புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ -எம்.எப்.ஐ.ஜோசப் குமார்

டிசம்பர் 16-31, 2020

தமிழ்மொழி இலக்கியத்தில், பெருக்கச் சிறப்புமிக்க, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்களுக்கு மாற்றாக, சிறு வடிவம் தாங்கி உருவானவை சிற்றிலக்கியங்கள் என்று முறைப்படுத்தப்பட்டன. உலா, கோவை, பதிகம் முதலானவற்றை உள்ளடக்கிய இச்சிற்றிலக்கியத் தொகுதியில், பிள்ளைத்தமிழும் ஒன்று.
தொல்காப்பியம், குழவி மருங்கினும் கிழவ தாகும் என்று சொல்லுகிறது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, பன்னிரு பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் ஆகிய நூல்களிலும் பிள்ளைத்தமிழுக்கான இலக்கண வரையறைகள் கூறப்பட்டுள்ளன. பன்னிரு பாட்டியலின் 102ஆம் பாடல்,

காப்பொடு செங்கீரை தால்சப் பாணி
யாப்புறு முத்தம் வருக என் றல்முதல்
அம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர்
நம்பிய மற்றவை சுற்றத் தளவென
விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்

என்று பாடியிருப்பதைப் போல், ஆண்பால் பிள்ளைத்தமிழ், பாட்டுடைத் தலைவனுக்கு இறைக்காப்பு வேண்டும் என்ற காப்புப் பருவம், குழந்தை ஒரு காலைத் தூக்கி இருபுறமும் தலையசைத்து கிளி சாய்ந்தாடுவதைப் போன்ற செங்கீரைப் பருவம் (இங்கு கீரை என்றது, கிளி என்று பொருள்படும்), அன்னையின் தாலாட்டில் உறக்கம் கொள்ளும் தாலப் பருவம், தரையிலூர்ந்து செல்லும் சப்பாணிப் பருவம், குழந்தையிடம் முத்தம் விழையும் முத்தப் பருவம், நடைபழகும் குழந்தையை வாவென அழைத்து மகிழும் வருகைப் பருவம், நிலவைக் காட்டி குழந்தையுடன் விளையாட முனையும் அம்புலிப் பருவம், பெண் குழந்தைகள் கட்டிய மணல் வீட்டைச் சிதைத்து விளையாடும் சிற்றில் பருவம், சிறு பறையை முழக்கப் பழக்கும் சிறுபறைப் பருவம், குழந்தையின் நடைப்பயிற்சிக்கு ஏதுவாக சிறுதேர் உருட்டும் சிறுதேர்ப் பருவம் எனும் பத்துப் பருவங்களில் பாடப்படும்.

மேற்சுட்டப்பட்ட பத்து பருவங்களுள், முதல் ஏழும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவானவை. இறுதி மூன்று பருவங்கள், பெண் குழந்தைகளுக்கு, வேறு பெயர்களில், அதாவது அவை பதினேழாம் திங்களில் கழங்கு எனப்படும் காய்களை வைத்து விளையாடும் கழங்குப் பருவம், பத்தொன்பதாம் திங்களில் அம்மானைக் காய்களைக் கொண்டு விளையாடும் அம்மானைப் பருவம் இறுதியாக, இருபத்தியோராம் திங்களில், ஊஞ்சலில் அமர்த்தி விளையாடும் ஊசல் பருவம் என்று வேறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழன் மேல் செய்த பிள்ளைத்தமிழ் துவங்கி இன்றளவும், மனிதர் பாலும், கடவுளர் பாலும் ஏராளமான பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பாடப்பட்டுள்ளன.

1942இல் அருப்புக்கோட்டை மாவண்ணா தேவராசன் என்னும் புலவர், நாத்திக நெறி தேர்ந்து, தந்தை பெரியார் அவர்களது சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அவர் காட்டிய வழியில் வாழ்ந்து வந்தார். அவரது நண்பர்கள் சிலரும் தமிழ்ப் புலவராய் இருந்தனர். ஒருநாள், அவர்களில் வி.ஷி.ராமசாமி என்னும் புலவர், தேவராசனிடம், சுயமரியாதைக் கோட்பாடு உடையவர்களால், பிள்ளைத்தமிழ் பாடமுடியாது. ஏனெனில், கடவுள் வாழ்த்துப் பாடவேண்டுமே! என்று பகடி செய்தார்.
தேவராசன் அக்கூற்றுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து, நான் பெரியார் மீது பிள்ளைத்தமிழ் பாடுகிறேன். அதை நீங்கள் அச்சிடத் தயாரா? என்று கேட்டார். அவர்கள் உடன்பட்டதைத் தொடர்ந்துதான் புலவர் மாவண்ணா தேவராசன் அவர்கள் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதினார் என்பது திராவிட இயக்க வரலாற்றின் சிறப்புமிக்க பகுதிகளுள் ஒன்றாகும்.

ஒரு சில திங்கள்கள் கழித்து, தேவராசன் தனது நூலை முழுமையாக எழுதி முடித்தவுடன், அவரது நண்பர் புலவர் ராமசாமி, அவருக்குப் பணம் 600 ரூபாய் அனுப்பி புத்தகத்தை அச்சிட்டுக் கொள்ளச் சொன்னார். ஆனால் தேவராசனால், பல காரணங்களை முன்னிட்டு, புத்தகத்தை வெளிக்கொண்டுவர இயலாது போயிற்று. ஆனாலும், அவரது, பெரியார் பிள்ளைத்தமிழின் சில கவிதைகள் குடியரசு, காஞ்சி, விடுதலை ஆகிய இதழ்களில் அவ்வப்போது அச்சிடப்பட்டன.

5.2.1944 தேதியிட்ட குடிஅரசு இதழில், மாவண்ணா தேவராசனின் கீழ்க்கண்ட சிற்றில் பருவம் கவிதை இடம்பெற்றிருப்பதை, காலம் சென்ற முனைவர் திருமதி ஜே.கயல்விழி தேவி, தமது குடிஅரசு இதழ்க் கவிதைகள் என்னும் நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள்
இடும்பை அழிக்க, இழிவு அழிக்க
எண்ணூற் றியாண்டாய் நம்குலத்தில்
எய்தும் அடிமைத்தளை அழிக்க
ஈனப் பிறவி வேற்றுமையை
எண்ணில் பொய்ப் புராணமுதல்
ஆரிய ஜாதி மதம் அழிக்க
அறிவுஇல் கடவுள் வித்து அழிக்க
ஆர்யக் குலவேர் அழித்தொழிக்க
ஆகும் தலையாம் நினைக்கிவையே
அன்றி எம் சிற்றிலை அழிக்கின்
அடையும் புகழ் யாது?

இதனைத் தொடர்ந்து, பெரியார் மொழி ஒன்றினையும் அவரே பின்மொழிந்து, விளக்கமென்னும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். சுயமரியாதையும், சமத்துவமும் விடுதலையும் வேண்டிய இந்தியாவுக்கு இப்போது வேண்டியது சீர்திருத்த வேலையல்ல. உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையாகும். குருட்டு நம்பிக்கையை சீர்திருத்த வேலையினால் ஒழிக்க முடியாது. அவற்றை அழிவு வேலையினால்தான் ஒழிக்க முடியும். மேலும் புலவர் தேவராசன் அவர்கள், குடிஅரசு மேற்கொண்ட கொள்கைகளின் திரண்ட கருத்தாக அமைந்த, தனது மற்றுமொரு பாடல், இதழின் நோக்கமாகத் தலையங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தியையும் தருகிறார் (பெரியார் பிள்ளைத்தமிழ், பாரதி நிலையம், சென்னை, 1983). அக்கவிதை பின்வருமாறு:

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி,
மனதுள்ளே பேதா பேதம்
வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப் பாயாகில்
செய்தவம் வேறொன் றுண்டோ
உனக்கிது உறுதி யான
உபதேசம் ஆகும் ….. (முத்தப் பருவம், 42)

இதிலிருந்து, புலவர் மாவண்ணா தேவராசனின் தனிச் செய்யுள் ஒன்று, முதலில் குடிஅரசு இதழில் தலையங்கப் பகுதியில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், பின்னர், அது அவராலேயே தனது பெரியார் பிள்ளைத்தமிழ் நூலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

இறுதியாக 1983இ-ல்தான், தேவராசனின் நண்பர்கள் மருத்துவர் கா. நடராசன், ஙி.ஷிநீ., வி.ஞி., மற்றும், திரு. பழ.சிதம்பரம் இருவரது முன்னெடுப்பிலும் இந்நூல், முழுமையாக ஆசிரியரின் குறிப்புரையோடு வெளிவந்தது.
தந்தை பெரியார் அவர்கள் இலக்கிய நயங்கள் துய்த்தலைக் கடைப்பிடிக்காதவர். அவர் திருக்குறளைப் படித்தார்; கம்ப இராமாயணத்தை ஆராய்ச்சி செய்தார். ஆனால், இலக்கியங்கள் சிலவற்றில் கூறப்பட்டுள்ள மனித விரோத, மனித ஒழுக்கத்திற்கு விரோத புராணக் குப்பைக் கதைகளைக் கடுமையாகச் சாடினார்.
இத்தகு மாபெரும் புரட்சியாளரின், கலகக்காரரின்மேல், புலவர் மாவண்ணா தேவராசன் பிள்ளைத்தமிழ் என்கிற சிற்றிலக்கியம் படைத்திருப்பது பெரியார் வழி செல்பவர்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியைத் தரக்கூடியதாம்.
ஏற்கனவே இலக்கண வரையறை செய்யப்பட்டிருந்த பத்து பருவங்களுக்கும் மேலாக, ஆசிரியர் நான்கு பருவங்களை, கூர்ந்து உணர் பருவம், வினாவுறு பருவம், கதைகேள் பருவம், பள்ளி செல் பருவம் என்னும் தலைப்புகளில் சேர்த்திருப்பது, ஓர் இலக்கணத்தை மீறிய பிள்ளைத்தமிழ் என்கிற கருத்தைச் சொல்கிறது. மேலும் இது பெரியாரின் கட்டவிழ்க்கும் அல்லது கட்டுடைக்கும் (Deconstruction) நெறியோடு ஒத்துப்போவது, ஆசிரியரின் கூர்ந்து உணரும் சிந்தனைச் செழுமையைப் பறைசாற்றுவதாயும் அமைந்துள்ளது.

ஆசிரியர் தனது குறிப்புரையில் பள்ளி செல்லும் பருவம் வரை, ஒரு குழந்தையின் பிள்ளைமையைக் கண்டுணர முடியும் என்பதால், இத்தலைப்பில் இவ்விறுதிப் பருவத்தைக் கூறி, நூலை முற்றாக்கியதாகக் கூறியுள்ளார். இருந்தபோதும், பள்ளி செல்லும் பருவம் முழுமையாகவும், கதைகேள் பருவத்தின் முதல் மூன்று பாக்களைத் தவிர்த்து, பிற ஏழு பாக்களும் தொலைந்து போய்விட்டன என்ற செய்தியையும், தனது குறிப்புரையில் தருகிறார்.
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *