நூல்:சித்தர்களும் சமூகப் புரட்சியும்
ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி
பதிப்பாளர்: மொழிஞாயிறு பதிப்பகம்,
பால்நகர், சங்கர்நகர் – 627 357.
திருநெல்வேலி மாவட்டம்.
அலைபேசி : 93603 58114
பக்கங்கள்: 200 விலை: ரூ.500/-
சென்ற இதழின் தொடர்ச்சி (3)
கூத்து நூல் – விளக்கத்தார் கூத்து.
மாந்தர் தம் உலக வாழ்க்கையில் அடைய வேண்டிய பயன்களான அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கூறுகிற நூல்களுக்கு கீழ்க் கணக்கு என்று பெயர் வைத்தனர். எட்டுத் தொகையும், பத்துப்பாட்டும் மேல்கணக்கு என பெயரிட்டனர். பத்துப்பாட்டு நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை), முல்லைப்பாட்டு,, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, நெடுநல்வாடை; எட்டுத்தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, அய்ங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் ஆகியவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்களாகும். பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டன. அவை நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறு பஞ்சமூலம், ஏலாதி, கார்நாற்பது, களவழி நாற்பது, அய்ந்திணை அய்ம்பது, முதுமொழிக் காஞ்சி, திருக்குறள், அய்ந்திணை எழுபது, திணைமொழி எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய நூல்களாகும். இறையனார் களவியல் இக்காலக் கட்டத்தில் தோன்றிய நூலாகும்.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நுண்கலைகளான கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை சிறப்புற்று விளங்கின. கி.பி.7ஆம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பதிகங்களில் கூறுகிற கோயில் கட்டட வகைகளான கரக்கோயில், நாழற்கோவில், கோகுடிக் கோயில், பெருங்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானை மாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும்.
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பவுத்தரும், சமணரும் பள்ளிகளையும், விகாரைகளையும் கட்டியிருந்தனர். சமண சமயக் கோவில்களுக்கு சினகரம் என்று பெயர் இருந்தது. விஷ்ணுவின் கோவிலுக்கு விண்ணகரம் என்று பெயர் இருந்தது. சமண, பவுத்தக் கோயிலுக்கு சேதியம் என்னும் பெயரும் உண்டு.
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சைவ சமய நூல்கள். காரைக்காலம்மையார் பாடிய மூத்த திருப்பதிகங்கள்.
திருவிரட்டை மாலை
அற்புதத்திருவந்தாதி – காரைக்காலம்மையார்
கயிலைபாதி – காளத்தி பாதி திருவந்தாதி
திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
திருவெழு கூற்றிருக்கை
பெருந்தேவபாணி_நக்கீரதேவநாயனார்
கோபப்பிரசாதம்
காரெட்டு
போற்றிக் கலிவெண்பா
திருகண்ணப்பா தேவர் திருமறம்
திரு ஈங்கோய்மலை எழுபது
மூத்த நாயனார் இரட்டை மணிமாலை
சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
சிவபெருமான் திருவந்தாதி – பரணதேவநாயனார்.
பவுத்த, சைன விகாரைகளிலும், பள்ளிகளிலும், கோவில்களிலும் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டன. காரைக்காலம்மையார் முதன்முதல் பதிகம் என்னும் இசைப் பாடலைப் பாடியுள்ளார். அவரது முதல் பதிகத்தின் பண் நட்டபாடை. இரண்டாவது பதிகத்தின் பண் இந்தளம். அவரது மூத்த திருப்பதிகத்தில் 9ஆம் பாடலில் பண்களின் பெயர்களையும் இசைக்கருவிகளின் பெயர்களையும் கூறுகிறார்.
பல அரிய தமிழ் நூல்களான பெருங்கதை, யாப்பருங்கலக் காரிகை, நன்னூல், நேமிநாதம், பிம்பிசாரக்கதை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, சேந்தன் திவாகரம், சூளாமணி நிகண்டு, யாப்பருங்கலம், வீரசோழியம், திருக்கலம்பகம் போன்றவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட நூல்களாகும். அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டைமாலை, திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகம் ஆகிய நூல்களை காரைக்காலம்மையார் இயற்றினார் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். திருமூலரின் திருமந்திரம் முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உரை, திருமுருகாற்றுப்படை, கல்லாடம் போன்ற நூல்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டவை. பெரும்புலவர்களான கபிலர், பரணர், பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆகியோர் களப்பிரர் காலத்தைச் சேர்ந்தவர்கள்.
வச்சிரநந்தியால் துவக்கி வைக்கப்பட்ட திராவிடச் சங்கம் தமிழையும், தமிழ் இலக்கியங்களையும் காப்பாற்றிப் பாதுகாத்தது என்று பேராசிரியர் எம்.கோவிந்தசாமி “இலக்கியங்களின் தோற்றம்’’ என்னும் நூலில் கூறுகிறார். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரையும் தோற்கடித்து அம்மூவரையும் தமிழில் தன்னை வாழ்த்திப் பாடவேண்டுமென்று கட்டளையிட்ட களப்பிரர் தாய்மொழியான தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாகவே என்பது தெற்றிதின் தெரியவருகிறது. களப்பிரர் காலத்துக்குப் பின்பு சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்த பழந்தமிழ் மக்கள் கூலியாட்களாகவும், பின்னர் பண்ணையடிமைகளாகவும், கோயில்கள், பிரமதேயங்கள், தேவதேயங்கள், அக்ரஹாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் போன்ற நில உடைமை அமைப்புகளில் விவசாயக் கூலிகளாகவும் மீண்டும் மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இத்தகைய அவலநிலை பிராமண அடிமைகளாகிவிட்ட சேர, சோழ மன்னர்களால் நேர்ந்தது என்பது வரலாற்றில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளது.
இனி வேள்விக்குடி செப்பேடு தரும் செய்தியைச் சுருக்கமாகக் காணலாம்.
பராந்தகன் நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஒருநாள் மதுரையில் நகர்வலம் வருகையில் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்னும் பார்ப்பனன் அவன் முன் வீழ்ந்து ஒரு முறையீட்டைச் சமர்ப்பிக்கின்றான். நெடுஞ்சடையனின் முன்னோனும் சங்ககாலப் பாண்டியனுமாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் நற்சிங்கனின் முன்னோராகிய நற்கொற்றன் என்னும் பார்ப்பனன் அரசனுக்காக ஒரு வேள்வி நடத்திக் கொடுத்தான் எனவும், அதற்குப் பரிசாக பாண்டிய மன்னன் பாகனூர் கூற்றத்தை சேர்ந்த வேள்விக்குடி என்னும் கிராமத்தை அப்பார்ப்பனனின் பரம்பரைக்கு மானியமாகத் தாரை வார்த்துக் கொடுத்தான் எனவும், அந்த மான்யத்தைப் பாண்டியருக்குப் பின் வந்த களப்பிரர் என்னும் கலியரசர் பிடுங்கிக் கொண்டதாகவும், தனக்கு உரிமையான அதை மீண்டும் திருப்பித் தர வேண்டும் எனவும் நற்சிங்கன் முறையிடுகிறான். ஆவணங்களைப் பரிசீலித்த நெடுஞ்சடையன் அவ்வாறே அப்பார்ப்பனனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் வேள்விக் குடியைத் திருப்பித் தருகிறான். இதில் களப்பிரரை வீழ்த்திய கடுங்கோன் தொடங்கி நெடுஞ்சடையன் ஈறான பாண்டிய வம்ச பரம்பரையும் அவர் தம் பெருமைகளும் விரிவாய்ச் சொல்லப்படுகின்றன.
நிறைவுரை
ஆரியப் பிராமணர்கள் தாங்கள் தெய்வப் பிறவிகள் என்றும், தங்கள் மந்திரங்களுக்குத் தெய்வங்கள் கட்டுப்பட்டு செயல்படுவர் என்றும், மன்னர்கள் குடும்பம் செல்வ வளத்தோடு. உடல்நலத்தாடு செழித்தோங்க தங்களால் கடவுள் அருளைப் பெற்றுத் தரமுடியும் என்றும், இறப்புக்குப் பின்பு மோட்சலோகம் பெறலாம் என்றும் கூறியதை தமிழ் மன்னர்கள் நம்பினர். சூதும், வாதும், கபடமும் கொண்ட யாகப் புரோகிதர்களான பிராமணரின் வலையில் மன்னன் வீழ்ந்ததைத் தொடர்ந்து மக்களும் வீழ்ந்தனர். இருபத்தேழு யாகங்களை பெருஞ்செலவில் செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொண்டனர் பிராமணர். சோழன் பெரு நற்கிள்ளி இராசசூய யாகத்தைப் பெருஞ்செலவில் நடத்தினான். யாகப் புரோகிதனுக்கு அன்னதானம், பொன்தானம், கோதானம், ஊர்தானம் வழங்கப்பட்டன. பிராமணர் அம்மன்னனுக்கு ‘இராசூயவேட்ட பெருநற்கிள்ளி’ என்ற பட்டத்தை வழங்கினர். பாண்டிய மன்னன் ஒருவன் யாகங்கள் பல நடத்தியே அரச பதவியை இழந்து பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பட்டத்துடன் சந்நியாசியாகிவிட்டான். கண்ணகிக்குச் சிலை எழுப்ப கனகவிசயன் தலையில் இமயக்கல்லை எடுத்துவரச் செய்த சேரன் செங்குட்டுவன் கங்கையில் அக்கல்லை நீராட்டியபோது மாடலன் என்னும் பிராமணனுக்கு துலாபாரத்தானம் வழங்கினான். எடைக்கு எடை 50 துலாம் பொன் வழங்கியதுடன் அம்மாடலன் வேண்டுகோளுக்கிணங்க கொடுங்காளூரில் வேள்வி ஒன்றையும் செய்தான். சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் பழங்குடி மக்களின் வேளாண் நிலங்கள் வன்முறையாகப் பறிக்கப்பட்டு பிராமணர் நிருவாகத்தில் உள்ள கோவில்களுக்கு இறையிலி நிலங்களாக தாரை வார்க்கப்பட்டன. பிராமணர்களுக்குத் தானமளிக்கப்பட்ட வளமான நிலங்கள் பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டன. விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி ஒவ்வொரு ஊரிலும் கோயில் எழுப்பப்பட்டு வந்தது. தங்கள் சொந்த மண்ணில் விவசாயப் பெருங்குடி மக்கள் மன்னர்களுக்கும் பிராமணர்களுக்கும் அடிமையாக்கப்பட்டனர். கோயில்களில் தேவதாசி முறையால் பல தமிழ்ப்பெண்கள் தேவரடியராக விற்கப்பட்டனர். இப்பெண்கள் அடிமைகளாக கோயில்களுக்கும் மடங்களுக்கும் விற்கப்பட்டனர். இதற்கு ஆள்வினைப் பிராமண இசைவு என்ற அடிமைப்பத்திரம் எழுதப்பட்டது. ஆறு பெண்கள் பதிமூன்று பொற்காசுகளுக்கு தஞ்சைப் பெரிய கோவிலுக்கு விற்கப்பட்டார்கள். தமிழ் பழங்குடி மக்களின் சொந்த ஊரே பறிக்கப்பட்டு பிராமணருக்குத் தானமாக அளிக்கப்பட்டு இராஜமகேந்திர சதுர்வேதி மங்கலமாகிவிட்டது. விவசாய மக்கள் மீது நானூறுக்கும் மேற்பட்ட வரிகள் சோழ மன்னர்களால் விதிக்கப்பட்டது. பல்வேறு கொடுமைகளுக்குக் காரணமான சோழர்களின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று வரலாற்றைத் திரித்துக் கூறும் புரட்டர்கள் தமிழ் மக்களை வஞ்சித்து உள்ளனர்.
பொய்யும் புனைசுருட்டும் கலந்து வரலாறாகக் காட்டும் பிராமண, பிராமண ஆதரவு எழுத்தாளர்கள் ஊர் நடுவே நச்சுமரங்கள் வளர்வதைப் போன்றவர்கள். எனவே அவர்களையும் அவர்களது பொய் வரலாற்றுச் செய்திகளையும் புறந்தள்ளி விட வேண்டும். வரலாற்றுத் திரிபுகளிலிருந்து உண்மை வரலாற்றை வெளிக்கொணர்வது தமிழர் நலன் கருதி செய்யப்பட வேண்டிய தலையாய கடமையாகும்.
சேர, சோழ பாண்டிய மன்னர்களைப் போலல்லாமல் பிராமண ஆதிக்கத்தையும் ஏணிப்படி ஜாதி அமைப்பையும் எதிர்த்து களப்பிரர் புரட்சி செய்து, பிராமணர்களை ஆதரித்து வாழ வைத்து தமிழ் குடி மக்களின் உரிமைகளைப் பறித்து கொடுங்கோலாட்சி புரிந்த மன்னர்களை ஆட்சியிலிருந்து அகற்றினர். யாகப் புரோகிதர்களான பிராமணருக்கு வழங்கப்பட்ட அனைத்து தானங்களும் ரத்து செய்யப்பட்டன. யாகங்கள் தடை செய்யப்பட்டு உயிர் பலிகள் தடுக்கப்பட்டன. மக்களின் பணம் வேள்விகள் மூலம் வீணடிக்கப்படுவது தடுக்கப்பட்டது. தமிழ்மொழி வளர்க்கப்பட்டது. வர்ணாசிரம முறை தகர்க்கப்பட்டு சமத்துவ சமூகம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட விவரங்கள் வரலாற்றில் பதிவாகி விடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் கி.பி.250_-550 ஆண்டு காலத்தில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை என்றும், வரலாறே இல்லை என்றும், அது ஒரு இருண்ட காலம் என்றும் பிராமணர் மற்றும் பிராமணியத்தைப் பின்பற்றுகின்ற பிராமணரல்லாத வரலாற்றாசிரியர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் வட இந்தியாவில் பிராமண ஆதிக்கத்தில் நடைபெற்ற குப்தர்கள் ஆட்சியை குப்தர்கள் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று பிராமண வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.
இந்திய வரலாற்றையும், தமிழக வரலாற்றையும் இதுவரை பிராமணர் மற்றும் பிராமண ஆதரவாளர்களும் தொகுத்துள்ளனர். அடித்தட்டு மக்கள் ஆட்சியதிகாரத்தைப் பற்றுவதை அவர்கள் பதிவு செய்ய விரும்புவதில்லை. அப்படியே பதிவு செய்ய நேர்ந்தாலும் எதிர்மறையாக தவறான செய்திகளுடன் இழிவுபடுத்த அவர்கள் தயங்குவதில்லை. இந்தியாவின் பொற்காலம் என்றால் அது அசோக மன்னனின் ஆட்சிக்காலம் என்றும், நந்தனின் ஆட்சிக்காலம் என்றும் கூறுவதை மறுக்க இயலாது. தமிழகத்தின் பொற்காலம் களப்பிரர் ஆட்சிக்காலம் என்றால் மிகையாகாது. களப்பிரரின் அந்த முன்னூறு ஆண்டுகளில் வர்ணாசிரம தர்மம் ஒழிக்கப்பட்டதால் பிராமணர்களுக்கு இருண்ட காலம். மண்ணின் மைந்தர்களான பழந்தமிழர் மக்களுக்கு ஒரு பொற்காலம். சேர, சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு இருண்டகாலம்; பிராமணர்களுக்குப் பொற்காலம் என்றால் மிகையாகாது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமல்லாமல் வடநாட்டுப் பிராமணர்களுக்கும் பொற்காலமாக விளங்கியது என்பதே வரலாற்று உண்மையாகும்.
சுருங்கக் கூறின் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தமிழின நலன்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் (மூவேந்தர்கள்) தமிழ்ச் சமூகத்தின் அவமானச் சின்னங்கள். தமிழினப் பண்பாட்டுக் காவலரான களப்பிரர் தலைமுறை வணக்கத்துக்கு உரியர் என்பதே சரியாகும். சித்தர்களின் வாழ்வியல் நெறிகளை களப்பிரர் தங்கள் அரசியலதிகாரத்தைப் பயன்படுத்தி நன்கு வளர்த்து மக்களின் வாழ்வை செழித்தோங்கச் செய்தனர். சித்தர்களின் கொள்கை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்திய களப்பிரர் பழந்தமிழ் மன்னர்கள் என்பதே வரலாற்று உண்மை.