ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!

டிசம்பர் 16-31, 2020

நாட்டில் உள்ள பல படித்தவர்களும், பதவியில் உள்ள பெரிய மனிதர்களில் பலரும், பாமரத்தனத்திலிருந்து அறியாமையிலிருந்து விடுபட முடியாமல், பேராசைச் சிறைக்குள் கிடந்து உழலுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று _ ஜோதிடம் என்ற ஒரு போலி விஞ்ஞானத்தை நம்பி பொருளையும் அறிவையும் இழப்பதாகும்!

எத்தனையோ கொலைகளும், தற்கொலைகளும் நரபலிகளும் நாட்டில் நடைபெறுவதற்கு அடிப்படையான காரணம் இந்த ஜோதிட மூடநம்பிக்கையேயாகும்!

அறிவியல் (Science) வேறு; போலி அறிவியல்(Pseudo Science) வேறு. படித்த தற்குறிகளுக்கே கூட இது விளங்குவதில்லை!

வானவியல் (Astronomy) என்பது அறிவியல் (Science). ஜோதிடம் (Astrology) என்பது போலித்தனமான அறிவியல்!

கிரகங்கள் கணக்கே இரண்டிலும் மாறுபடுவதைச் சுட்டிக் காட்டினாலே, திறந்த மனம் உடையவர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த வேறுபாடு எளிதில் விளங்கிவிடும்!

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே, சுயமரியாதை இயக்கம் தொடங்கி, பச்சை அட்டை குடிஅரசு வார ஏட்டின் மூலம் தந்தை பெரியார் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஜோதிடப்புரட்டு எனும் தலைப்பில் சிறு நூலாக அச்சில் வந்து, பல லட்சக்கணக்கில் _ பல பதிப்புகள் மூலம் _ நாட்டில் பரவியுள்ளது!
நம் நாட்டு நாளேடுகளில் பலவும், வார ஏடுகளும் ஜோதிடத்தைப் பரப்பி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் சுரண்டல் வியாபாரத்தினை செய்வது மகா வெட்கக் கேடு!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லாம் பல அறிவியல் ஆளுமையாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் ஜோதிடம் என்பது புரட்டு என்று கூறினார்கள்!

ஜோதிடம் இதழ் என்பது அறிவார்ந்தோர் வைத்த நம்பிக்கையாகும். சி.இராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களேகூட ஜோதிடத்தை நம்பாதவர்கள்.
ஜோதிடப் புரட்டைப் புரிந்துகொள்ள வேறு பெரிய விளக்கம் கூடத் தேவையில்லை!

இன்றைய ராசிபலன் போட்டு நாளும் ராசிபலன் வருவாய் தேடும் நாளேடுகளில் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு என்ன பலன் என்பதை இரண்டு, மூன்று நாளேடுகளில் வந்துள்ளவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக்கு மற்றொன்று நேர் எதிராகக் கூட இருக்கும்!

என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதுபோல மூடநம்பிக்கையால் ஏற்படும் ஆசை இந்த மூடத்தனத்தை வளர்த்துக் கொண்டே உள்ளது!
புதிய ஒரு செய்தி: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் இரண்டாம் முறை போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முழு வெற்றி பெறுவார்; அவரை எதிர்க்கும் ஜோபைடன் தோல்வி அடைவார்; துணை அதிபர் பதவி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைவார் என்று ஜோஸ்யம் சொன்னார்கள்! அது அப்படியே ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கிறது.

இதுபோல இதற்கு முன் எத்தனையோ ஜோதிடங்கள் பொய்த்த கதையும் நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. இதே கேள்விக்கு பைடன் வெல்வார் என்று இன்னொருவரும் ஏதோ கணக்குப்போட்டு எழுதியுள்ளார். இந்தப் பக்கம் ஒருவர், அந்தப் பக்கம் ஒருவர் என எவர் வந்தாலும் ஜோதிடம் கணித்தது என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? ஜோதிடம் என்பது கணிதம், அறிவியல் என்றால் யார் கணக்கிட்டாலும் ஒன்று போல் தானே வரவேண்டும்? ஒன்று கூட்டல் ஒன்று என்றால் இரண்டு தானே எல்லோர்க்கும் விடை. ஜோதிடத்தில் மட்டும் ஆளுக்கொரு விடை வருவது எப்படி? அதுவே ஜோதிடம் பொய் என்பதற்கான சான்றல்லவா? அதைவிட ஒரு சிறு கேள்வி: கொரோனா கொடுந்தொற்று வந்து இப்படி உலகத்தில் (ஏறத்தாழ 68.2 மில்லியன் பாதிக்கப்பட்டவர்கள், 1.56 மில்லியன் உயிரிழந்தவர்கள், 44 மில்லியன் குணமானவர்கள்) இத்தனை லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள், இவ்வளவு பேர் பலியாவார்கள் என்று எந்த ஜோதிடராவது கூறியிருக்கிறார்களா? (பல ஊர்களில்) ஜோதிடர்களேகூட கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்! இது அசல் கேலிக் கூத்து ஆகும். புயல், பூகம்பம் எப்போது எங்கே எந்த நொடியில் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூற முடியுமா?

எனவே, ஜோதிடப் பைத்தியங்கள், பரிகாரம் என்ற பெயரில் அறிவையும், பொருளையும், காலத்தையும் இழப்பதைத் தவிர, நாம் கண்ட பலன்தான் என்ன? எனவே, ஜோதிடப் பைத்தியங்களே, திருந்துங்கள்!
– கி.வீரமணி,
ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *