வியப்புக் குரியநம் பெரியார் தம்மை
விழியினு மேலெனக் காத்தே அவர்தம்
நயத்தகு சிந்தனை நானிலம் ஏத்த
நனிமிக நல்கிடச் செய்தநற்றாயாய்
இயக்கந் தனக்கும் எஃகரண் ஆகியே
இமயத் தளவாய் ஏற்றம் அடைந்திட
அயர்வணுவுமின்றி ஆற்றிய தொண்டால்
இயக்கமாய் நிலைத்த ஏந்தல் வாழ்கவே!
தொன்மைத் தமிழத் திருவிடந் தன்னில்
தொகைபல் கோடி சிறப்புற் றோரினும்
முன்னரும் காணா பின்னரும் பிறவா
முழுமைத் தொண்டறச் செம்மலாய்த் தோன்றி
தன்னைத் தரவாய் உறவாய்ப் பெரியார்
தமக்களித் துவந்த தன்னேரில்லா
அன்னைக் கிலக்கணம் ஆரிங் கெனிலோ
அவர்தாம் “மணியம்மையார்’’ என்பமே!
இந்த மண்ணில் இருட்டினைப் பாய்ச்சிட
எண்ணிடும் வஞ்சக ஆரியம் சார்ந்த
முந்தைப் பழமை மூடர்தம் வாக்கினை
முதிர்பட்டறிவால் முடங்கச் செய்யும்
விந்தைத் தத்துவக் கருத்துக ளாலே
விழிப்புற் றுலகு தொழும்பேர் மேதை
தந்தை பெரியார் வாழ்நாள் உயர்த்திய
தனித்துவ ஈகத் தாயெனப் போற்றே!
– கவிஞர் பெரு.இளங்கோ