மார்ச் 8 உலக மகளிர் நாள்
மகளிருக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள் _ உலகத் தலைவர்களும், பெண்ணுரிமை பேணும் நலம் விரும்பிகளும்.
130 கோடி மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் _ 65 கோடி பெண்கள் _ சரி பகுதி மக்கள் தொகையில்.
அவர்களது இன்றைய நிலை என்ன?
உண்மைகள் ‘ஸ்கேன்’ செய்யப்பட வேண்டிய நாள் இந்நாள்; இல்லையா?
“பெண் என்பவள் எந்த கட்டத்திலும் தனித்தும் சுதந்திரமாக வாழ உரிமையற்றவள்; குழந்தைப் பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணமானபின் கணவனின் ஆதிக்கத்திலும், மகன் பிறந்த பின் மகனின் ஆணையின் படியும் நடந்து கொள்ள வேண்டிய ஒரு வாழ்நாள் சுதந்தரமறியா சுந்தர புருஷி என்கிற மனுதர்மத்தில் நம்பிக்கையுள்ள ஆட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சம உரிமை, சமத்துவம் மறுக்கப்பட்டு பல்லாயிரம் ஆண்டு காலம் ஆனது. சனாதன மதமும் சாஸ்திர சம்பிரதாயங்களும் இதற்குத் துணையாக இன்றும் துணை நிற்பதும் மிகப்பெரிய கொடுமையல்லவா?
அப்பெண் வணங்கும் கடவுள்கூட அவரை ‘பாவ யோனியிலிருந்து’ சூத்திரர்களைப் போலவே ‘பிறந்தவர்’ என்று இழிவுபடுத்தப்பட்டதை _ மனிதக் கழிவைத் தூக்கித் தலையில் சுமக்க சில ஜாதியாரை உருவாக்கியதுபோல _ உருவாக்கி உலவ விட்டிடும் அவலத்தின் ஆட்சி நெடுங் காலமாக!
இவற்றை எதிர்த்துத்தான் புத்தரின் முதல் குரல், தொடர்ந்து ஜோதிபா பூலே, சாவித்திரி பாய்பூலே, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் வழியில் திராவிடர் இயக்கம், அதன் சமத்துவக் குரல்கள் ஓங்கி ஒலிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றால் ஓரளவுக்கு படிப்புரிமை, அரசுப் பணி உரிமை _ சமூகநீதிப் போராட்டத்தில் சாத்தியமாகி சரித்திரமாகியது! பெண்கள்மீது போடப்பட்ட விலங்குகளை ஈரோட்டுச் சம்மட்டி அடித்து நொறுக்கி, ‘சுதந்திரப் பெண்ணாக இரு!’ என்று செய்த மாற்றம் காரணமாக, இன்று, காவல்துறையில், நீதித்துறையில், நிருவாகத்துறையில், மருத்துவத்துறையில், ஆசிரியர் பணிகளில், ஆளும் ஆட்சியராக வரலாறு படைக்கும் மாற்றம் உதயசூரியன் போல் உதித்தன. தடம் பதித்தன. ஆனால், இன்றும் என்ன நிலை? சமூகநீதி மண்ணில் _ பாலியல் நீதிக் கொடி பறக்க வேண்டிய மண்ணில் _ இந்த 21ஆம் நூற்றாண்டிலும் புது வகையான பாலியல் வன்கொடுமைகள் அவர்களை அச்சுறுத்தும் நிலைதானே!
அதற்கான நீதி வழங்கவேண்டிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே, வன்புணர்ச்சி, வன்கொடுமை செய்யும் வக்கிரபுத்திக் குற்றவாளியைப் பார்த்து, ‘‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்’’ என்று அறிவுரை கூறிடும் அவலங்கள்! ஏராளமான மகளிர் புயலெனச் சீற்றம் அடைந்து, ‘‘பதவி விலகுங்கள் பத்தாம் பசலி மனப்பான்மை கொண்ட தலைமை நீதிபதி அவர்களே’’ என மடைதிறந்த வெள்ளமாய் வீதிகளில் திரண்டு முழக்கமிடுகிறார்களே!
உச்சநீதிமன்ற வரலாற்றில் இப்படி ஓர் அவலநிலை! அதற்கு முன் தலைமை நீதிபதியாக இருந்தவர்மீது பாலினச் சீண்டல் குற்றம் சுமத்தப்பட்டு, எப்படியோ ஒரு வகையில் முடித்து வைத்தது, ஒரு வேதனைக் கதை!
சட்டம் இயற்றும் மேல்சபையிலேயே அவர் அமர்ந்து விட்டார் அல்லவா இப்போது! இவை ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் சிறப்புத் தலைமை காவல்துறைத் தலைவரே, ஒரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான பெண் அதிகாரியிடம் பாலியல் ரீதியாக அரு வருக்கத்தக்க முறையில் நடந்ததாக, அழுத கண்களுடன் அந்தப் பெண் எஸ்.பி. _ திருமணமானவர் அவர் _ புகார் கொடுக்கச் செல்லுவதைக்கூட தன் கீழ் உள்ள மற்றொரு அதிகாரியை விட்டுத் தடுத்து நிறுத்த, அதிரடிப்படையைக் குவிக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி என்பது அசிங்கத்தின் உச்சம் அல்லவா?
அதைவிடக் கொடுமை _ விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அந்த உயர் அதிகாரியைப் பதவி நீக்கம் செய்யாத பம்மாத்து ஆட்சி, பரவசத்தோடு பெண்கள் வாக்குகளைச் சேகரிக்க, பெண்கள் பாதுகாப்புக்கு உகந்த மாநிலம் நாங்கள் ஆளும் மாநிலம் என்றும், மீண்டும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் சிறிதும் வெட்கமின்றிக் கேட்கும் விரசங்கள் _ இங்கே வீதி உலா!
நம் பெண்ணின் கதி _ அதோகதிதானா?
சாண்ஏறி முழம் சறுக்கும் அவலம் தானா?
மனுதர்மம் மீண்டும் ஆட்சிப் பீடமா?
இந்த வினாக்களுக்கு விடியல் எப்போது?
விடியலுக்கு விரைவில் தீர்வினைக் காண வேண்டாமா?
அதற்கான உறுதி நாளாக _ மகளிர் உறுதி ஏற்கும் நாளாக _ கொடுமைக் குணாளர்களின் கோணலை நிமிர்த்த வாக்குச் சீட்டு மூலம் பாடம் கற்பிக்க _ உலக மகளிர் நாள் மகளிரை உந்தட்டும்! உரிமைக்காக மகளிர் தோழர்கள் முழங்கட்டும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்