இதோ இங்குதான் இந்தியப் பெண்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள்!
நினைக்கவோ, பேசவோ, விவாதிக்கவோ நாதியற்ற இந்தியப் பெண்களின் நிலை பற்றிய அப்பட்டமான உண்மைகளை பொதுவெளியில் பூசாமல் மெழுகாமல் உள்ளது உள்ளபடி பேசத் துணிந்திருக்கும் ஒரு திரைப்படம். பெண்ணுக்கு மட்டும் வீடிரண்டு என்றொரு சலுகை சரியா – தவறா என்னும் விவாதத்தை இப்போது ஒரு பக்கம் வைத்துவிட்டு கதைக்குள் வரலாம்.
அவள் கதாநாயகி. கனவுகளோடுதான் கால் வைக்கிறாள், பெண்களின் தலையில் குடும்பப் பெருமையை சுமக்க வைக்கும் பாரம்பரியமிக்க குடும்பம்தான் அக்குடும்பமும். ஆயிரம் சடங்குகளுடன் அக்கம்பக்கத்தவர் குதூகலிக்க சின்னச் சின்ன ஆசைகள், கனவுகள் சிறகடிக்க மகிழ்வைத் தேடித்தான் மணவாழ்வில் அவள் புகுந்தாள். உயர்கல்வி முடித்ததை ஒப்புக்காக வைத்து, குடும்பத்திற்கும் கணவனுக்கும் ஒத்தாசைக்காக ஓடி ஓடி ஓயாமல் உழைக்கும் முன்னாள் மருமகள் இவளின் மாமியார்… உணவு மேசையில் கணவனும் மாமனாரும் உண்டு முடித்த பின் சிதறிக் கிடக்கும் மீதங்களையும் எச்சங்களையும் ஒதுக்கிவிடவும் தோன்றாமல் களைத்துப்போய் ஒதுங்கி மேசையோரம் அமர்ந்து உண்பது அவருக்குப் பழகிவிட்டது. அவள் இப்போதுதான் அதைப் பார்த்துப் பழகுகிறாள்.
காலையில் பற்குச்சி தொடங்கி காலுக்குக் காலணி எடுத்துக் கொடுப்பது வரை வேலை வாங்கவும் விதிகளை விதிக்கவும் மட்டுமே வாளாதிருக்கும் ஒரு நபர் இவள் மாமனார். ஒரு காலத்தில் உழைத்துத் தானிருப்பார், குற்றம் காணவில்லை. இப்போது குக்கர் சோறு இவருக்கு ஆகாது. இவரின் துணிகளை வாஷிங் மெஷினும் துவைக்காது. இளஞ்ஜோடிகளுக்கு இனிப்பாகத்தான் தொடங்குகிறது. கணவன் சாப்பிட்ட இலையும் மீதம் வைத்த பாலும் காதல் வயப்படுகையில் அறிவுக்கண்ணை அப்போது மறைத்துவிடல் இயல்பு தானே… இப்படிச் செல்கையில் இவ்வீட்டு மகளுக்கு மகப்பேறு காலம், மாமியாரோ செல்லவேண்டிய நேரம், “இப்போதுதான் வேலைக்கு ஆள் வந்துவிட்டாரே” விரைந்து வரலாமே என்ற மகளின் கட்டளையில் அவர் புறப்படுகிறார். மூச்சு முட்டும் வீட்டு வேலைகள் வந்துவிழுகிறது, இவள் தலையில்! வேலைக்குச் செல்லும் கணவனுக்கான கவனிப்புகள், உணவு மேசைக்கும் சமையலறைக்கும் இடையேயான மாரத்தான் ஓட்டங்கள், உண்டு முடித்த பின் தொட்டி நிறைந்து பக்கமெல்லாம் வழியும் ஒரு குவியல் பாத்திரங்கள், பல நாள்களாக சொல்லிச் சொல்லி அனுப்பியும் சரிசெய்ய ஆள் பிடித்து வர நினைப்பில்லாத கணவரின் அலட்சியத்தால் தொட்டியிலிருந்து சொட்டுகிற கழுவுநீரைப் பிடித்து வெளியில் ஊற்றி துடைத்து, வீடுசுத்தம் செய்து, சமைத்து, துவைத்து, குளித்து பம்பரமாய்ச் சுழன்று படுக்கையில் வந்து விழுந்தால்…. சொட்டுகிற நீரும், உணவுத் தட்டில் மிஞ்சுகின்ற சொச்சங்களுமே நினைவில் மீண்டும் மீண்டும் சுற்றி நிற்கும். கட்டில் இன்பம் கணவனுக்கு மட்டுமாகும். இவளுக்கோ அது வெறுங் கடனாகும். “காதல் என்பது உயிர் இயற்கை” அவளுக்கும் உணர்ச்சி உண்டு; அது சரி, அதைப்பற்றி யாருக்கு கவலையுண்டு..?’’
இங்கே நின்று பெருமை பேசுவோம் – இந்தியச் சமையலறைகளில் இலக்கணமும் இலட்சணமும் இதுதானென்று! இருந்தாலும் நன்றாகத்தான் நகர்கின்றது – எதுவும் கேள்வி கேட்காத வரை, எதையும் தனக்கென்று விரும்பாதவரை. “உணவகத்தில் மட்டும் உண்ணும் முறைகளில் ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறீர், இல்லையா” என்று சாதாரணமாகத்தான் கேட்கிறாள் “அது என் வீடு, என் விருப்பம். அதில் என்ன குற்றம் கண்டுபிடித்தாய்?” என்று அதற்கே மன்னிப்பு கேட்க வைக்கும் கணவன்… “நம் வீட்டுப் பெண்கள் எல்லாம் வேலைக்குச் செல்லும் பழக்கம் இல்லம்மா? உயர் படிப்பு படித்த உன்னுடைய மாமியார் அப்படிச் சென்றிருந்தால் இப்போது பிள்ளைகள் எல்லாம் இவ்வளவு நல்ல நிலைக்கு வந்து இருப்பார்களா” என்று நியாயம் கற்பிக்கும் மாமனாரின் சொல் தட்டாத நல்ல பிள்ளை அவள் கணவர், “நாங்கள் தான் திருமணத்துக்கு முன்னமே சொல்லி விட்டோமே, வேலைக்கு செல்லக்கூடாது என்று, உன்னிடம் யாரும் சொல்லவில்லையா” என்று அதட்டிக் கேட்கிறார். அவளுக்கோ நடன ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தீராத தாகம்!
தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள பெண்களுக்கு அதிகாரம் ஏது? கீழ்ப்படிந்தால் தான் ஒன்றாக வாழ முடியும் என்கிற ஆணைகள் வேறு… அதனால் தான் மனம் உடைகிறாள்; அவளின் ஏக்கங்கள் கூட ஊமையாகிறது.
அடுத்தடுத்து காயப்படுகிறாள். வழக்கமான மாத சுழற்சியும் தீட்டு என்றாக்கி தள்ளி வைக்கப்படுகிறாள். அவளுக்குத் தெரியும், அது இயல்புதான் என்று. ஆனாலும் மெத்தையில் படுக்க முடியாது, துளசி இலைகளைக் கூட தொட்டுவிடக்கூடாது, பயன்படுத்திய உள்ளாடைகளை வெயிலில் வெளியே தெரியும்படி உலர்த்தக் கூடாது இப்படியெல்லாம்… மூலையில் அடைத்ததால் மூச்சுமுட்டும் வேலைகளில் சற்றே ஓய்வு பெற்றாள். எனினும் உணர்வுகளால் உடைபடுகிறாள்!
அந்த இடைவெளியில் அவளுக்கு மாற்றாக வீட்டு வேலைகளில் உதவிக்கு அழைத்து வரப்படும் பெண்ணோ “மாதத்தில் சில நாள்கள் விடுப்பு எடுத்தால் வயிற்றுப் பிழைப்புக்கு நாங்கள் என்ன செய்வோம்? எவருக்குத் தெரியப்போகிறது? நான் வேலைக்குச் சென்று கொண்டுதான் இருக்கிறேன், அப்போதும்“ என்று சொல்லும்போது ‘’பாருங்கடா உங்க புனிதம் இதுதான்” என்று படத்தின் காட்சி இவர்கள் கன்னத்தில் ஓங்கி அறைகிறது. சபரிமலைக்கு மாலை போட்ட தன் கணவர் தவறிக் கீழே விழ நேர்கையில், இவளோ அலறியடித்துத் தூக்கி விட ஓட, “இந்த நேரத்தில் என்னை ஏன் தொடுகிறாய்’’ என்று கணவன் உதறித் தள்ளிவிட்டு பரிகாரம் தேட, முற்றிலுமாக இவள் உறைந்துதான் போகிறாள். தீட்டு என்கிற பெயரில் நடக்கும் அட்டூழியங்கள் அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. சபரிமலைக்கு பெண்கள் போக வேண்டும் என்கிற போராட்டத்திலும் ஆதரவாகவே கருத்துகளை வைக்கிறாள். ஏனெனில், அவள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொந்தளித்து இருக்கிறாள்.
ஆனால், கருத்துச் சொல்லக்கூடாது என்கிற அடக்குமுறைக்கு ஆளான நேரத்தில் முழுமையாக வெடிக்கிறாள். கூடுமானவரை இவளும் தானே சமாளித்தாள்? அழுத்தம் கூடினால் வெடிக்கத் தானே செய்யும்? இது தனிமனிதக் குற்றம் அல்ல. பெண்களை தன் உடைமையாக்கி, வேலைக்காரியாக்கி சமையலறையில் அடைத்த சமூகத்தின் குற்றம்! இவர்கள் இந்திய ஆண்கள்! இவர்கள் நல்லவர்கள்தான். யார் இல்லை என்பது? ஆனால், அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு அவர்கள் எப்படிப்பட்டவர்கள்..? அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் பெண் மனதை அறியாதோர் அல்லவா..?!
அடிமையாக வாழ அவள் ஒருபோதும் விரும்பாள்! அவள் வாழ்வை அவள் தீர்மானிக்கிறாள்! அடக்குமுறைகளுக்கு அடங்கிப் போக அவள் அதற்கானவள் அல்ல. அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் எந்தப் பெண்ணும் அடிமைத்தளையை விரும்பமாட்டாள். அதனால்தான் ‘தம்பிக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடு’ என்று தங்கையிடம் அம்மா சொல்ல “ஏன் அவனால் எடுத்துக் கொள்ள முடியாதா” என்று அத்தனைபேரும் அதிரும்படி அவள் கேட்பது ஆணாதிக்கத்தின் மீது விழும் சாட்டையடி! பாடம் படித்தாலும் இன்னொரு வாழ்வில் உடனே நுழைந்து விட ஆண்களால் எப்படி முடிகிறதோ…
இதையும் சொல்லத் தவறவில்லை இந்தப் படம். பெண்களின் முடிவில்லாப் பணிகளையும், முடிவில் என்ன பெரிதாக செய்துவிட்டாய் என்பது போன்ற காயப்படுத்துதல்களும் பேசுபொருளாக இதுவரை இருந்ததே இல்லை… பெண்களின் ஆழ் மன உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தப் படம்.
இளைஞர்களே இனியாவது அடியோடு மாற்றுங்கள்! சமையலறையில் பங்கு பிரியுங்கள்; பங்கு பெறுங்கள்! அங்கிருந்தே தொடங்குங்கள்! பெண்களின் ஓய்வறியா உழைப்புக்கு சற்றே ஓய்வு கொடுங்கள். அவர்களின் உணர்வுகளைக் குலைத்துவிட்டு அதில் குளிர்காய எண்ணாதீர்கள்! வாழ்வின் இனிமையைச் சுவைக்கவே உங்கள் வாசல் தேடி வருபவர்களின் மனப்புழுக்கத்தின் மீது மனை கட்டி நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளாதீர்கள்! பெண்கள் விரும்புவது இறுதிவரை தன் துணைவன் காதலனாக இருக்க வேண்டுமே அன்றி, கணவன் எனும் எஜமானனாக அல்ல என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்! அன்றேல், அறிவு வந்தால் அவர்கள் அத்தனையையும் வீசி எறிவார்கள். அதைத்தான் இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. பாருங்கள், பற்றுங்கள்.
Yes, This is “The Great… Indian Culture!”
ம.கவிதா
திருப்பத்தூர் மகளிரணி செயலாளர்