இந்த 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியின் வேகம் மிகவும் வியக்கத்தக்கது.
விண்வெளியில் இது வரை கதைகளாகவும், மூட நம்பிக்கைகளாகவும் இருந்தவற்றை மாற்றி, செவ்வாய் கிரகத்தை அடைவதும், அதில் உயிரினங்கள் இருந்தனவா என்பது தொடர்பான ஆய்வுக்காகவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, “பெர்சவரன்ஸ் ரோவர்’’ விண்கலத்தைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்குத் திரும்பி எடுத்துவரவும் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் ‘ஜெசிரோ’ என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி!
இதைவிட மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், ‘நாசா புரொபெல்டின் லேபரட்டரியை’ வழி நடத்தும் தலைவரும், விஞ்ஞானியுமானவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்த பெண்மணி டாக்டர் சுவாதி மோகன் ஆவார்!
பெங்களூருவில் பிறந்தவர். விண்வெளி ஆய்வில் முது நிலைப்பட்டப் படிப்புடன் டாக்டர் பட்டமும் பெற்ற சாதனையாளர்!
அவருக்கு நமது வாழ்த்துகள்!
“செவ்வாயே வெறு வாயே’’ என்று சொல்லும் உளறுவாய்கள் நிறைய இங்கு உள்ளன!
“செவ்வாய் தோஷம்’’ என்று மூடநம்பிக்கையால் பல நூறு பெண்களுக்குத் திருமணம் ஆகாத ஒரு நாட்டில் படித்து, வளர்ந்து அமெரிக்காவுக்குச் சென்று கிரக ஆய்விலேயே நிகழ்த்தியுள்ள இந்த நாட்டு பூர்வீகம் உள்ள பெண்ணின் சாதனை – பகுத்தறிவு – அறிவியல் மேன்மைக்கும், பெண் ணடிமை ஒழிந்து, பெண்ணைப் படிக்க வைத்தால் ஏற்படும் புரட்சிக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் எப்படிப்பட்ட சாதனை பார்த்தீர்களா? என தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டுதலைத் தெரிவித்துளார்.