‘‘இப்பொங்கல் பண்டிகையின் தத்துவம் என்னவென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’
‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’
– பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா – திராவிடர் – தமிழர் திருவிழா – பண்பாட்டு அடிப்படையில் அமைந்தது; பகுத்தறிவு அடிப்படையிலும் பெருமை உடையது. ‘அறுவடைத் திருநாள்’ என்று உலகெங்கும் கொண்டாடும் உழவர் தம் உழைப்பின் வெற்றியை எண்ணி உவகை பொங்கக் கொண்டாடப்படும் உன்னதத் திருவிழா!
திராவிடப் பண்பாடு – மனுதர்ம ஆரியப் பண்பாட்டுக்கு நேர் எதிரானது. எப்படி? ஏன்?
ஆரியப் பண்பாட்டின் அகம் மனுதர்ம சாஸ்திரம்.
அதில்,
உலகத்தாரின் உயிருக்கே பாதுகாப்பான உணவைத் தரும் வேளாண்மையை எவ்வளவு கொச்சைப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்.
‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது; ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையையும், மண்வெட்டியையும், பூமியையும், பூமியில் உண்டான பல ஜந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?’’
– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 84).
இதற்கு முந்தைய சுலோகம் கூறுவதென்ன?
‘‘பிராமணனும், க்ஷத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்த போதிலும், அதிக ஹிம்சையுள்ளதாயும், பராதீனமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது.’’ (‘‘அதைச் செய்யாவிட்டால், ஜீவனம் நடக்காத காலத்தில் அதையும் அந்நியனைக் கொண்டு செய்விக்க வேண்டும்‘’ என்பது முன் சுலோகத்தின் கருத்து)
– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 83).
இதற்கு முன் சுலோகம் கூறுவதென்ன? பார்ப்போமா!
‘‘தன் ஜாதித் தொழில், க்ஷத்திரிய ஜாதித் தொழில் இரண்டினாலும் ஜீவிக்கக் கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல், வியாபாரஞ் செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.’’
– (மனு அத்தியாயம் 10; சுலோகம் 82).
இந்த சுலோகத்திற்குமுன் உள்ள சுலோகம் (அத்தியாயம் 10, சுலோகம் 81) கூறுவது என்ன?
‘‘பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன் தொழிலினால் ஜீவிக்கக் கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகார முதலிய க்ஷத்திரியன் தொழிலினால் ஜீவிக்க வேண்டியது. ஏனென்றால், அது அவனுக்கு அடுத்த ஜாதியின் தொழில் அல்லவா?
(ஆதாரம்: ‘‘அசல் மனுதர்மம்‘’, பதிப்பு 1919, திருவைந்திரபுரம் – கோமாண்டூர் – இராமாநுஜாசாரியார் – வடமொழி, சமஸ்கிருத பாஷையில் உள்ளது)
பக்கம் 295.
இதன் கருத்து:
1. பயிரிடுதல் மிகவும் மோசமான தொழில் – நல்ல தொழில் அல்ல.
2. அவனவன், அவனவன் தொழிலையே செய்யவேண்டும்.
3. அது முடியாத காலங்களில், தவிர்க்க முடியாத பட்சத்தில் இந்தப் பயிர்த் தொழிலையும் மாற்றிச்
செய்து, உயிர்களைக் காப்பாற்றலாம் (வெறுப்புடன் விதிவிலக்கு).
ஆனால், மனித குலத்தையே ஓர் குடும்பமாகப் பார்க்கும் மகத்தான திராவிடர் பண்பு பூத்துக் குலுங்கும் திருக்குறள் – உழவின் சிறப்புபற்றி ஒரு தனி அதிகாரத்தையே – 10 குறள்பாக்களில் படைத்துக் காட்டி – காரண காரிய விளக்கத்துடன் பெருமைப்படுத்துகிறது!
அதிகாரம் 104 – ‘உழவு’ என்ற தலைப்பில்,
‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’ (குறள் 1031)
எனத் தொடங்கி, 10 குறள்பாக்களில் உழவின் சிறப்பை வானளாவிய வகையில் புகழுகிறார் வள்ளுவர்!
ஒரு குலத்துக்கொரு நீதி – தொழில் பேசுகிறது மனு!
மக்களை ஜாதிப் பார்வையால் பிரித்து அளக்கிறது, பிளக்கிறது! – அது ஆரியம்.
ஆனால், திருக்குறளோ இந்தப் பத்துக் குறள்களில் உலகத்தையே – மனித குலத்தையே ஒன்றுபடுத்தி ஒரே அணியாய்ப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கூறுகிறது என்பதற்கு சான்றுகள்தான் உலகம், உலகம் என்று பலமுறை கூறி, உறுதிப்படுத்தும் பரந்த பார்வை (Inclusiveness). இது திராவிடப் பண்பாடு!
மனுவோ, உழவை சூத்திரர்கள், வைசியர்கள் செய்யும் தொழில் என்று வெறுப்புடன் பார்த்து, உயிர்காப்பதைக்கூட, பின்னுக்குத் தள்ளி, பிளவுபடுத்திப் பிரித்து வைக்கிறது (Exclusiveness). இது ஆரியப் பண்பாடு.
எனவே, திராவிடப் பண்பாட்டுத் திருவிழா – பொங்கல் விழா – உழவர் திருநாள் – அறுவடைத் திருவிழா என்பது அய்யந்திரிபற விளங்குகிறது அல்லவா?
மேலும் எவ்வித தனிச்சிறப்புமற்ற ஆரியப் பண்டிகைகளுக்கு இல்லாத தனிச்சிறப்பு திராவிடப் பண்பாட்டுத் திருவிழாவிற்கு உண்டு. இவ்விழா ஒரு மதம்சார்ந்த விழா (தீபாவளி போல) அல்ல! அனைத்து உழவர்களும், மக்களும் பிறவிபேதமின்றி மகிழ்ந்து நன்றி செலுத்திக் (Thanks giving) கொண்டாடுவதாகும். இயற்கைக்கு – உழைப்போருக்கு – உழைப்பில் உதவிடும் மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் பேதமின்றி நன்றி பாராட்டும் பேதம் நீக்கிய பெருவிழா – திருவிழா!
தீபாவளி கதை கட்டுக்கதை. புராணக் கதையில்கூட உயிர்க்கொலைகள் – கொலைகளைக் கொண்டாடும் பண்டிகை!
இங்கோ புதுப்பொங்கல்! புத்துலகுக்குத் தெம்பூட்டும் புது வெள்ள மகிழ்ச்சி – புது நம்பிக்கை பூத்துக் குலுங்கும் புத்தெழுச்சித் திருவிழா! பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து, ஜாதி, மத, பேதம் ஒழித்த ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என உலகுக்குப் பறைசாற்றும் அனைவருக்குமான திராவிடத் திருவிழா!
ஆரியப் பண்டிகை மற்ற இந்து மதப் பண்டிகைகள் – அசுரர்களைக் கொன்றனர் தேவர்கள் என்று இனப் போராட்ட மறைவு வைத்த புனைவுகள்தானே!
அது செயற்கை (கற்பனை) – பொங்கல் விழா இயற்கையானது – உண்மையும்கூட!
திராவிடர் இயக்கம் இதனை மீட்டெடுத்து, திராவிடர்தம் திருவிழா என்று பகுத்தறிவுடன் விளக்கி செம்மாந்து நிற்கிறது!
ஆய்வு அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள், மற்றொரு புதிய கோணத்தில் பொங்கல் விழாவை விளக்குகிறார்!
‘‘தமிழர்களின் தனிப்பெரும் திருவிழாவாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.
பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப் பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும், மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து, இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன், தைப் பொங்கல் இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திருவிளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றுள் கிழங்கு வகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பனர்களாலும், பெருங்கோவில்களாலும் காலங்காலமாக விலக்கப்பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்சொன்ன இரண்டு செய்திகளாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும், அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.’’
– தொ.ப.சி. ‘‘பண்பாட்டு அசைவுகள்’’, நூல் பக்கம் 56)
திராவிடர் இயக்கம் – அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, திராவிடர் கழகம், இனமான தமிழ் உணர்வாளர்கள் பொங்கல் விழாவைப் பொலிவுடன் கொண்டாடுவதை – எப்படியெல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை விரட்டிடும் வீரம் செழிக்கும் விழா என்பதை – பூரித்து வாழ்த்துகிறார் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
‘‘பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,
போற்றி விழாக் கொண்டாடி உன் நலத்தைச்
செத்தவரை மறந்தாலும், மறவா வண்ணம்
செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!
பத்தரை மாற்றுத் தங்கம் ஒளி மாய்ந் தாலும்
பற்றுள்ளத்தில் உன் பழஞ்சீர் மங்கிற் றில்லை.’’
‘‘தமிழகமே, திராவிடமே, தைம்மு தல்நாள்
தன்னில் உன்னை வாயார வாழ்த்து கின்றேன்
அமிழ்தான பாற்பொங்கல் ஆர உண்டே
அதைஒக்கும் தமிழாலே வாழ்த்து கின்றேன்;
எமைஒப்பார் எவருள்ளார்? எம்மை வெல்வார்
இந்நிலத்தில் பிறந்ததில்லை; பிறப்ப தில்லை.
இமைப்போதும் பழிகொண்டு வாழ்ந்த தில்லை
எனும்உணர்வால் வாழ்த்துகின்றேன்; வாய்ப்பேச் சல்ல.
– கி.வீரமணி
ஆசிரியர்