இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய்

டிசம்பர் 16-31, 2020

-மரு இரா.கவுதமன்

இரைப்பையும் (Stomach), உணவுக் குழாயும் (Esophagus), நம் உணவு மண்டலத்தின் ஆரம்ப நிலை உறுப்புகளாகும். வாயின் உள்புறம், தொண்டையின் முடிவில் துவங்கி, வயிற்றில் முடியும் உணவுக் குழாய் 10 அங்குலம் (25 செ.மீ) நீளமுடையது. மூச்சுக்குழாய்க்கும், வயிற்றையும் பிரிக்கும் இடைத் தசைச் சுவரின் (Diaphragm – உதரவிதானம்) இடைவெளியின் வழியாகக் (Hiatus) கீழிறங்கி இரைப்பையோடு இணையும். தசைகளால் ஆன இக்குழாய், சுருக்கு தசை (Sphincter) யால் மூடப்பட்டிருக்கும். கீழ்நோக்கி அசையும் அடைப்பிதழ்கள் (Valves)) போல் இது செயல்படும். இதனால் இரைப்பைக்குச் செல்லும் உணவு, மீண்டும் உணவுக் குழாய்க்கு செல்லாது தடுக்கப்படும்.

இரைப்பை, ‘J’ வடிவில் அமைந்துள்ள, தசைகளால் ஆன பை. உணவுக்குழாய், இரைப்பையோடு இணைந்துள்ளதுபோல், இரைப்பை, சிறு குடலின் மேல் பகுதியான மேல்சிறு குடலுடன் இணைந்திருக்கும். (Duodenum) இரைப்பை அளவு உணவு கொள்வதற்கு ஏற்ப மாறுதல் அடைவதால், சரியாகக் கணிக்க முடியாது. இரைப்பையின், உணவுக் குழாய் தொடர்ச்சியில், உள்ளதுபோலவே, மேற்சிறு குடலின் இணைப்பிலும், சுருக்குத் தசைகள் அமைந்திருக்கும். இரைப்பையின் உள் சுவரில், கண்ணுக்குத் தெரியாத, நுண்ணிய நீர்ச் சுரப்பிகள் உள்ளன. எண்ணிக்கை அளவில், இவை 4,00,000 அளவு இருக்கும்.
இவை முதன்மைச் சுரப்பிகள் (Chief Secretory Cells), என்றும், சுவர்ச் சுரப்பிகள் (Parietal Secretory Cells) என்றும் இரண்டு வகைப்படும். முதன்மைச் சுரப்பிகள், நொதியங்களையும், சுவர்ச் சுரப்பிகள், ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் சுரக்கக் கூடியவை. நொதியங்களில், பெப்சின், ரெனின் (Pepsin, Renin) முதன்மையானவை. இரைப்பை இரு வளைவுகளைக் கொண்டது. அவை சிறிய மற்றும் பெரிய வளைவுகளாகும்.

மூன்று பாகங்களைக் கொண்டது. அடிக்குழி (Fundus) உடல் (Body), குடல்வாய்க்குழி (Autrun) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இரைப்பை, மேல் சிறு குடலுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ள சுருக்கு தசைகள், மேல் சிறு குடல் வழியே இரைப்பையிலிருந்து வெளியேறும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தும். இரைப்பையின் உள் சுவரில் ஏராளமான மடிப்புகள் இருக்கும்.

இவை ரூகே (Rugae) மடிப்புகள் எனப்படும். இரைப்பையில் உணவு சேரும்பொழுது, சுவர்கள் மேலும் விரிந்து அதிக அளவு உணவைக் கொள்ளும். இரைப்பையின் உட்சுவர் உள்ளே சதைப் பகுதி, சுரப்பிகள், வெளியே சவ்வுப் படலம் (Mucousa) ) ஆகியவையால் அமைக்கப்பட்டிருக்கும். உடல் பகுதியில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஆக்ஸின்டிக் (Oxyntic) உயிரணுக்களால் சுரக்கப்படுகின்றன. இந்த அமிலத்தால் உட்சுவரில் பாதிப்படையாமல் இருக்க சவ்வுப்படலம் பாதுகாப்பை வழங்கும். உடற்பகுதியில்தான் இந்த உயிரணுக்கள் (அமிலத்தைச் சுரப்பவை) அமைந்திருக்கும்.

அடிப் பகுதியில் பெப்சின், ரெனின் சுரப்பிகள் உள்ளன. நொதியங்கள் (Enzymes) செயல்பாட்டிற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் உதவுகிறது பெப்சின், ரெனின் சுரப்பிகள் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன.

இரைப்பை, உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (Gastro esophageal reflux disease): இது ஒரு நீண்ட கால நோயாகும். இதன்போது இரைப்பையில் இருந்து, உணவுக் குழாய்க்கு இரைப்பைச் சுரப்புகள், உணவுகள் மேல் நோக்கித் தள்ளப்படும். (புளித்த ஏப்பம்). உணவுக் குழாய், இரைப்பை இணையும் இடத்தில் உள்ள சுருக்குத் தசைகள் இளகுவதால் இந்த நிலை உருவாகிறது. இரைப்பைச் சுவரில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலமும் உணவுடன் சேர்ந்து உணவுக் குழாய்க்குள் வரும். அதனால் அங்கு அமைந்துள்ள சவ்வுப் படலம் பாதிக்கப்படும். இதனால் உணவுக்குழாய் அழற்சி ஏற்படும்.
வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் புளி ஏப்பம் ஏற்பட்டால், இந்நோயின் அறிகுறியாகக் கொள்ளலாம். தேசிய நீரிழிவு, செரிமானம், சிறுநீரக நோய்கள் நிறுவனம், அமெரிக்காவில் 20 சதவிகிதம் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ஏழ்மையும், வறுமையும் கல்வியின்மையும் ஒருபுறம், ஏராளமான கொழுப்புள்ள உணவுகள் எடுத்தல், உடற்பயிற்சியின்மை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் போன்றவையும் நம் நாட்டு மக்களிடையே அதிகம் ஏற்டக் காரணமாகின்றது.

அறிகுறிகள்:
நெஞ்சுப் பகுதியில் ஒருவிதமான சங்கடம்.
நெஞ்சு எரிச்சல்.

இந்தச் சங்கடமும், எரிச்சலும் கழுத்துப் பகுதிக்கும் பரவும்.
பொதுவாக இதை இதய எரிச்சல் (Heart burn) எனக் கூறுவர்.
வாயின் உட்புறம் காரம், கசப்பு உணர்வு தோன்றும்.

சில நேரங்களில் புளிப்புச் சுவையோடு கூடிய உணவு வாய் வரையில் வந்து செல்லும்.

சில பொழுதுகளில் உணவு விழுங்குவதில் இடைஞ்சல் ஏற்படும்.
சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவும் கூடும்.

தொடர் இருமலால்கூட நோயாளி பாதிப்படையும் நிலையும் சில நேரங்களில் ஏற்படும்.

ஆஸ்துமா போன்ற நோய்கள்கூட பின்விளைவாக வரும்.

சரியாக மருத்துவம் செய்யாவிட்டால் நோய் ஆபத்தை உண்டாக்கும் நிலையும் ஏற்படும்.

உணவு இரைப்பையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி ஏப்பம் வரும். இரைப்பைக் காற்று இயல்பாக அடிக்கடி ஏப்பமாக மாறி வெளியேறுவதை உணவுக்குழாய் சுருக்குத் தசை தடுத்து விடும். அத்தசை இலகுவாகி விடுவதால்தான் இந்நிலை.

சில நேரங்களில் ஏப்பமாகக் காற்று வெளியேறிவிட்டால், அது வெளியேறும் வரை, மூச்சுத்திணறல் கூட ஏற்படும்.
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *