கே: “பிராமணர், ஷத்திரியர், வைசியர் என்று அழைப்பதை ஏற்கும்போது, சூத்திரர்களை ‘சூத்திரன்’ என்று அழைக்கும்போது மட்டும் எதிர்ப்பது ஏன்? என்ற பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாகூரின் திமிரை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– அ. தமிழரசி, மதுரை
ப: மாலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் முக்கியக் குற்றவாளி _ ஜாமீனில் வெளியே வந்து எம்.பி. ஆன (பா.ஜ.க.வின்) பொது ஒழுக்கத்திற்கும் அரசியல் நடைமுறைக்கும் இது ஒரு ‘சாம்பிள்’) இந்த சாமியாரிணியின் திமிர்வாதம் _ மத்தியில் காவிக் ஆட்சி இருப்பதால் தலைதுள்ளி ஆடுவதன் அடையாளம் இது! வரலாறு உரிய பாடம் கற்பிக்கும் காலம் வராமலா போகும்? பொறுத்திருந்து பாருங்கள்! (‘விடுதலை’யில் இதுபற்றி விரிவான விளக்கம் சென்ற வாரம் வந்துள்ளது.)
கே: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் பாசிசச் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து எதிர்க்க வேண்டாமா? மம்தாவை தனித்து விடுவது ஏன்?
– க.முனியன், வேலூர்
ப: எதிர்க்கட்சிகள், பொது எதிரியை மய்யப்படுத்தத் தவறுவதினால்தான் இப்படி பாசிசம் படமெடுத்தாடும் நிலை நாட்டில் நாளும் வளர்ந்து வருகிறது. தங்களைப் பின்னே தள்ளி, பொது ஆபத்தை _ மதவெறித் தீ பரவுவதைத் _ தடுக்க ஓர் அணி நின்றால் பணி மிக எளிதாகிவிடும்! செய்ய முன் வரவேண்டும்!
கே: விவசாயிகள் போராட்டம் பற்றி தனது கருத்தைக் கூறும் உச்சநீதிமன்றம், திருத்தச் சட்டங்களுக்கு தடை விதிக்கத் தயங்குவதேன்? உச்சநீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் உண்டல்லவா?
– மா. வேலு, காஞ்சி
ப: ‘பாம்புக்கும் நோகாமல், பாம்படித்த கோலுக்கும் நோகாமல்’ என்னும் சொலவடைதான் நினைவுக்கு வருகிறது!
கே: தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் இன்னும் அதிக அளவு விழிப்புணர்வு, எதிர்ப்புணர்வு ஏற்படுத்தி சட்டமன்றத் தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்ய தி.மு.க. கூட்டணி அதிகளவில் பிரச்சாரங்களை கிராமங்கிராமமாக மேற்கொள்ள வேண்டாமா?
– பா.முத்துச்சாமி, சோத்துப்பாக்கம்
ப: நிச்சயம் செய்வார்கள் -_ செய்வோம்! செய்துகொண்டுதான் உள்ளோம்!
கே: ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஜாதியற்ற சமுதாயத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு எதிரானதாக உயர்நீதிமன்றம் கருதுவது சரியா?
– அ.கன்னியப்பன், திருவள்ளூர்
ப: தவறான கருத்து; ஜாதியை முக்கிய அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீடு, ஜாதி மறுப்புத் திருமணம் என்பவை நடைமுறையில் உள்ளன. ‘ஜாதி’யை (சொல்) 18 இடங்களில் அரசியல் சட்டம் கூறுகிறது! இந்நிலையில் சமூகநீதிக்கு ஆதாரம் கேட்கும் உச்சநீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றத்தின் கருத்தேகூட முரணானதல்லவா?
கே: விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து அழுத்தம் தரும் நிலையில், ரெங்கநாதன் மாறுபட்ட கருத்தைக் கூறுவது அறியாமையா _ அரசியலா?
– வே.கோபால், வியாசர்பாடி
ப: நண்பர் ஸ்ரீமான் ரங்கநாதய்யர் எப்போதும் மிராசுகள் (‘கார்ப்பரேட்’) பக்கம் -நிற்கும் குட்டி கார்ப்பரேட் தானே! அவர் அ.தி.மு.க., மோடி பக்கம்தான் நிற்பார்!
கே: பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கையும், எடப்பாடி அரசு அதற்குத் துணை போவதையும் விளக்கி கையடங்கு நூலாக லட்சக்கணக்கில தி.மு.க. கூட்டணி இப்பொழுதே வீடுவீடாக அளித்தால் என்ன?
– தீ.சந்திரன், சென்னை
ப: பிரச்சார உத்திகளை நிச்சயம் மேலோங்கச் செய்வர். நாமும் செய்வோம்! ‘மயக்க பிஸ்கட் எச்சரிக்கை’ போன்ற வெளியீடுகள் தொடர்ந்து வெளிவருவது உறுதி!
கே: பொய்யான 2-ஜி வழக்கை மீண்டும் எடுத்து, தி.மு.க.வுக்கு நெருக்கடி தர முயலும் பா.ஜ.க.வின் முயற்சி – எந்த நம்பிக்கையில்?
– முகமது, மாதவரம்
ப: 1. தங்களிடம் அதிகாரம் இருப்பதால் ‘அப்பீல்’. 2. பிரச்சாரத்திற்குப் பயன்படுமே என்கிற உத்தி _ வித்தை! மற்றபடி அவர்களுக்கு அது பயன் தராது.
கே: இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகள் வலுவுடன் ஒன்றிணைய சரியான வாய்ப்பு _ தருணமல்லவா? உடனே நடக்க தாங்கள் முன்னெடுப்பீர்களா?
– பாஸ்கர், சேலம்
ப: இந்தச் சூழலில் தேவை அது! நம்மால் அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த வைக்கும் வாய்ப்புக் குறைவே! இதுதான் யதார்த்தம்!
Leave a Reply