மார்ச் 8 _ -சர்வதேசப் பெண்கள் தினம். இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களால், பார்ப்பனக் கருத்தாக்கம் கொண்டவர்களால் இது ஒரு கொண்டாட்ட நாள் என்பது போல கட்டமைக்கப்படுகிறது. கோலப்போட்டி நடத்துவது, சமைக்கும் போட்டி நடத்துவது என்று பெண்களை வைத்தே சர்வதேசப் பெண்கள் தினத்தை கொச்சைபடுத்தும் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், சர்வதேசப் பெண்கள் தினம் என்பது ஒரு போராட்ட நாள். ‘பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வோம், வெற்றி பெறுவோம்’ என்று உறுதி எடுத்துக்கொள்ளும் நாள். உலக அளவில் இருக்கும் பெண்ணியவாதிகள் பெண்களுக்கான பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசும் நாளாக இந்த மார்ச்- 8ஆம் நாளைக் கருதுகிறார்கள். நாமும் அப்படித்தான் கருதுகிறோம்.
பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும். பெண்களுக்கான உரிமைகள் என்று வருகின்றபோது பல ஆண்கள் அந்தக் கருத்துக்கு எதிராக இருப்பது போல பல பெண்களும் இருக்கிறார்கள். மக்கள் மனதிலும் ‘”இயற்கையிலேயே பெண்கள் பலவீனர்களாகவும் ஆண்களுடைய சம்ரட்சணையிலும் இருக்கும்படியாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும். அந்த உணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்குப் பெரிதும் முதலில் மாறவேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில், அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலாளர்கள் என்றும், ஏதாவது ஓர் ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர் களென்றும் தங்களையே கருதிக்கொள்ளும்படி செய்துவிட்டது. ஆதலால், அது முதலில் மாற வேண்டியது அவசியமாகின்றது” என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தந்தை பெரியார் நமக்கு வியப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவரது எழுத்துகளை வாசிக்க, வாசிக்க.. திரும்பத் திரும்ப படிக்கப் படிக்க அந்த வியப்புக் கூடுகிறது. ‘பெண் விடுதலை’ என்னும் தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளும் எழுத்துகளும் (கால வரிசைப்படி) தொகுக்கப்பட்டு திராவிடர் கழக(இயக்க) வெளியீடாக, பெரியார் திடலில் இருந்து 2019இ-ல் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு நூல் வியப்பிலும் வியப்பைத் தருகிறது. எப்படி இவ்வளவு முன்னோக்குத் தன்மையில், பல ஆண்டுகளுக்குப் பின்னால் வரும் பெண் விடுதலையை முன் நோக்கி அய்யா பெரியார் சொல்லியிருக்கிறார் என்பது வியப்பே. இதற்கு என்ன காரணம்? இந்த நூலின் தொகுப்பாசிரியரின் பதிப்புரை என்னும் பகுதியில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அதற்கான விடையைச் சொல்லுகிறார்.
“தந்தை பெரியார் அவர்கள் மனித குலத்தையே ஒட்டு மொத்த பார்வையால் அளந்தவர்.- அறிந்த பிறகு மருத்துவம் பார்ப்பது போல், தீர்வுகளை எளிமையாகச் சொன்னவர்… மனித குலத்தில் சரி பகுதியாக உள்ள பெண்கள், பயன்பாடற்ற ‘பண்டங்களைப்” போல்- மனித ஜீவன்களாகவே மதிக்கப்படாமலும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயன்படாவிட்டால் எவ்வளவு கேடு சமூகத்திற்கும்- ஏன், மனித குலத்திற்குமே பயனற்றுப் போகிறதே என்று பெரிதும் கவலைப்பட்டார்.
கல்வியை உலகத்தவர் -அண்மைக்காலமாக “மனித வள மேம்பாட்டுத்துறை” என்று அழைக்கின்றனர். மக்கள் அனைவரும் -சரி பகுதியான பெண்கள் உள்பட மனித வளம் ஆக வேண்டுமென்றும், அவர்கள் முழு விடுதலை பெற்றும், மானமும் அறிவும் பெற்றவர்களாக, ஆண்களைப் போலவே சம உரிமையும் சம வாய்ப்பும் பெற்றால்தானே முடியும் என்று கேட்டார் தந்தை பெரியார். வெறும் எழுத்து பேச்சுகளுடன் நின்று விடாமல் அதற்காகப் போராடி பல களங்களிலும் வெற்றி பெற்று பெண்களை மேலே உயர்த்தியவர். அதனையே தனது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு, இறுதிவரை தனது இலட்சியப் பயணத்தை வீறு கொண்டு தொடர்ந்தார்; வெற்றியும் பெற்றார்” என்று குறிப்பிட்டு, “வெளிநாட்டுப் பெண் உரிமைப் போருக்கும், நம் நாட்டுப் பெண் விடுதலைப் போருக்கும் ஓர் முக்கிய அடிப்படை வேறுபாடு உண்டு” என்பதனை சுட்டிக்காட்டி வர்ணாசிரம அடிப்படையில் ஜாதியின் அடித்தட்டில் பெண்கள் எப்படி நிறுத்தப்பட்டனர் என்பதனை அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
பரம்பரைப் போர் இன்றும் தொடர்கிறது. ஆரியத்திற்கும் திராவிடத்திற்குமான பரம்பரைப் போரில் ‘பெண்’ குறித்த பார்வை மிக முக்கியமானது. ஆரியம் அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் ‘அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கும் மட்டுமே’ என்று கருதுகிறது. அதனை மனு(அ)தர்மம் போன்ற நூல்களில் எழுதி வைத்திருக்கிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஏன் பார்ப்பனப் பெண்ணாக இருந்தாலும் அவரை சூத்திர ஜாதியாகத்தான் ஆரியம் கருதுகிறது. கோட்பாடுகளை வகுத்து வைத்திருக்கிறது. இந்த ஆரியத்திற்கு எதிரான கருத்துப் போரை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இன்றும் அந்தப்போர் தொடர்கிறது. அந்தக் கருத்துப் போரின் இன்றைய தளபதியாம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தப் “பெண் விடுதலை’’ என்னும் தொகுப்பினை ஆக்கி நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். கருத்துப்போரில் பங்கு பெறும் நம்மைப் போன்றவர்களுக்கு, ஒரு மிகப்பெரிய கேடயமாக இந்தப் “பெண் விடுதலை’’ என்னும் நூல் எனக்குத் தென்படுகிறது.
மொத்தம் 336 தலைப்புகளையும், பெரியார் பேருரையாளர் அய்யா பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் எழுதிய ‘பெரியாரும் பெண்ணினமும்’ என்னும் ஆய்வுக் கட்டுரையை பின் இணைப்பாகவும் கொண்டு மொத்தம் 752 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் இது. பெரிய நூல் என்பது உருவத்தால் மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள உள்ளடக்கத்தாலும் மிகப்பெரிய நூலே இது!
சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடும் நமக்கு நமது பெண்களின் சென்ற நூற்றாண்டு வாழ்வு தெரியவேண்டும். பத்து வயதுக்கு உட்பட்ட பெண் விதவைகளின் கணக்கினைப் படிக்கும்போது கண்ணீர் வருகிறது. ஆரியத்தின் அட்டூழியத்தால் தங்கள் வாழ்வை, இருந்தும் இறந்துபோனது போன்ற வாழ்க்கை வாழ்ந்த விதவைகளின் வரலாற்றை இந்த நூல் சொல்கிறது. ‘துன்பத்தில் துயருறும் பெண்களே வீட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்று தந்தை பெரியார் 1929களில் சொன்ன செய்தி இந்த நூலில் உள்ளது. கர்ப்பத்தடை ஏன் வேண்டும் என்று தந்தை பெரியார் பேசியதையும், “அடிமைத் திருமணம் ஆனந்தம் தருமா?’’ என்று தந்தை பெரியார் கேட்டதையும் இந்த நூல் விவரிக்கிறது. “சொந்தக் காலில் நில்லுங்கள்’’ என்று பெண்களுக்கு அய்யா அறிவுறுத்தியதை, “பெண்ணடிமை நீக்குவதே நமது குறி’’ என்று பெண்ணடிமை ஒழிப்பையே வாழ்நாள் இலட்சியமாகக் கொண்ட தந்தை பெரியாரின் அன்றைய பேச்சுகள் அத்தனையையும் படிக்கும்போது பெண்கள் தினத்தின் பெருமையும், அதன் முக்கியத்துவமும், அதில் நமது கடமையும் தெளிவாகத் தெரிகிறது.
தந்தை பெரியாரின் உழைப்பால், திராவிட இயக்கங்களின் ஆட்சியால் தமிழகத்தில் பெண்களுக்கான சொத்துரிமை உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளன. விதவை மறுமணம், விவாகரத்து, விவாகரத்துக்குப் பின் மறுமணம் போன்றவை மிக இயல்பானவைகளாக மாறியிருக்கின்றன, பெண் கல்வி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது. ‘பெண் ஏன் அடிமையானாள்” என்னும் தந்தை பெரியாரின் புத்தகம் பல இலட்சம் விற்பனை ஆகியுள்ளது. பல இலட்சம் பேர் அந்த நூலைப் படித்துள்ளனர். இன்றைய நவீன கணினி, இணையை வசதிகளைப் பயன்படுத்தி “பெண் ஏன் அடிமையானாள்” என்னும் நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் இந்த நூல் வெளியாகி விற்பனையிலும் விளக்கத்திலும் சாதனை படைத்துக் கொண்டுள்ளது. அந்த நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் மேல் பாகம் என்றால், இந்தப் ‘பெண் விடுதலை’ என்னும் நூல் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையின் அடிப்பாகம் எனலாம். பெண் விடுதலை ஏன் வேண்டும், எப்படி நிகழ வேண்டும், எதுவெல்லாம் பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது? என்று வெகு விளக்கமாக விவரிக்கும் நூலாக இந்தப் பெண் விடுதலை என்னும் நூல் இருக்கிறது.
பெண் விடுதலை என்று பேசும் பெண்கள், முற்போக்கு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் கட்டாயம் இந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும். நமது இயக்கத் தோழர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் இந்தப் ‘பெண் விடுதலை’ என்னும் தொகுப்பு நூலை வாங்கி வைத்துக்கொண்டு, ஒரே நாளில் படிக்காமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பாகப் படித்தால் மிகப்பெரிய பயனைத் தரும். இன்றைக்குக் கூட அய்யா சொல்லும் சில செய்திகள் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது. இதனை அய்யா 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருக்கிறார். மக்களிடத்திலே பேசியிருக்கிறார். பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் பெண்களிடம் இருக்கும் மனப்பான்மையை உடைத்து நொறுக்கும் வல்லமை கொண்டதாக இந்தப் “பெண் விடுதலை” என்னும் தொகுப்பு நூல் இருக்கிறது. சர்வதேசப் பெண்கள் தினத்தில் ஈரோட்டுக் கண்ணாடியின் துணையோடு ‘பெண் விடுதலை’யைப் புரிந்து கொள்வது எளிது. “புரிந்து கொள்வோம்; பகிர்ந்து கொள்வோம்!’’
அனைவருக்கும் சர்வதேச பெண்கள் நாள் வாழ்த்துகள்.
முனைவர் வா.நேரு