சங்கராச்சாரியார்கள் என்றால் முற்றும் துறந்த முனிவர்கள், மும்மலங்களையும் கடந்தவர்கள், முப்புரியைக்கூட அணியாதவர்கள் என்று… அடேயப்பா! எப்படி எல்லாம் ஊது ஊது என்று ஊதி உப்ப வைத்து அதனை விண்ணில் பறக்க விடுகின்றனர்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தக் கூற்றுகள் எல்லாம் புனைந்து உரைக்கப்பட்டவையே!
மும்மலங்கள் என்றால் என்ன? ஆணவம், கன்மம்(தீவினை), மாயை (பொய்த்தோற்றம்) இவையே மும்மலங்கள்.
நடைமுறையில் நாற்றமெடுக்கும் நடத்தைகளுக்குச் சொந்தக்காரர்கள் – ஆணவத்தின் உச்சிக்கொம்பேறியவர்கள். ஜனாதிபதி வந்தாலும் ஓரடி உயரமான ஆசனத்தில் அமர்ந்து அவர்களை மண்டியிடச் செய்பவர்கள். காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பார் பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் வைத்து காந்தியாரிடம் உரையாடியவர். பூஜை வேளையில் தமிழை நீஷப் பாஷை என்று கூறிப் பேச மறுப்பவர்கள்.
சமஸ்கிருதத்தைத் தெய்வப் பாஷை என்று சொல்லக் கூடியவர்கள் எப்படி மும்மலங்களை அறுத்தவர்கள் ஆவார்கள்? என்ற கேள்விக்கு மட்டும் விடையே கிடைக்காது – இந்த வகையறாக்களிடமிருந்து.
கடந்த 23.2.2021 நாளைய ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி இராமேசுவரம் இராமநாதன் கோயில் கருவறைக்குள் நுழைந்திருக்கிறார். அதற்கு அங்குள்ள அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்ப்பக் கிரகத்துக்குள் அர்ச்சகர்கள் தவிர வேறு யாராக இருந்தாலும் அடி எடுத்து வைக்கக் கூடாது என்பதுதான் ஆகமத்தின் விதி என்று அர்ச்சகர்கள் தங்கள் தரப்பில் கறாராகவே நின்றனர்.
பிரச்சினை முற்றிடவே, பக்தர்கள் திரண்டார்கள். சிலர் சங்கராச்சாரியார் பக்கமும், சிலர் அர்ச்சகர்கள் பக்கமும் நின்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கூச்சல் போட்டனர். கோயில் சன்னதியில்தான் இவ்வளவு கூச்சலும் அரங்கேறின.
கோயில் என்றால் புனிதமான இடம் என்று பூசுரர்கள் கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால், நடந்தது என்ன?
காட்டுக் கூச்சல், கைகலப்பு நடந்திடுமோ என்று அஞ்சும் அளவுக்கு வாக்குவாதங்கள் முற்றிப் போயின.
சங்கராச்சாரியாருடன் யார் யார் எல்லாம் போனார்களாம்? ஆடிட்டர் குருமூர்த்தி, எச்.ராஜா போன்றோர் சென்றுள்ளனர். சங்கராச்சாரியார் பின்னாலே இவர்கள் அங்கே எதற்கு, ஏன் வந்தார்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது. கேட்டால் இவர்களுக்கு இதே பார்வைதான் என்று எகத்தாளமாகப் பேசுவார்கள்.
ஆனாலும் இவர்கள் சங்கராச்சாரியாருடன் பயணித்தனர் என்பது மட்டும் உண்மையே. தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் அங்குக் காணப்பட்டார். எல்லாம் புதிராகத்தான் இருந்தது. அமைச்சரும் கோயில் அதிகாரிகளும் தலையிட்டு, நீண்ட நேரம் சமாதானம் பேசி, ஆசுவாசப்படுத்தி, கடைசியில் ஜெகத்குரு ‘ஸ்ரீலஸ்ரீ’ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்து, தான் கொண்டு வந்த கங்கா தீர்த்தத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்தாராம்.
அந்த நிலையிலும்கூட சாஸ்திர விரோதமான இந்தச் செயலை பக்தர்கள் – பொது மக்கள் பார்த்துவிடக் கூடாது என்ற கருதி, இடையில் திரை போட்டு அர்ச்சகர்கள் மறைத்தனர் என்கிறது “தினத்தந்தி’’ (23.2.2021, பக்கம் 4)
இதன் உண்மைத் தன்மை என்ன? சங்கராச்சாரியார் கர்ப்பக் கிரகத்துக்குள் சென்று மூலவர்க்கு அபிஷேகம் செய்ய ஆகமத்தில் இடம் உண்டா? அவர் செய்தது சரியானதுதானா? என்பது ஒரு முக்கியக் கேள்வி,
ஜெகத்குரு சங்கராச்சாரியாரைக் கோயில் அர்ச்சகர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தது சரியானதுதானா? என்பது மற்றொரு முக்கியமானக் கேள்வி.
அர்ச்சகர்களைத் தவிர்த்துப் பிறர் அர்ச்சிப்பதால் ஏற்படும் கெடுதிகள் என்ன?
சிவாச்சாரியார்கள் அல்லாத மற்றவர்கள் ஆத்மார்த்தத்தை விட்டு, வேறாகிய பரார்த்த பூஜையைக் செய்வார்களேயானால் அவர்களுக்கே கெடுதி உண்டாகும். சிவபெருமானால் உண்டாக்கப்படாமல், நான்முகன் முகத்திலிருந்து உண்டானவர்கள் சாதாரண ஸ்மார்த்தப் பிராமணர்கள். அவர்களுக்குப் பரார்த்த பூஜையில் அதிகாரமில்லை. அவர்கள் அவிவேகத்தால் பரார்த்த பூஜை செய்வார்களானால் அரசனுக்கும், நாட்டுக்கும் அழிவு உண்டாகும்.
சாதாரண பிராமணர்கள் கூலிக்காக சிவபெருமானை பூசிப்பார்களானால், ஆறு மாதத்திற்குள் யாவும் கெடும். ஆதலால் பரார்த்தப் பூஜையில் அவர்களை விலக்கிட வேண்டும்.
(1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட “தமிழ்நாடு அரசிதழிலிருந்து… பக்கம் 7 முதல் 9 வரை)
ஆகமங்களும் விதிகளும் இவ்வாறு இருக்க, சங்கராச்சாரியார் அத்து மீறி சண்டியர்த்தனம் செய்தது எப்படி?
சாத்திரங்களும் ஆகமங்களும் மற்ற மற்றவர்களுக்குத்தானா? சங்கராச்சாரியாருக்கு என்றால், இவை எல்லாம் வளைந்து கொடுக்குமா?
அதுவும் இந்த சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியைப் பொருத்த வரை அடாவடித்தனத்தின் ஆலாபரணம் செய்யக் கூடியவர்.
எச். ராஜாவின் தந்தையார் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் (23.1.2018) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பெற்றபோது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்பட அனைவரும் எழுந்து நிற்க, இந்த விஜயேந்திரர் மட்டும் குத்துக்கல்லாக உட்கார்ந்திருக்கவில்லையா?
இவர்கள்தான் பண்பின் பெட்டகமாம் – அடக்கத்தின் அடையாளமாம் – ஆணவத்தை அறுத்த அருளரசர்களாம்.
‘நான் நூறு விவேகானந்தருக்கு மேல் சென்றுவிட்டேன்’ என்று இந்த விஜயேந்திரரின் குருநாதர் ஜெயேந்திர சரஸ்வதி கூறவில்லையா? இதுதான் ஆணவத்தை அறுத்து எறிந்தவர் என்பதற்கான அணிகலனா?
இராமேசுவரத்தில் இராமநாதன் கோயில் கருவறைக்குள் நுழைந்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி அட்டகாசம் செய்தார் என்றால் இவரின் குருநாதர் ஜெயேந்திர சரஸ்வதி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் என்ன செய்தார் என்பது மறந்துபோய் விட்டதா?
3.11.2000 அன்று திருப்பதியில் தோமாலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்துகொண்டு, அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) அர்ச்சனை செய்ததுண்டே!
அனைத்து ஜாயினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை – தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டத்தினைத் தொடர்ந்து மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது – கொண்டு வந்த நிலையில், பார்ப்பன ஊடகங்கள் ‘துக்ளக்’ உள்பட பார்ப்பனர்கள்கூட, “அனைவரும் அர்ச்சகர் ஆக முடியாது. அதில் ஒரு பிரிவினர்தான் (Denomination) ஆக முடியும்’’ என்று அடித்துச் சொன்னதுண்டே!
அப்படியிருக்கும்போது சங்கராச்சாரியார் கருவறைக்குள் எப்படி நுழைந்தார்? நாணயமாகப் பதில் சொல்ல வேண்டாமா?
சங்கராச்சாரியார்கள் சாதாரண மனிதர்களை விடக் கீழான சுபாவம் கொண்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ:
14.2.2001 அன்று இராமநாதபுரம் இராமநாதசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி கலந்து கொண்டனர். விழாக் குழுவினர் இந்தச் சங்கராச்சாரியார்களுக்குச் சிறப்பு செய்யும்போது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது. உடனே மதுரை ஆதீனம் தலையிட்டு இரவு விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி, இரண்டு பேர்களுக்கும் சமரசம் செய்து வைத்தார் என்ற செய்தி வெளிவரவில்லையா?
(தினத்தந்தி – 15.2.2001)
பதவிக்காக அடித்துக் கொள்ளும் கடைமட்ட அரசியல்வாதிகளைவிடக் கீழாக அடித்துக் கொண்டவர்கள்தான் ‘லோகக் குருக்களா?’
பார்ப்பனர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக இருந்தாலும், கொலைக் குற்ற வழக்கில் சிக்கி சிறைக் கம்பியை எண்ணி வந்தவர்களாக இருந்தாலும், கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் ஜெகத்குரு என்றும், லோகக்குரு என்றும் உயரத்தில் வைத்து பிரச்சாரம் செய்வதை நம் மக்கள் எப்பொழுதுதான் உணரப் போகிறார்கள்? இன உணர்வு கொள்ளத்தான் போகிறார்கள்?
கடந்த 22ஆம் தேதி இராமேசுவரத்தில் இராமநாதன் கோயிலில் நடந்த நிகழ்வை இன்னொரு பார்வையிலும் பார்க்க வேண்டும். அக்கோயில் வைணவர்களுக்கானது. காஞ்சி சங்கராச்சாரியாரோ ஸ்மார்த்தர் – இவர் எப்படி கருவறைக்குள் நுழைந்தார் என்பது முக்கியமான கேள்வியாகும்.
இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறுகிறது? 10.04, விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களில் தகுதி பெற்ற பூசாரிகள் அல்லது அர்ச்சகர்கள் மட்டுமே கருவறைக்குள் செல்லக்கூடும் என்றும், அவர்களும் தினசரி செய்ய வேண்டிய, கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றியேதான் கோயில் கருவறைக்குள் செல்லக்கூடும் என்பதை ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. சைவ சமயத்தைச் சேர்ந்த ஒருவர், வைணவக் கோயில் கருவறைக்குள் சென்று அங்குள்ள தெய்வச் சிலைகளை (மூர்த்திகளை) தொட்டுப் பூசை செய்தாலோ, அல்லது வைணவ மதத்தைச் சார்ந்தவர் எவ்வளவுதான் ஆகம விதிகளையும் வேதங்களையும் கற்றிருந்தாலும் அங்குள்ள மூர்த்திகளைத் தொட்டுப் பூசித்தாலோ அத்தெய்வச் சிலைகள் தீட்டுப் பட்டுவிடும்; சக்தியையும் இழந்துவிடும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூலவர் கோயிலில் ஸ்மார்த்தரான சங்கராச்சாரியார் எப்படி நுழைந்தார்? அத்து மீறும் அட்டகாசங்களைச் செய்தார். இவர் நுழைந்ததன் மூலம் இராமநாதசாமி தீட்டுப் பட்டுவிட்டதா? சக்தியை இழந்துவிட்டதா? என்ன பரிகாரம் செய்ய உத்தேசம்?
மற்றொன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இராமேசுவரம் சென்ற சங்கராச்சாரியாருடன் யார் யார் எல்லாம் சென்றுள்ளனர் என்பதைப் பார்த்தீர்களா?
திருவாளர் ஆடிட்டர் குருமூர்த்தியும், ‘மன்னிப்புப் புகழ்’ எச்.ராஜாவும் உடன் சென்றுள்ளனர்.
சங்கராச்சாரியாருக்கு இவர்கள் என்ன மாப்பிள்ளைத் தோழர்களா? சங்கராச்சாரியாரின் நிழல்போலத் தொடர்வது ஏன்? இந்த வாய்ப்பு பார்ப்பனர் அல்லாதாருக்குக் கிட்டுமா? சிந்திப்பீர்!