- உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.
- தீமை என்பது ஓர் அனுபவம்; அது அறியாமையின் நிலையே. அந்த அறியாமை என்ற அனுபவத்தை நீக்க அறிவைத் துணையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர வளர தீமை என்ற அறியாமை நீங்கிவிடும்.
- நீ உள்ளிருந்து விலகி நிற்கப் பயில். உன்னை அந்த வேளையில் ஆராயவும், புரிந்துகொள்ளவும் முயல்.
- மனதை உற்சாகப்படுத்து. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படு; அதைரியமூட்டுபவர்களை அருகில் விடாதே.
- காலம் உனது உயிராகும். அதை வீணாக்குவது உன்னை நீயே கொலை செய்வதற்கு ஒப்பாகும்.
- மகிழ்ச்சியுடன் இருக்க 2 வழிகள் உள்ளன. 1. நமது தேவைகளைக் குறைத்துக் கொள்ளல். 2.நமது செல்வத்தை உயர்த்திக் கொள்ளல். உண்மையை நம்புபவன் துன்புறுவதில்லை. ஏனெனில், துன்பத்திற்குக் காரணமான தான் என்பதைக் கைவிட்டவன் அவன்.
- உன்னதமான வாழ்விற்காக எல்லோருமே ஏங்குகிறோம்; ஆனால், அதற்கு அடிப்படையான உன்னதமான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறோம்.
- முதலில் முயற்சி செய்யுங்கள்; பிறகு வெற்றியைச் சந்திக்கலாம். முதலில் உழையுங்கள்; பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். முதலில் பலவீனத்தை அகற்றுங்கள்; பிறகு துணிவைப் பெறலாம். முயற்சி, உழைப்பு, துணிவு ஆகிய மூன்றினால் ஆரம்ப காலத் துன்பத்தை வென்று அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
- குழப்பமில்லாமல் வாழ வேண்டுமானால், அதற்குத் தேவை ஒழுங்குமுறை. இது இருந்தால் பொறுமை பிறக்கும். பொறுமை பிறந்தால் வாழ்க்கையில் அழகு பிரகாசிக்கும். அழகு பிரகாசிக்கும்போது அன்பு, தூய்மை, நேர்மை, மனிதநேயம், அறிவு ஆகியவை வெளிப்பட்டு வாழ்க்கை இன்பமாகும்.
- எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.