நம் இதய மலர்வளையம்!

மார்ச் 1-15, 2021

நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 95 ஆண்டு வரை வாழ வைத்து, அதற்குப் பிறகு அய்ந்து ஆண்டுக் காலம், அவர்கள் விட்டுச் சென்ற பணியை, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவிதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்து, வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித் தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும்வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை

ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் ஆவார்கள். உலகில் எந்த ஒரு தாயும் இவ்வளவு ஏச்சையும், பழிப்பையும், அவதூறையும், ஏளனத்தையும், கேலி – கிண்டலையும், அவமானத்தையும் சுமந்திருப்பார்களா என்றால், அவரது வாழ்வின் எல்லாக் கட்டங்களையும் அறிந்தவர்கள், “இல்லை’’ என்றே பதில் அளிப்பர். வடஆர்க்காடு வேலூரில் செல்வக் குடும்பத்தில் செல்லப் பெண்ணாக இருந்த அவரை, தந்தை பெரியாரின் தன்மான இயக்கம், மாணவப் பருவத்திலேயே ஈர்த்தது.

அவருடைய தந்தையார் திரு. கனகசபை அவர்கள் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் அணுக்கத் தொண்டர் – தோழர். அய்யா அவர்கள் வேலூருக்கு வந்தால் தங்கும் இல்லம் அவர்களது இல்லமே!

அது கழகத்தவருக்குப் புகல் இல்லம்; விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றது. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தன்மானப் பெரும் புலவர் கோவிந்தன், தோழர் ஏ.பி. ஜனார்த்தனம் எம்.ஏ., முதலானோர் இதனை மிக நன்றாக அறிந்தவர்கள்; அனுபவம் வாயிலாகவும் தெரிந்தவர்கள்.

காந்திமதியாக இருந்த அம்மா அவர்கள் தனித்தமிழ்ப் பற்றாளர், மறைந்த பெரியவர் கு.மு. அண்ணல்தங்கோ அவர்களால்

கே. அரசியல்மணி என்று ஆக்கப்பட்டார்கள்.

அது கே.ஏ. மணியாகச் சுருங்கியது.

“திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே தவிர, மற்றபடி இது இயக்கத்தின் பாதுகாப்புக் கருதிச் செய்யப்படும் ஓர் ஏற்பாடே ஆகும்’’ என்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்ட நிலையில் கே.ஏ.மணியம்மையார் ஈ.வெ.ரா.மணியம்மையார் ஆனார்கள் – அய்யா அவர்களால்.

1940 முதற்கொண்டே மாணவப் பருவத்திலிருந்தே அம்மா, அய்யாவை அறிவார்கள். அய்யாவின் கொள்கை ஈர்ப்பினால் அய்யாவுக்குத் தொண்டு செய்து, அதன்மூலம் விளம்பரம் விரும்பாத இயக்கப் பணியும் செய்ய விரும்பினார்கள்.

பின்பு அம்மா அவர்கள் அய்யாவின் வாழ்க்கைத் துணைவி ஆனார்கள்.

அய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதிவரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு!

ஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் தியாகம் செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் இளமையையே தியாகம் செய்தார்கள்!

பிறகு மானத்தையும் கூட தியாகம் செய்தார்! இனமானம் தன்மானத்தினும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்!

அய்யாவின் திருமணத்தைக் காட்டிப் பிரிந்து, தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சர் ஆன பிறகு ஒரு நாள் அவர்களது இல்லத்தில்  சந்தித்தபோது சொன்னார்கள். “விடுதலை’’ நிருவாகி தோழர் சம்பந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள். “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது; மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்ல; அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது’’ என்று சொன்னார்கள்!

இதை மனந்திறந்து அண்ணா அவர்களே கூறினார்கள் என்றால், இதைவிட அம்மாவின் தொண்டுக்கும், தியாகத்துக்கும் வேறு சான்று வேண்டுமா?

தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்!

அனாதைகள் என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப் பெற்ற குழந்தைகளைக் கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அவர்கள் எடுத்து  வளர்த்து ஆளாக்கினார்கள்.

நன்றி பாராட்டாத தொண்டு என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கியமானார்கள்!

எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்றொன்று போட்டியிட்டு நின்றன!

உடல் சோர்வுற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது!

தந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தினை தலைமை தாங்கிக் கட்டிக் காத்தாரே அந்த வரலாறே, பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை!

அவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அம்மாவுக்குத் தெரியாமல் (பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துக்களையும் ஓர் அறக்கட்டளையாக்கிக் கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்!

அந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலக் கொள்கைப் பாசத்தையே கொட்டினார்!

இதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா?

அய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது அம்மாவின் சிக்கனம். ஆம், அய்யாவிடம் கற்றதுதானே அது!

அம்மா கண்ட களங்கள் பல – புறநானூற்றுத் தாயாக அவர் வீறுகொண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். திருச்சி சிறையில் 1958இல் மாண்ட ஜாதி ஒழிப்பு வீரர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் புதைக்கப்பட்ட சடலங்களை, முதல்வர் காமராஜருடன் வாதாடித் திரும்பப் பெற்றதும், திருவையாறு ஜாதி ஒழிப்பு வீரர் மஜித் மறைந்தபோது நடுநிசியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தலைமை தாங்கியதும், 1974ஆம் ஆண்டு சென்னையில்  இராவண லீலா நடத்தியதும் அவர் ஒரு தன்னிகரற்ற வீரத்தாய் என்பதற்கான காலப்பெட்டகங்கள்!

கைவிடப் பெற்ற குழந்தைகளைக் காப்பாற்ற ஏற்பாடுகளைச் செய்தபோது, கருணைத் தாயாக அவர்கள் காட்சியளித்தார்கள்!

சென்னை, பெரியார் திடலில் அய்ந்து மாடிக் கட்டடத்தை எழுப்பி, நெருக்கடி கால நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட போதும் தளராது செய்த பணியினால் அவர் ஒரு சரியான தலைவர், நிலையான தொண்டு செய்து நிலைத்தவர், என்ற வைர வரிகளுக்குச் சொந்தமானார்கள்!

என் சொந்த அன்னையை அறியாத நான், அய்யாவை அறிவுத் தந்தையாக ஏற்றுக் கொண்டு அந்த அன்னையை என் அறிவு அன்னையாக ஏற்றுக் கொண்டவன்.

அய்யாவும், அம்மாவும் காட்டிய வழியிலே எங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். அம்மா அவர்களின் சொல்லாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், அறிவாற்றல், கொடை ஆற்றல், தொண்டாற்றல் ஆகிய பல்வகை ஆற்றலை நாடு அறிந்தது; நானிலம் வியந்தது!

அன்னை நாகம்மையார் – அன்னை மணியம்மையார் என்ற இருவரது அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று தொண்டர்கள் – நம் தோழர்கள் இன்றும் எண்ணி எண்ணிப் பூரிக்கின்றனர்!

புதுவாழ்வு பெற்ற கிள்ளை போன்ற பிள்ளைகள்  -படிப்புரிமை பெற்று அடுப்புரிமை மறுத்த மகளிர் – எல்லாம் அய்யா அம்மாவின் அருட்கொடைதானே!

எமது நீங்கா நினைவின் அன்புச் சிறைக்குள் உள்ள எங்கள் அன்னையே!  இதுவே எங்கள் இதய மலர்வளையம் – உங்கள் நினைவிடத்தில்.

– கி.வீரமணி,

 ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *