பெண்களுக்குத் தற்காப்பு!

மார்ச் 1-15, 2021

“பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கப்படுமா?’’ என்று மத்திய சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், “மாகாண சர்க்கார் அவசியமானதைச் செய்யும்’’ என்று உள்நாட்டு மந்திரியான தோழர் பட்டேல் கூறியிருக்கிறார்.

மாகாண சர்க்கார் இத்துறையில் எதுவும் செய்யும் என்று நம்பிக்கை நமக்கில்லை. ஏனெனில், பெண்களை அடிமைப் பிறவிகளாக நினைக்கும் வைதிக மனப்பான்மை படைத்தவர்களே பெரிதும் மாகாண மந்திரிகளாயிருக்கின்றனர் என்றாலும், இவர்கள், எங்களுக்கு எந்த விடுதலையும் வேண்டாம்! அடிமைத்தனமே ஆனந்தம் என்று சொல்லக்கூடிய பத்தாம் பசலிகளாகவே இருக்கின்றனர்.

 இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கைகள் ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களா-யிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.

தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.

உயர் படிப்புப் படித்துப் பட்டமும் பெற்ற பெண்கள், ஆண்டாள் அன்பு பற்றியும், காரைக்காலம்மையாரின் சிவ பக்தி பற்றியும் பேசிப் பொழுது போக்குகிறார்களென்றால், நம் பெண்களுக்கு நவீன மேல்நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை யென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.

பெண்களுக்கு உத்தியோகம் கொடுப்பதைப்பற்றிப் பேசியுள்ள ஒரிசா முதன் மந்திரியார், போலீஸ் இலாகாவைத் தவிர, மற்ற சர்க்கார் இலாக்காக்களில் பெண்களுக்கு உத்தியோகம் அளிப்பதென்று ஒரிசா சர்க்கார் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இம்மாகாண சர்க்காரைக் காட்டிலும் முற்போக்கான முடிவைச் செய்துள்ள ஒரிசா சர்க்காரை நாம் பாராட்ட வேண்டியதுதான். ஏனெனில், பெண்கள் ஆசிரியர் வேலைக்கும், டாக்டர் வேலைக்கும், நர்சு வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் தவிர, வேறு பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்றே சென்னை சர்க்கார் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

இதைப்பற்றிப் பெண் மந்திரியான தோழியர் ருக்குமணி லட்சுமிபதி அம்மாளுக்குச் சிறிதும் கவலையிருப்பதாகவே தெரியவில்லை. அவர்களிடம் முற்போக்கான திட்டங்களையோ, பெண் இனத்தின் சுதந்திரத்திற்கான முயற்சி-களையோ எதிர்பார்ப்பது, 20 வயதுள்ள இளங்காளை, 75 வயது கிழவியை ஓட்டப்-பந்தயத்திற்குக் கூப்பிடுவது போலவேயாகும்.

ஆனால், ஒரிசா சர்க்கார் போலீஸ் இலாகாவை மட்டும் நீக்கி வைத்திருப்பதன் காரணம் நமக்கு விளங்கவில்லை. போலீ-சாருக்குப் பொதுமக்கள் அஞ்சுகிறார்-களென்றால், அவர்களுக்கிருக்கும் தனிப்பட்ட வலுவினால் அல்ல; அவர்கள் கையில் குண்டாந்தடி அல்லது துப்பாக்கிக்கும், அவர்களுக்குள்ள அதிகாரத்துக்குமே பொது-மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, பெண்கள் கையிலும் போலீஸ் துப்பாக்கியைக் கொடுத்தால், தபாலாபீசைக் கொளுத்திய ‘மாஜி ஆகஸ்ட் வீரன்’ கூட அவரைக் கண்டு ஓட்டம் பிடிப்பான் என்பது நிச்சயம்.

இரஷ்யாவில் பெண் போலீஸ் மிகத் திறமையாக வேலை செய்கிறது. இரஷ்யப் பெண்கள் விமானத்திலிருந்து ‘பாரசூட்’ மூலம் குதிப்பதிலும் வல்லுநர் எனப் பெயர் பெற்றிருக்கின்றனர்.

இந்நாட்டிலும் போலீஸ் வேலை செய்யும் துணிவும், திறமையும், ஆசையும் உள்ள பெண்கள் ஆயிரக்கணக்கிலிருக்கின்றனர். பெண்கள் படிப்பதே பெரிய அதிசயமாகவும், சைக்கிள் விடுவதை வேடிக்கையாகவும் கருதப்-பட்டதுபோலவே, போலீஸ் உத்தியோகமும் சில ஆண்டுகள் வரையில் அதிசயமாகத் தோன்றலாம். பிறகு, நாளடைவில் அதுவும் இயற்கைக் காட்சியாகவே போய்விடும்.

எனவே, பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், நகை பீரோவாகவும், உடை ஸ்டாண்டாகவும்தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் துரவுபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். பெரோவிஸ்காயா போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.

(18.11.1946 _ ‘விடுதலை’ இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *