கடந்த டிசம்பர் 1 – 15 ‘உண்மை’ இதழ், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் சிறப்பிதழ் மிக மிக அருமையாக இருந்தது. இதழின் தொடக்கத்திலே வரவேற்கிறேன் என்று ஆசிரியர் அவர்களை வரவேற்கும் வகையில் தந்தை பெரியாரின் கருத்துரை சிறப்பு. “இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி!’’ என்று ஆசிரியர் அவர்களைப் பற்றி அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை அருமை. ஆசிரியர் அவர்களின் இயக்க வரலாறான தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில் பகுதி ‘ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்’. ‘இந்து மதம் ஒழிவது நல்லது’ என்று அண்ணல் அம்பேத்கர் எழுதிய சுவடுகள் பகுதி, வளம்பெற வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகள் ஒரு பார்வை, ஆசிரியர் அவர்களின் கேள்வி பதில்கள், மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் உடல்நலக் கட்டுரை, ஆசிரியர் அய்யா அவர்களைப் பற்றி அறிஞர்கள் பலரும் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், குறிப்புகள் இவை அனைத்தும் மிக மிக அருமையாக இருந்தன. அறிவுப் பெட்டகமாக பகுத்தறிவுச் சுரங்கமாக ஏராளமான கருத்துக் கருவூலங்களை சுமந்து வரும் ‘உண்மை’ இதழை நான் படிப்பதோடு மட்டுமன்றி பலருக்கும் வழங்கி வருகிறேன்.
மிக்க அன்புடன்,
– கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி
டிசம்பர் 1 – 15 2020 ‘உண்மை’ இதழின் முகப்பு அட்டைப் படமாக என்றும் பதினாறு இளமை பதினாறு போல் இருந்துவரும் நம் தமிழினத் தலைவர் கி.வீரமணி அவர்களின் புன்னகை பூக்கும் புகைப்படம் கண்டேன், களித்தேன்! டிசம்பர் 2 அவரது பிறந்த நாளை, ‘சுயமரியாதை நாள்’ எனக் குறிப்பிட்டிருப்பது, நம் இளைய பெரியாருக்குப் பொருத்தமான வைர வரிகளே. சுயமரியாதையின் சுடரொளியே நீர் வாழ்க வளமுடன்! நலமுடன்!
“தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும், பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!’’ எனும் தலைப்பில் ஆசிரியர் எழுதிய தலையங்கம் அருமை!
“வாழ்வியல் சிந்தனைத் துளி’’ தேன்துளிகள்! பன்முகத் திறன்மிகக் கொண்ட தலைவர் எனும் தலைப்பில் பெரு.இளங்கோவன் எழுதிய கவிதை கற்கண்டாய் இனித்தது!
மஞ்சை வசந்தன் தீட்டிய இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி எனும் கட்டுரைக்கு ஈடு இணை எதுவும் இல்லை! தலைவர் அவர்கள், போராட்டம் என்றால் முதலில் கழகக் கொடியை கையேந்திப் பிடிப்பவர். மற்ற தலைவர்கள் இவரை வழிகாட்டியாக நினைத்து இவரைப போன்று கொடிபிடித்து தொண்டர்களுக்கு உற்சாகத்தை வழங்குவார்களா?
“களப் போராளி ஆசிரியர்!’’ எனும் தலைப்பில் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் எழுதிய கவிதை வரிகள் ஒவ்வொன்றும், ஆசிரியர் புகழுக்கு மணிமகுடமாக அமைந்திருந்தது.
அன்புடன்,
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
மானமிகு அய்யா,
வணக்கம். டிசம்பர் 1 – 15 ‘உண்மை’ படித்தேன். மிகச் சிறப்பாக உள்ளது. பக்கத்திற்குப் பக்கம் மிகத்தரமான செய்திகள், மஞ்சை வசந்தனின், ‘இனத்தைக் காத்து நிற்கும் இணையிலா வழிகாட்டி’ கட்டுரையின் மூலம் ஆசிரியரின் ஓய்வறியாப் போரையும், அய்யாவை உலகமயமாக்க எடுத்த முயற்சிகளையும் அறிய முடிகிறது. ‘அதானே பார்த்தேன்’ என்ற பொன்.ராமச்சந்திரன் எழுதிய நாடகத்தின் மூலம் அய்யா எடுத்த பெண்ணுரிமைப் போரில், தாலியகற்றம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆரிய உறுப்பினர்கள் மூலம் உணர வைத்தது சிறப்பு. முனைவர் வா.நேரு அவர்கள் எழுதிய, ‘நமக்கு தித்திக்கும் நாள்’ எனும் கட்டுரை சிறப்பு. ஆசிரியர் அய்யாவின் பன்முகத் தன்மையைக் காட்டும் கட்டுரை அது.
தோழர் அ.மார்க்ஸ் அவர்களின் வாக்குமூலமாக ஆசிரியரையும், தி.க. தோழர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார். மொத்தத்தில் எல்லாப் பக்கங்களும் தித்திக்கின்றன.
அன்புடன்,
– பெரி.காளியப்பன், மதுரை-11
Leave a Reply