இம்மண்ணின் மக்களெல்லாம் அறிவு மானம்
எய்தவேண்டித் தொண்டாற்ற அருட்கொ டையாய்
தம்முழுமை வாணாளைத் தத்தம் செய்து
தடைக்கற்கள் யாவையுமே தகர்த்துச் செல்லு
வெம்புகரி யாய்வெகுண்டே உரிமைப் போரில்
வெற்றியன்றி வேறெதுவும் கண்டி டாத
செம்பெரியார் கொள்கைதனைச் செயல் படுத்தச்
சென்றவழி சென்றென்றும் நினைவு கூர்வோம்!
இயக்கத்தின் தூண்களென இயம்பப் பட்டே
இருந்தவர்கள் விட்டுவிட்டுச் சென்ற போதும்
புயமாகச் செயல்பட்டோர் குற்றம் சொல்லி
புறமேகி வன்துரோகம் செய்த போதும்
அவயவங்கள் நோய்ப்பட்டு நொந்த போதும்
அசைக்கலாகா இமயமென இயக்கந் தன்னை
வியப்புற்றே இப்புவியோர் விள்ளும் வண்ணம்
உயர்த்திட்ட பெரியாரை நினைவில் கொள்வோம்!
அனைத்துலகும் தேடிடினும் அகப்ப டாத
அறிவாற்றல் மிக்காராய்த் தமிழ நாட்டில்
இணையற்ற ஓராளாய்த் தனித்தே நின்று
எதிர்ப்புகளும் ஏச்சுகளும் தாங்கித் தாங்கி
தனைவருத்திப் போராட்ட வாழ்வை யேற்று
தன்மதிப்பி யக்கத்தை வழிந டத்தி
மனிதர்க்குத் தொண்டாற்றப் பிறந்த நந்தம்
மாமேதை பெரியாரை மறப்பார் யாரே?
எண்ணற்ற தீங்கிழைத்தே இழிவும் செய்ய
எழுதியுள்ள மனு(அ)நீதிச் சூழ்ச்சி கண்டு
கண்கலங்கி உள்ளந்துடித் தெரியும் வெற்பாய்
கனன்றெழுந்தவ் விழிவுதனைப் போக்க இந்த
மண்ணகத்தில் உய்த்திட்ட நாள்வ ரைக்கும்
மானப்போர் செய்திட்ட பெரியார் அய்யா
கண்ணுக்குள் மூளைக்குள் புகுந்த பின்னே
காலத்தும் மறக்கத்தான் முடியு மாமோ?