிரான பழமைவாத, முற்போக்கு முலாம் பூசிய மக்களை பின்னோக்கி கொண்டு செல்லும் கருத்துகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளும் முக்கியமானவை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். அறிந்தவை, ஆக வேண்டியவை செயல்பாட்டிற்கு வரவில்லை யென்றால் அவை வெறும் ஆடம்பரப் பொருளாகிவிடும்.  அப்படிப்பட்ட ஆடம்பர அணுகுமுறையுடன் இளைஞர்கள் முடங்கிவிடக் கூடாது; கருத்துகள் சுருக்கமாக, பளிச்சென்று, படிப்பவர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் பதிவு செய்வதில் வல்லவர்களாக படித்த இளைஞர்களில் மிகப் பலர் இருப்பது எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையைப் பெருக்குவதாக இருக்கிறது. கருத்துகளைப் பதிவு செய்வதிலிருந்து ஆக்கரீதியான செயலுக்கு அவர்கள் தம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்தின் மீதான அக்கறை என்பது பல தளங்களை உடையது. எந்தத் தளத்தில் தங்களால் இயன்ற அளவு பங்களிக்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்த்து செயலாற்றப் பழகிக் கொள்ளவேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதியை ஒரு வழியில் செலவழித்த பின்பு, தமக்கு அந்தத் தளம் உகந்தது அல்ல எனக் கருதி வருந்திடக் கூடாது. விரக்தியின் விளிம்புக்குச் சென்று விடக் கூடாது. தமக்கான தெரிவினை விரைவில் அறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செயல்கள் அன்றாட வாழ்வாதாரப் பணியினை அதிக அளவில் பாதித்துவிடாத வகையில் பக்குவப்பட்டு சமூகப் பணி ஆற்ற வேண்டும். சமூக அக்கறை என்பதன் பெயரால் வீணான செயல்களில் இறங்கி காலவிரயம் செய்வதைக் கைவிட வேண்டும்.

‘பதில் கூறாமல் இருந்தால் செய்தி அறியாதவர் என கருதிவிடுவார்களே’ எனும் பலவீனத்திற்கு ஆட்படாமல், சில நேரங்களில் பதில் கூறாமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதுவும் அறிவுடைமையே என்பதை உணர வேண்டும். இந்தக் கணினி யுகத்தில் செல்பேசி பயன்பாடு, கட்செவி  (Whats App) மூலம் கருத்துப் பகிர்வு பெருகி வரும் நிலையில் அறிவுடைமையுடன் எந்தப் பணியிலும் ஈடுபட இளைஞர்கள் முன்வரவேண்டும். காலையில் எழுந்ததும் கட்செவியில் ‘காலை வணக்கம்’ மட்டுமே பதிவு செய்து பகிர்ந்தாலே அன்றைய சமூகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதிடும் இளைஞர் மிகப் பலர் உளர்.  அதற்கு ‘நன்றி’ மட்டும் தெரிவித்து பதில் பதிவு அனுப்பிடுபவரும் பலர் உள்ளனர்.  ‘வணக்கம்’, பதிலுக்கு ‘நன்றி’ என்பதை மட்டும் பகிர்ந்து கொள்பவர்கள் தங்களும் உயிருடன் இருக்கிறோம் என்பதைத் தாண்டி கூடுதலாக எதையும் தெரிவித்து விடமுடியாது. குறைந்தபட்சம் இத்தகைய பதிவுகளை மட்டுமே அனுப்பும் வழக்கத்தை கைவிடுவதே முதல் ஆக்கப்பணியாக எடுத்துக் கொள்ளலாமே, இளைஞர்கள்! மேலும் பேசுவோம்……..(தொடரும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *