சிந்தனை : இளைஞர்களே,வாருங்கள்….

செப்டம்பர் 16-30, 2020

முனைவர் வா.நேரு

அனைவர்க்கும் தந்தை பெரியாரின் 142-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றைய இளைஞர்கள், சமூக ஊடகங்களில் தந்தை பெரியாரைக் கொண்டாடுவதைக்காணும் போது பெரும் களிப்பு நமக்கு ஏற்படுகிறது. தந்தை பெரியாரின் உருவப்படமும், அவரது மேற்கோள்களும் அச்சிடப்பட்ட பனியன்களை இளைஞர்கள் அணிந்து கொண்டு வெளியிடங்களில் உலா வந்து கொண்டு இருப்பதைப் பார்க்கும்போது உவகையும் மகிழ்ச்சியும் நமக்கு ஏற்படுகின்றது, இன்றைய இளைஞர்கள் தந்தை பெரியாரைக் கொண்டாடுவதைப் போலவே தந்தை பெரியாரின் தத்துவங்களை, பெரியாரியலைப் புரிந்து-கொள்வதும், வாழ்க்கையில் மேற்கொள்-வதும் மிகவும் தேவையான ஒன்றாகும்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் செல்பேசிகள் உலகில் இல்லை. நமது வாழ்க்கையில் இன்று பின்னிப் பிணைந்திருக்கும் கணினி, இணையப் பயன்பாடு அன்று இல்லை. ஆனால், தந்தை பெரியார் அவர்கள் ‘இனி வரும் உலகம்‘ இப்படிப்-பட்டதாகத்தான் இருக்கும் என்று

80 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார். அவர், தான் வாழ்ந்த காலத்தில் செப்பனிடப்படாத, கரடுமுரடான பாதைகளில் நாள்தோறும் பயணம் செய்தார். காட்டுத்தனமாகப் பேசும், எதிர்ப்பு காட்டும் மக்களிடத்தில் தனது உயிரைப் பற்றிய அச்சம் இன்றி அவர்களின் வாழ்வுக்காக தான் வாழ்வதை, பேசுவதை அந்த மக்களின் மனதிலே பதியவைத்தார். அதனால் தான் வாழ்ந்த காலத்திலேயே, தான் சொன்ன கருத்துகள் பலவும், செயல்பாடுகளாக மாறியதையும், நாட்டில் சட்டங்களாக இயற்றப்படுவதையும் கண்டு களித்தார்; உவகை அடைந்தார். தான் பட்ட பாடுகள், துன்பங்கள் எல்லாம் கானல் நீராகப்போய்விடவில்லை; சட்டங்கள், மக்களின் வாழ்வியலாக மாறியதைக் கண்டார். அதனாலேயே தந்தை பெரியார் அவர்கள் வெற்றி பெற்ற தலைவராக அனைவராலும் போற்றப்படுகிறார். தந்தை பெரியார் சொன்ன கருத்துகளை முழுவதுமாக இணைத்து பெரியாரியல் என்று சொல்கின்றோம்.

பெரியாரியல் என்பது உண்மை. இந்த உலகத்தின் மேன்மைக்குத் தேவையான உண்மை. உலகில் மனிதர்கள் தங்களைப் பிணைத்திருக்கும் ஜாதி, மதச்சங்கிலிகளை அறுத்து எறிந்துவிட்டு, ஒரு தாய் மக்களாய் ஒன்றிணையவேண்டும் என்ற மேன்மையான எண்ணத்தில் விளைந்த உண்மை. அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு மூலம் உண்மை-களை உலகுக்கு அறிவிக்கின்றார்கள். அதற்காக அவர்கள் பட்ட _ பாடும் துன்பங்கள் கொஞ்சமல்ல! அதனைப்போலவே சமூகவியல் அறிஞரான தந்தை பெரியார் தன்னுடைய அனுபவ சோதனைகள் மூலம் பொது உரிமை, பொது உடைமை, பெண் உரிமை  நமது நாட்டில், உலகில் ஏற்பட என்ன செய்ய-வேண்டும் என்பதனை தனது கருத்துகளாக பத்திரிகையில் எழுதியதோடு அதனைப் பரப்பிட ஊர் ஊராய்ச் சென்று தள்ளாத வயதிலும் தளராது பிரச்சாரம் செய்தார், போராட்டங்களில் ஈடுபட்டார், சிறை சென்றார். சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தார்..இன்றைய இளைஞர்கள் தந்தை பெரியார் சொன்ன கருத்துகளை, பெரியாரியலை கருத்து ஊன்றிப் படிக்க-வேண்டிய நேரமிது.

பெரியாரியல் என்பது சமூக அறிவியல் அடிப்படையில் அமைந்த உண்மைகளின் தொகுப்பு. மனித நேயம் உலகில் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டும் வழிகாட்டி. ‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தன் நோய் போல் போற்றாக்-கடை (திருக்குறள் 315)  என்னும் குறளுக்கு ஏற்ப சமூகத்தில் இருக்கும் ஜாதி, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கை போன்ற நோய்களை தனக்கு ஏற்பட்ட கண் நோய்களாகக் கருதி, இதனைத் தீர்க்கும் வழி யாது?யாது? என்று எண்ணி, எண்ணி அதற்காக உழைத்து உழைத்து தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். தன்னுடைய இளமை வயதுமுதல் சமூகத்தின் பல்வேறு மனிதர்களிடையே பழகி, பகிர்ந்து உண்டு, மற்றவர்களின் சுக, துக்கங்களில் கலந்து கொண்டு மனிதர்களைப் படிப்பதன்மூலமாக சமூகத்தைப்படித்தவர் தந்தை பெரியார். அந்தப் பட்டறிவுப் படிப்பின் மூலமாக பகுத்தறிவு ஒன்றே மனித சமூகம் உயர்வதற்கு வழி, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்றுச் சொன்னவர்.

அறிவியல் அறிஞர் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்துச் சொன்னார். ஆப்பிள் பழம் மரத்தில் இருந்து கீழே விழுவது  புவியின் இழுக்கும் விசையினால் என்பதை மெய்ப்பித்த. ஆனால் அவருக்குப் பின்னர் வந்த அய்ன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு (தியரி ஆப் ரிலேடிவிட்டி) என்னும் கருத்தினை அடிப்படையாக வைத்து இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தால் ஏற்படும் விசையின் காரணமாக பழம் கீழே விழுகிறது என்று சொன்னார். அதனைப்போல  காந்தியைப் போன்றவர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் ஓயாது வலியுறுத்துவதன் மூலமாக தீண்டாமை ஒழிந்து விடும் என்று நினைத்தார்கள்.

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், தீண்டாமைக்குக் காரணமாக இருக்கும் ஜாதி ஒழிய வேண்டும்; ஜாதியை அடிப்படையாக வைத்துக்கொண்டிருக்கும் இந்துமதம் ஒழியவும் வேண்டும் என்று சொன்னவர். பெரும்பான்மை-யான மக்களின் இழிவுக்கும், வறுமைக்கும் காரணமாக இருக்கும் ஜாதியின் தோற்றம், வளர்ச்சி, பார்ப்பனர்கள் அந்த ஜாதி என்னும் கட்டமைப்பை பாதுகாப்பதற்காக எப்படி எல்லாம் கட்டமைத்தார்கள், கட்டமைக்-கிறார்கள் என்று சொல்லி அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைச்-சொன்னதோடு, விடுபடுவதற்கான போராட்டங்-களை தன்னுடைய வாழ்நாள் எல்லாம் நடத்தியவர் தந்தை பெரியார். இளைஞர்களுக்கு இந்தப்புரிதல் ஏற்படும்போது, சுய ஜாதிப்பெருமை பேசுதலும், சுய ஜாதிப்பற்றும் தானாகவே உள்ளத்திலிருந்து மறைந்துவிடும்.

சுயஜாதிப்பெருமை பேசுதல் ஒழியவும் சுயஜாதிப்பற்று ஒழியவும் பெரியாரியல் புரிதல் என்பது மிகத்தேவையான ஒன்று.

‘இந்துத்துவா’ என்னும் தலைப்பில் இந்த செப்டம்பர் 6,7,8 நாள்களில் தொடர்-சொற்பொழிவு ஆற்றிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் , இந்துத்துவா என்பது எப்படி மனிதர்களைப் பிறப்பின் அடிப்படை-யில் பிரித்துப் பார்க்கும், அடிமைப்படுத்தும் தத்துவம் என்பதையும் அதற்கு மாற்றான திராவிடத் தத்துவம் எப்படி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்று அனைத்து மனிதர்களையும் சமமாகப் பார்க்கும் தத்துவம் என்பதையும் பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டார்கள்.

நாங்கள் பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என்று தாங்களே எழுதிவைத்துக்-கொண்ட பார்ப்பனர்கள் பல நூறு ஆண்டுகளாக அதனைத் தங்கள் வஞ்சக சூழ்ச்சியின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு, சுக போக வாழ்க்கையை அனுபவித்துக்-கொண்டிருக்கின்றார்கள். இன்றைய ‘புதிய கல்விக்கொள்கை என்பதும் பார்ப்பனிய மேலாண்மையை மக்களிடத்தில் திணித்து, குலக்கல்வி முறையை கொண்டு வந்து, ஜாதி அமைப்பைப் பாதுகாக்கும் முயற்சி. இது ஒரு ‘பரம்பரைப் போராட்டம்‘ .இந்தப் பரம்பரைப் போராட்டத்தில் திராவிடர்களான நாம் வெற்றியடைய, உங்களின் பங்களிப்பு என்ன?

மனிதர்கள் தங்களிடத்தில் பணம் சேர்ந்தால் அதனை வைத்து எப்படியெல்லாம் ஆடம்பரமாக வாழலாம் என்று ஆசைப்-படுகிறார்கள், ஆடம்பரமாக வாழ்கிறார்கள் .செய்தித்தாள்களில் படித்தோம். இந்தியாவின் முதல் பணக்காரர் ஆன குஜராத்தி வணிகரான முகேஷ் அம்பானி, தான் வாழ்வதற்காக ரூ 15,000 கோடி மதிப்பில் மாளிகை பம்பாயில் கட்டியிருக்கிறார் என்பதை. பத்திரிகைகள் பலவும் பக்கம் பக்கமாக அந்த ஆடம்பர மாளிகையின் தோற்றத்தை, உள்ளடக்கத்தை வியந்து வியந்து எழுதினார்கள்; எழுது-கிறார்கள். ஆனால், ஒரு மனிதர் தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதற்கு ரூ15,000 கோடி மதிப்பில் வீடு எதற்கு என்று கேள்விகள் கேட்கவில்லை. இது சமூக விரோதச் செயல் அல்லவா?

பெரும் பணக்காரராகப் பிறந்த தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதும் எளிமையைக் கைக்கொண்டார். சிக்கனத்தைக் கடைப்பிடித்தார். தான் சேர்த்த சொத்துகள், தனது பரம்பரைச் சொத்துகள் அனைத்தையும் அறக்கட்டளையாக ஆக்கி, மக்களுக்குப் பயன்படும் வழிவகை செய்தார். முகேஷ் அம்பானியின் வாழ்க்கையையும், தந்தை பெரியாரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உண்மை புலப்படும்.

இந்தக் கரோனா காலம் சில புதிய வெளிச்சங்களைக் காட்டியுள்ளது பல இருட்டுகளுக்கு மத்தியில். நமது வீடுகளில் அமர்ந்து கொண்டு காணொலிக்காட்சிகளில் பங்கெடுக்கிறோம், உரையாற்றுகிறோம். காணொலிக் கூட்டம் ஏற்பாடு செய்பவர்-களுக்கு மழை வந்துவிடுமோ என்னும் பயம் இல்லை. கூட்ட ஏற்பாடுகள் செல்வுகள் இல்லை, ஆனால் அடைமழை போலத் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்-பாளர்களால் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பெரியாரியல் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைஞர்களே, தந்தை பெரியாரின் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, அமைப்பாய்த் திரண்டு பணியாற்ற வாருங்கள். இன எதிரிகள், தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால் இறுமாப்பு கொண்டு அலையும் காலம் இது. மனித நேயமே தனது உயிர்மூச்சாகக்கொண்டு வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரின் தொண்டர்களாய் மாறுங்கள். தந்தை பெரியாரின் கொள்கைகளை உலகமெல்லாம் கொண்டு செல்லும், தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தொண்டாற்று-வதைப் போல, நீங்களும் _ தொண்டாற்ற வாருங்கள்! இளைஞர்களே வாருங்கள், வாருங்கள்! தந்தை பெரியார் விரும்பிய சுயமரியாதை உலகம், புத்துலகம் ஒரு நாள் உறுதியாக அமையும். அது அமைய உங்களின் பங்களிப்பையும் அளித்திட வாருங்கள், வாருங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *