கே: செம்மொழி அலுவலகத்தை மாற்றி, தமிழ் வளர்ச்சியைத் தடுத்து, சமஸ்கிருதத்தைத் திணித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராகச் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ் மீது அக்கறை காட்டுவது மோசடியல்லவா?
– குமார், தஞ்சை
ப: மோசடி என்பதைவிட, தமிழ்நாட்டு வாக்காளர்களை ஏமாற்ற அரங்கேற்றப்படும் விந்தை நாடகம்!
கே: சமூக நீதியை ஜாதி நீதியாக மாற்றிப் பின்பற்றும் போக்கு சமூகநீதியின் அடிப்படைக்கே கேடானதல்லவா?
– முத்துக்குமார், காஞ்சி
ப: ஜாதிச் சண்டைகளை வளர்க்கவும் உரமிடுவதல்ல சமூகநீதி. ‘அனைவருக்கும் அனைத்தும்’ கிடைக்கப் பாதை அமைப்பதே சமூகநீதி.
கே: சசிகலாவின் முடிவு பா.ஜ.க.வின் அச்சுறுத்தலாலா? பழி சுமப்பதைத் தவிர்க்கவா?
– தமிழ்மணி, ஈரோடு
ப: 5.3.2021ஆம் தேதிய “விடுதலை’’யில் நமது விரிவான அறிக்கையைப் படிக்க வேண்டுகிறோம்!
கே: 69% இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் இனி பாதிப்பு வராது என நம்பலாமா?
– சோமு, தாம்பரம்
ப: தொடர்ந்த விழிப்புணர்வு -_ காவலாளியின் கடமை முக்கியம்! மிக முக்கியம்!
கே: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கியது சமூகநீதியா என்று கமலஹாசன் கேட்பதும், திருமாவளவன் தன் கூட்டணிக்கு எதிர்காலத்தில் வருவார் என்று அவர் கூறுவதும் பற்றி, தங்கள் கருத்து என்ன?
– ஜோசப், மணலி
ப: அரசியலில் இன்னமும் பக்குவப்படவில்லை _ நமது தசாவதார கதாநாயகர் _ என்பதையே காட்டுகிறது!
கே: உண்மையை மறைத்து தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் போட்டி கடுமையாக இருப்பதாகத் தந்தி டி.வி. கருத்துக் கணிப்பு கூறுவது உள்நோக்கம் கொண்டதுதானே?
– ராமதாஸ், அரக்கோணம்
ப: தந்தி டி.வி. இந்த மாதிரி ‘சித்து விளையாட்டு’களை சென்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலின்போது விளையாடியதைப் போல, இப்போதும் இத்தகைய விஷமத்தனமான பணிகளைச் செய்கிறது. அதையே இப்போது மீண்டும் புதுப்பித்து வருகிறது. ஆனால், அதன் ஆசை நிராசையாகவே முடிவது உறுதி!
கே: தி.மு.கவின் பத்தாண்டு கால திட்ட வரைவு தமிழ் தேசியவாதிகளுக்கு வேலையில்லாது செய்யும் வகையில் இருக்குமா?
– கண்ணன், வேலூர்
ப: போலிகளுக்கு ஏனோ நீங்கள் இப்படி அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தந்து அவர்களை இணைத்துக் கேள்வி கேட்கிறீர்கள் என்பதுதான் நமக்குப் புரியவில்லை.
கே: கூட்டணி சேரும் சிறு கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது அர்த்தமற்றதுதானே?
– ராம்குமார், கோவை
ப: மிலியன் டாலர் கேள்வி இது! அதன் மூலமாக அவர்களது தனித்த ஆசை நிறைவேறுவது நல்லது. கூட்டணி முடிந்த பிறகு பிரச்சாரம் செய்ய இதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமானால் அவை உதவக்கூடும்.