கொரோனா பெருந்தொற்று நோய்க் காலமான இந்தப் பேரிடர் – பேரிழப்புக் காலத்தில் மாணவர்களின் உடல் நலனும், மனநலனும் முக்கியம். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய நிலையில் அவர்களுடைய பார்வைத் திறன் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புப் பெருகிவிட்டன. பள்ளியில் வகுப்புகள் இல்லாத நிலையில், காணொலி வகுப்பு மூலம் தினந்தோறும் பல மணி நேரம் ஓய்வின்றி அவர்கள் செல்போன், கணினி, தொலைக்காட்சி எனத் தொடர்ச்சியாகத் தங்களின் பார்வைத் திறனைத் தங்கள் சக்திக்கு மேற்கொண்டு செலவு செய்து ‘கண்’ என்னும் சிறந்த உறுப்பின் செயல்பாட்டினை இழக்காமல், காப்பாற்றிக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது. அதிக நேரம் ஒளித் திரைகளைக் காண நேரிடும் மாணவர்களின் கண்களைப் பாதுகாக்க சில எளிய முறைகளைப் பார்ப்போம்.
வழக்கமாக எதையாவது நாம் படிக்கும்போது கண்களுக்கும் புத்தகத்திற்கும் இடையே 16 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். செல்லிடப்பேசி திரைகளைப் பார்க்கும்போது அந்த இடைவெளி 10 அல்லது 12 அங்குலமாகக் குறைந்து விடுகிறது. இந்த இடைவெளியில்தான் திரையில் காட்சியைக் காணமுடியும் என்பதால் கண்கள் சுருங்கி, சோர்வை ஏற்படுத்தும். இந்த இடைவெளிக்கு அப்பால் உள்ள பொருள்களை காண முடியாததால், சில நாள்களுக்குப் பிறகு விழி – களைப்பு ஏற்பட்டு, கண் தசைகளுக்குச் சிரமம் ஏற்பட்டு தலைவலியாக மாறக்கூடும் அல்லது பார்வைக் குறைபாடு ஏற்படக்கூடும். திரை பயன்பாட்டுக்கும் கிட்டப் பார்வைக்கும் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும், அண்மைக்காலமாக செல்லிடப்பேசியை பயன்படுத்தும் குழந்தைகளிடையே கிட்டப் பார்வை குறைபாடு அதிகரித்துக் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையில் இருந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ள கணினி அல்லது செல்லிடப்பேசிகளை 2 அடி தூரத்தில், கண்களுக்கு நேராக வைத்துக் கொள்வது நல்லது. திரையை நேரடியாக பார்க்காத வகையில் சாய்வாக வைத்துக்கொள்வதும் உதவியாக இருக்கும். 2 அடிக்கும் குறைவான இடைவெளியில் திரையை வைத்திருக்கும் போது காட்சிப் பொருள்களைப் பார்க்க கண்களை அழுத்த வேண்டியிருக்கும். இது கண்களின் நலனை வெகுவாகப் பாதித்து, கிட்டப் பார்வைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தங்கள் முழங்கையை மேஜை மீது வைத்து, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். முழங்கையைத் தூக்கி திரையைத் தொட வேண்டும். இதுதான் கணினியோடு கொண்டிருக்கும் நெருக்கமான இடைவெளியாக இருக்க வேண்டும். இதன்மூலம் கண்களைப் பாதுகாத்து கொள்ள முடியும்.
கணினி அல்லது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு அளிப்பது அவசியமாகும். அதற்கு 20:20:20 விதியைக் கையாளலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவதொரு பொருளை 20 விநாடிகள் பார்க்க வேண்டும்.
இது கண்களுக்குத் தேவையான ஓய்வை அளிப்பதோடு, கண்கள் இயல்பாகச் செயல்பட உதவியாக இருக்கும்.
மேற்கண்ட எளிய வழிகளை – பயிற்சிகளை மேற்கொள்ளுவது மாணவர்களின் பார்வைத் திறனைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
– மேக்சிமஸ்
Leave a Reply