முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!

ஜனவரி 01-15, 2021

 மஞ்சை வசந்தன் 

தமிழர் வாழ்வு என்பது ஆரியர் வருகைக்குமுன் தரணிக்கே வழிகாட்டும் வகையில் தரமுடையதாய், நாகரிகம் மிகுந்ததாய் இருந்தது. ஆனால், ஆரியர் வந்து கலந்து ஆதிக்கம் செலுத்தியபின் எல்லாம் தகர்ந்தது; அவர்களின் பண்பாட்டை நோக்கி நகர்ந்தது.

தமிழர் திருமணம்: மண வயது வந்த ஆணும் பெண்ணும் தனிமையில் சந்தித்து, காதல் வளர்த்து பின் அவர்களே கைப்படத் தொடுத்த மாலையை அணிவித்து இல்வாழ்வைத் தொடங்கினர்.

ஜாதி, மதம், உறவு என்ற எந்த வட்டத்திலும் அவர்கள் சிக்க வாய்ப்பே இல்லை. காரணம் அன்றைக்கு தமிழரிடம் அப்பாகுபாடுகள் இல்லை.

”யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும்எம் முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி யறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடைய நெஞ்சம் தாம்கலந் தனவே”

(குறுந்தொகை – 40)

என்ற பாடல் இவ்வுண்மையை விளக்கி உறுதி செய்கிறது.

அதேபோல், சோதிடப் பொருத்தம் போன்ற மூடநம்பிக்கைகள் ஏதும் இன்றி, அறிவிற்குகந்த பொருத்தங்களையே கருத்தில் கொண்டனர்.

பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு,

உருவு, நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.

(தொல் – பொரு – 1219)

1.            நற்குடிப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

2.            பிறந்தால் போதாது. அந்நற்குடிக்கேற்ற நல்லொழுக்கம் இருவரிடமும் இருக்க வேண்டும். பிறப்பு வேறு, குடிமை வேறு எனப் பிரிக்கிறார்.

3.            இருவரிடமும் ஆண்மை _ ஆளுமை ஒத்திருக்க வேண்டும்.

4.            அகவை ஒப்புமை வேண்டும். காலத்திற்கு ஒப்ப வயது ஒப்புமை பார்க்க வேண்டும்.

5.            உருவு _ வடிவ ஒப்புமையும் வேண்டும். பார்ப்பவர் பொருத்தமான சோடி என்னும்படி உயரம், பருமன் இருக்க வேண்டும்.

6.            நிறுத்த காம வாயில் என்பது தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து. உடலில் அமைந்த காம நுகர்வுக்கான உடல், உள்ளக் கூறுகள். ஒருவர் மிக்க காமவெறியுடையவராகவும் மற்றவர் அளவாகத் துய்ப்பவராகவும் இருந்தால் ஒத்துவராது.

7.            நிறை _ மனத்தைத் திருமணமான பின் கண்டவாறு ஓடவிடாது தடுத்து நிறுத்துதல். நிறுத்துதல் நிறை. மறை பிறர் அறியாது நிறுத்தல். இது மன நிறை, அடக்குதல், தடுத்து நிறுத்துதல் யாவும் அடங்கும்.

8.            அருளுடைமையும் அதன் அடிப்படையான அன்பும் உடையவர்களாக இருவரும் திகழ வேண்டும்.

9.            உணர்வு _ ஒருவரை ஒருவர் அறிதல்; புரிந்து கொள்ளுதல்; உலகியலறிதல் வேண்டும்.

10.          திரு _ செல்வம்.

இப்பொருத்தங்களே இணையர்க்கிடையே பார்க்கப்பட்டது.

தனிமையில் சந்தித்து காதல் வளர்த்து இல்வாழ்வில் இணைந்து வாழ்ந்த தமிழர்கள்  மத்தியில் சிலர், சில காலம் வாழ்ந்து, பின் இப்பெண்ணுக்கும் எனக்கும் தொடர்பில்லை யென்று கைவிடும் நிலை வரவே பலர் அறிய நடத்தும் திருமணத்தை தமிழ்ச் சான்றோர் உருவாக்கினர்.

அந்த திருமண நிகழ்வில்கூட மூடச்சடங்குகள் எதுவும் இல்லை. இதைக் கீழ்க்கண்ட பாடல் தெளிவாக விளக்குகிறது.

“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை

பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி

மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்       

கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்

கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென

உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்       

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

கற்பினின் வழாஅ நற்பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை யாகென

நீரோடு சொரிந்த ஈரிதழ் அலரி       

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர

ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.”

(அகநானூறு – மருதம் – 86)

விடியற்காலை மணற்பரப்பில் மணப்பெண்ணை அமர்த்தி, நீராட்டி, புத்தாடை அணிவித்து, இல்வாழ்வில் மணமக்களை ஈடுபடுத்தினர். உளுந்தங்களி விருந்தாக வழங்கினர். மற்றபடி தாலி, மந்திரம், நெருப்பு வளர்த்தல் போன்ற எச்சடங்கும் இல்லை.

ஆனால், ஆரியர் நுழைந்து கலந்து அவர்கள் பண்பாட்டுத் திணிப்பு நிகழ்ந்த பின், தமிழர் மணமுறை முற்றாக மாறியது.

அவர்களால் திணிக்கப்பட்ட ஜாதி, மதம், சோதிடம், சடங்கு, தீ வளர்த்தல், புரோகிதர் மந்திரம் சொல்லல் போன்றவை மணநிகழ்வில் புகுத்தப்பட்டன.

இணையர் தேர்வில் ஜாதி முதன்மையாகப் பார்க்கப்படும் அவலம் வந்து சேர்ந்தது. இன்றைக்கு ஜாதி மாறி திருமணம் செய்ய முயன்றால் பெற்ற பிள்ளையையே கொல்லும் ஜாதிவெறிக் கொலைகள் நடக்கும் அளவுக்கு ஆரியப் பண்பாட்டு நுழைவு தமிழர்களைச் சீரழித்துள்ளது.

திருமணத்திற்கு முன் ஆரியர் புகுத்திய சோதிடப் பொருத்தம் பார்க்கும் மடமை வளர்ந்தது. செவ்வாய் தோஷம், மூலம், கேட்டை என்று ஆரியர் நுழைத்த மூடநம்பிக்கைகள் பலரின் வாழ்வைப் பாழடித்து வருகிறது.

பெண்ணை ஒரு பொருளாகக் கருதி தானம் கொடுக்கும் கன்னிகாதானம் என்ற ஆரியப் பண்பாடு தமிழர் மத்தியில் நுழைந்து அவர்களின் பண்பாட்டைச் சிதறச் செய்தது.

திருமணத்தின்போது புரோகிதர் மந்திரம் கூறல், தீவலம் வருதல், நெருப்பிலே நெய்யூற்றி புகை பரவச் செய்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் போன்ற ஆரியச் சடங்குகள் தமிழர் திருமணங்களில் பின்பற்றப்பட்டன. பெண்ணுக்குத் தாலி அணிதல், மிஞ்சி அணிதல், ஆணுக்கு பூணூல் போடுதல் என்று அறிவுக்கொவ்வாத பல மண வினைகள் புகுத்தப்பட்டன.

இளஞ்சேட்சென்னியின் மனைவி அழுந்தூர் வேளிர் மகள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளிர் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்கு வேந்தன் மகள்.

குழந்தைத் திருமணம்: நான்கு வயது, அய்ந்து வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடிக்கும் அவலமும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பால் வழக்கில் வந்தது. இதனால் நான்கைந்து வயதிலே விதவையாகும் கொடுமையும் நிகழ்ந்தது.

வளையல் காப்பு: பெண் கருவுற்றால் அவருக்கு நல்லுணவுகள் கொடுத்து தாயும் சேயும் நலமுடனிருக்க வழிசெய்த தமிழரின்

 

வாழ்க்கைமுறையில், தாயையும் சேயையும் காக்க வளையல் காப்பு அணியும் மூடநம்பிக்கையை ஆரியர்கள் சடங்காக்கி, அந்நிகழ்விலும் மந்திரம் ஓதி பணம் பறிக்க வழிகண்டனர். இச்சடங்கு பெண்ணைப் பெற்றோருக்கு பெருஞ்செலவைத் தரும் சுமையாக மாறியுள்ளது.

கருமாதி, திதி: இறந்தவர்களைப் புதைக்கும் பண்பாடே தமிழனுடையது. அதன்வழி சுற்றுச்சூழல் மாசடைவதில்லை. அவ்வாறு உடலை அடக்கம் செய்யும்போது எச்சடங்கையும் தமிழர் செய்ததில்லை. ஆனால், இறப்பிலும் மூடச் சடங்குகளைப் புகுத்தி தமிழன் பண்பட்ட பகுத்தறிவு வாழ்க்கை முறையைப் பாழாக்கினர்.

இறந்தவர்களுக்கு நடுகல் வைத்து மரியாதை செலுத்துவது மட்டுமே தமிழரின் மரபாயிருந்த நிலையில் கருமாதிச் சடங்கையும், கருமாதி மந்திரத்தையும் புகுத்தி தமிழர் வாழ்வியலைக் கெடுத்து, தங்கள் வருவாய்க்கு வழிதேடிக் கொண்டனர்.

ஆண்டுக்கொரு முறை திதி என்ற ஒரு சடங்கை உருவாக்கி அன்றைக்கும் தமிழரிடம் வருவாய் ஈட்டினர். அதிலும் மந்திரம் படையல் என்று பலதை நுழைத்து இறந்தவர் காக்கையாக வருவார்கள் என்று கதைகட்டினர்.

மழைத் திருநாள் போகிப் பண்டிகை யாக்கப்பட்டது

தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.

அதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.

அதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.

இதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துகளை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.

பொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத்திருநாள் ஆகும்.

மழை அன்றைய தினம் பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளை யிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையைப் பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்கிற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.

போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைப் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லா வற்றையும் தெருவிலிட்டுத் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்ற கேடுகளையும் உருவாக்கி வருகிறது.

ஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.

சூரியத் திருநாளை மகர சங்கராந்தியாக மாற்றிய சதி:

பொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும்.

காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.

அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.

“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருள்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி பண்டிகை என்று மாற்றினர்.

தமிழ் ஆண்டை மாற்றியது

தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.

காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.

மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்னும் பெயர் மாதத்திற்கு வந்தது.

முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.

அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால், பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)

உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.

சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.

ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.

அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதி£னாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அருவருப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.

ஆணாதிக்கம்

தமிழர்கள் பெண்களை மதிக்கக்கூடிய பண்பாடு உடையவர்கள். தமிழ் மக்களின் தொன்மைச் சமுதாயம் தாய்வழிச் சமுதாயம். சொத்துரிமை ஆளுகை எல்லாம் பெண்களுக்கே உரித்தானதாக இருந்தது. ஆனால், ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த பின், அவர்களால் உருவாக்கப்பட்ட ஆண் ஆதிக்கச் சமுதாயம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டு, ஆணுக்குப் பெண் அடிமை நிலை உருவாக்கப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பெண்கள் கல்வியிழந்து, உரிமையிழந்து, ஆணை நம்பி வாழக்கூடியவர்களாய் ஆக்கப்பட்டனர். கணவனை இழந்த பெண் விதவை என்ற அவல வாழ்க்கை வாழ வற்புறுத்தப்பட்டாள். இந்த நிலை தந்தை பெரியாரின் புரட்சிக்குப் பின்தான் ஓரளவிற்கு மாற்றப்பட்டது.

மொழி ஆதிக்கம்

உலகின் முதல் மொழி மட்டுமல்ல; உலகின் பெரும்பாலான மொழிகளுக்கும் மூலமொழியான தமிழிலிருந்து சமஸ்கிருதத்தைச் செயற்கையாக உருவாக்கிக் கொண்டு, பின் அந்த மொழியைத் தமிழோடு கலந்து தமிழைக் கெடுத்தனர். பின் தமிழை நீச பாஷை என்று இழிவுபடுத்தினர். தமிழ் மொழியில் மூடக் கதைகளைப் புகுத்தி, தமிழை வாழ்வியலுக்கு ஒவ்வாத மொழியாக ஆக்கினர். தமிழ் மலையாளமாகவும், கன்னடமாகவும், தெலுங்காகவும் மாறியதற்கு ஆரியர்களின் சமஸ்கிருதக் கலப்பே காரணமாயிற்று. தமிழ் சிதைந்ததோடு தமிழரும் பலராய் பிரிந்தனர்.

தமிழனுக்குள் ஜாதி பிரித்ததோடு அல்லாமல், தமிழ் மொழியிலும் ஜாதி பிரித்து தங்கள் ஆதிக்கத்தைக் காட்டினர்.

1.            சிற்றிலக்கியங்களில் வருணம்

2.            பாக்களில் வருணம்

3.            எழுத்தில் வருணம்

4.            எழுதும் ஓலையில் வருணம்.

1. சிற்றிலக்கியத்தில் வருணம்

கலம்பகம் பாடும்போது, தேவர்க்கு – 100 பாக்கள்

பிராமணருக்கு(பார்ப்பனருக்கு) – 95 பாக்கள்

அரசர்க்கு – 90 பாக்கள்

வைசியர்க்கு – 50 பாக்கள்

சூத்திரர்க்கு – 30 பாக்கள்

2. பாக்களிலும்(பாடல்) வருணம்

பாக்களில் உயர்ந்தது வெண்பா. அதிலும் வருணம்

பிராமணர்க்கு – வெண்பா

அரசர்க்கு – ஆசிரியப்பா

வணிகர்க்கு – கலிப்பா

சூத்திரர்க்கு – வஞ்சிப்பா

3. எழுத்திலும் வருணம்

12 உயிர் எழுத்துகளும் பிராமணர்க்கு.

க், ங், ச், ஞ், ட், ண் – பிராமணர்க்கு.

த், ந், ப், ம், ய், ர் – அரசர்க்கு

ல், வ், ழ், ள் (நான்கு) – வைசியர்க்கு

ற், ன் – சூத்திரர்க்கு

4. ஓலை நறுக்குதலில் வருணம்

பிராமணர்க்கு – 24 விரல் அளவு

அரசர்க்கு – 20 விரல் அளவு

வைசியர்க்கு – 16 விரல் அளவு

சூத்திரர்க்கு – ஒரு விரல் அளவு

வர்ணம், ஜாதித் திணிப்பு

தொல் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவினை ஏதும் இல்லை. செய்தொழிலால் அரசர், வணிகர், வேளாளர் என்று பிரிந்து செயல்பட்டனர். அந்த மூன்று பிரிவிலிருந்தும் மக்களுக்குத் தொண்டாற்ற வந்தவர்கள் அந்தணர் என்று அழைக்கப்பட்டனர். இந்தப் பிரிவுகள் ஜாதிப் பிரிவுகள் அல்ல. உயர்வு தாழ்வும் இழிவும் இல்லை. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் மண உறவு கொண்டனர். அரசப் பிரிவினர் வேளாண் குடும்பத்தில் பெண் எடுத்து மணந்தனர். அப்படிப்பட்ட ஜாதியற்ற சமுதாயத்தில் வருணப் பிரிவை நுழைத்து, பின் ஜாதிப் பிரிவுகளை உருவாக்கி எல்லாம் இறைவன் செய்த ஏற்பாடு என்று மக்களை ஏற்கச் செய்தனர். இதனால் ஜாதியற்ற தமிழரிடையே உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டு தீண்டாமையும் கடைபிடிக்கப்பட்ட அவலம் வந்தது.

ஆக, உலகில் உயர்ந்த பண்பாட்டிற்குரிய சமத்துவ, பகுத்தறிவு வாழ்வு வாழ்ந்த தமிழர்களிடையே ஆரியர்கள் நுழைந்து அனைத்தையும் கெடுத்து அழித்தனர். தமிழர்களையும் தமிழ் மொழியையும் இழித்தனர். தந்தை பெரியார் பிரச்சாரங்கள், போராட்டங்களுக்குப் பிறகுதான் அந்நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. அவர் ஊட்டிய பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து மீண்டும் சிறப்பான தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த தமிழர்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *