– சமா. இளவரசன்
உலகத் தமிழர்களின் வெற்றி என்ற வாசகத்தோடும், ஈழத்தில் நிகழ்ந்த படுகொலையைக் குறிப்பிடும் வசனங்களுடனும் வந்த விளம்பரங்கள் ஏழாம் அறிவு படத்தைப் பார்க்கத் தூண்டின. தமிழின உணர்வாளர் களும், தமிழ்ப் பற்றாளர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை வரவேற்றார்கள்.
வழக்கமாக இது குறித்தெல்லாம் பேசாத இளைஞர்கள் கூட தமிழன்னா பெருமைடா என்று பேசுகிறார்கள். வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ.. ஒரு தமிழனை ஒன்பது நாடு சேர்ந்து கொன்னதுக்கு பேரு வீரமில்லை.. துரோகம். நம்மள மலேசியாவில அடிச்சாங்க, இலங்கையில அடிச்சாங்க.. இப்போ இங்கேயே வந்து அடிக்கிறாங்க… திருப்பி அடிக்கணும் போன்ற வசனங்கள் சென்னை சத்யம், மாயாஜால் முதல் கிராமங்களின் டெண்டு கொட்டகை வரைக்கும் தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் வேறுபாடின்றி கைத்தட்டலைப் பெறுகின்றன. தமிழர்களுக்கு எழுச்சியூட்டக்கூடிய விதத்தில் படம் வந்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம் போன்ற செய்திகள் உண்மையில் பெரும் மகிழ்ச்சியை நமக்கு அளித்தன.
தமிழர்களின் வரலாற்றுப் பெருமை பேசும் படத்தை, தமிழுணர்வூட்டக் கூடிய விதத்தில் தமிழர்கள் கூடி எடுக்கிறார்கள் என்றால் அதை விட உவப்பான செய்தி நமக்குண்டோ?என்ற மனநிலைதான் படம் பார்க்கும் வரைக்கும் நமக்கு இருந்தது. ஆனால்…?
காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னனின் வாரிசுகளில் ஒருவரான போதிதர்மர், அவர்களது குருமாதாவின் கட்டளைப்படி உள்நோக்கத்துடனும், உளவு நோக்கத்துடனும் (படத்தில் அப்படித்தான் சொல்லப்படுகிறது) சீன தேசம் செல்கிறார். அங்கு ஏற்படும் திடீர் நோயைக் குணப்படுத்தியும், வீரக்கலையைப் பயன்படுத்தி கொள்ளையர்களை விரட்டியும் கிராம மக்களிடம் புகழ் பெறுகிறார். ஷாவோலின் கோயில் அமைப்பதுடன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் புகழ்பெற்று கடவுளைப் போல் வணங்கப்படுகிறார். அவரை தமிழர்கள் அறியாமல் இருக்கின்றனர்; ஆனால் சீனர்கள் பெருமதிப்பு தருகின்றனர்.
நிகழ்காலத்தில் போதிதர்மனின் வம்சாவழி இளைஞர் அரவிந்தன் என்பவரின் டி.என்.ஏ, போதி தர்மரின் டி.என்.ஏ-வைப் போல் 83% குணங்களைக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறார் சுபா ஸ்ரீனிவாசன் என்ற ஜெனடிக் இஞ்சினியரிங் மாணவி. அரவிந்தனின் டி.என்.ஏ-வில் இருக்கும் போதிதர்மனின் டி.என்.ஏ கூறுகளைத் தூண்டி விட்டு பழைய திறமைகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறார். இதைத் தடுக்கவும், 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் பரவி பிறகு போதி தர்மனால் ஒழிக்கப்பட்ட நோய்க் கிருமியை இந்தியாவில் பரப்பி, சீனாவிடம் மருந்துக்குக் கையேந்த வைக்கவுமான சதியைச் செய்ய சீன அரசால் டோங்லீ என்பவர் அனுப்பப்படுகிறார். ஷாவோலின் பள்ளியின் சிறந்த வீரனாகவும், நோக்கு வர்மத்தால் (hypnotism) யாரையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளக்கூடிய திறமையும் படைத்த டோங்லீ-க்கு உதவ சுபா ஸ்ரீனிவாசனின் பேராசிரியர் ரங்கராஜன் என்பவர் 300 கோடி ரூபாயை சீன அரசிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.
இந்தியாவின் மீதான இந்த உயிரியல் தாக்குதலைத் தடுக்க முயலும் சுபா, அரவிந்தன் மற்றும் தோழர்களின் முயற்சி வெற்றியடைகிறது என்பதாகப் படம் முடிகிறது. படம் முடியும்போது, தமிழர்களின் அறிவியலை வியந்துபேசி நமக்குள் இருக்கும் பழந்தமிழர் சிறப்பை வெளிக்கொண்டுவரக் கேட்டுக் கொண்டு விடைபெறுகிறார்கள்.
படத்தின் கதையைக் கேட்டதும் தமிழரின் சிறப்பையும், அறிவியலையும் இணைத்துப் பேசும் படம் என்பதால் சிறப்பாக இருப்பது போல் தான் தோன்றும். ஆனால் சிறப்பு என்று எடுத்துக்காட்டப்படுபவற்றையும் கருத்துகளையும், வசனங்களின் ஊடாக இயக்குநர் விதைக்கும் கருத்துகளையும் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் இதன் ஆபத்தை உணரமுடியும். அது நமக்குள் எழுப்பும் கேள்விகள் படத்தின் தருக்க(லாஜிக்) மீறல்களையும், திரைக்கதைக்குத் தேவையான புனைவுகளையும் தாண்டி அதன் பின் இழையோடும் உள்கருத்தையும் அதை இப்போது சொல்ல வேண்டிய தேவையென்ன என்பதையும் குறித்தே எழும்புவதைக் காணலாம். (தன்னைப் பார்க்காதவரையும் கூட கவனிக்க வைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது, ஒரே பார்வையில் சூர்யாவைக் கொல்ல ஆளனுப்புவது, அந்தப் பெரியவர் அங்கே போய் குங்பூ முறைப்படி சண்டைபோடுவது போன்ற ஹிப்னாட்டிச/ நோக்குவர்ம பீலாக்களையும் கூட சினிமாத்தனம் என்று எளிதாக ஒதுக்கி விடுவோம்.)
போதி தர்மர் தமிழரா? போதி தர்மர் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவரா? பல்லவர்கள் தமிழர்களா? – இம்மூன்று கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது வரலாற்றை நோக்குபோது! சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற மொழிகளை வளர்த்தவர்கள் தான் பல்லவர்கள். அவர்கள் தமிழர்கள் அல்லர் என்றே பெரும்பாலான ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. போதிதர்மர் கேரளாவின் பார்ப்பன மன்னன் ஒருவனின் மகன் என்பதாகவும், பல்லவ நாட்டில் வாழ்ந்த பார்ப்பன புத்த மதத்துறவி என்பதாகவும், அவர் புத்தரைக் கடவுளாக்கிய மகாயான புத்த மதத்தை சீனத்தில் பரப்புவதற்காகவே பயணம் மேற்கொண்டவர் என்பதாகவுமே பல வகையான தகவல்கள் இருக்கின்றன.
வரலாறுகள் எல்லாம் மன்னர்களைப் பற்றியதாகவே அறியப்பட்ட கருத்தோட்டத்தில் போதிதர்மரை மன்னர் குடும்பத்துடன் இணைத்துவிட்டார்களோ என்னவோ? உளவு பார்க்கும் உள்நோக்கத்துடன் சீனா சென்றதாக சொன்ன படத்தின் இயக்குநரே இன்னொரு காட்சியில், எந்த நோய் இந்தியாவுக்கு வந்திடக்கூடாதுங்கிறதுக்காக போதி தர்மர் சீனாவுக்குப் போனாரோ, அது இப்போ வந்துடுச்சு! என்று தன் போக்குக்கு அவர் சொன்ன வரலாற்றையே மாற்றுகிறார். சரஹ சம்ருதி என்ற மருத்துவமுறையும், அட்டமாசித் திகளும் தமிழுக்குரியவையா? தமிழரின் பண்டைய மருத்துவமுறைகள் என்று எதையோ கொண்டு வந்து நுழைப்பது ஏன்? தமிழர்கள் அறிவியல் சிந்தனையுடையவர்கள் தான் ஆரியர் ஆதிக்கத்திற்கு முன்பு! அதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் வலுவில்லாத ஆதாரங்களையும் புனைவுகளையும் கொண்டு தமிழுக்குப் பெருமைதேட வேண்டியதில்லை. போதிதர்மர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதாலேயே தமிழராகிவிடுவாரா? அப்படித்தானே இன்றும் சில பார்ப்பனர்கள் நாங்கள் தமிழர்கள் என்று சேர்ந்து கொள்ளப் பார்க்கிறார்கள். (அவர்களிடமே திராவிடர் என்ற அடையாளத்தைக் காட்டினால் காத தூரம் தள்ளி ஓடுவார்கள்.) புத்தமதத்திற்குள் நுழைந்து அதை இந்தியாவிலிருந்து விரட்டிய ஆரியம், தமிழர் என்ற அடையாளத்திற்குள்ளும் புகுந்து கெடுக்கும் நோக்கம் இன்று நேற்றா நடக்கிறது?
தமிழர் பெருமைகள் என்றும், நம்ம சயன்ஸ் என்றும் இயக்குநர் முருகதாஸ் எடுத்துக் காட்டும் அத்தனையும் இந்துத்துவ அடையாள மாகவும், அதன் பெருமைகளாகவும் சொல்லப் படும் போலி அறிவியல் செய்திகள். பட்டிமன்ற வணிகப் பேச்சாளர்கள் பேசுவதைப் போல பழம்பெருமை பேசுகிறார்கள் படத்தில்!
ஒன்பது கோள், அதோட பேர் இதெல்லாம் வச்சு சொல்றாங்க… ஆனா ஆயிரக்கணக்கான வருங்களுக்கு முன்னாடி நம்ம கோயில்கள்ல நவக்கிரகங்கள் வச்சு வழிபடுறோமே, எப்படி என்று மாணவி சுபா மூலம் கேட்கிறார் இயக்குநர். அதை மட்டுமா சொல்வது? இப்போது கோள்கள் ஒன்பது தான் என்று அறிவியல் சொல்லுகிறதா? சரி, அது போகட்டும். நம்ம அறிவியல் என்று இயக்குநர் சொல்லும் ஒன்பது கிரகங்கள் என்னென்ன? ராகு, கேது ஆகிய பாம்புகள், சூரியன் என்னும் நட்சத்திரம், சந்திரன் என்னும் துணைக்கோள் இவற்றையும் சேர்த்து ஒன்பது கோள்கள் என்று சொல்வதைத் தான் மெச்சச் சொல்கிறாரா? பஞ்சாங்கத்தையும் பழங்கதையையும் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தமிழனை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் செய்தால், நவகிரகத்தை வழிபடுவது அறிவியல் என்று மேலும் பழமையில் தள்ளுவதா? பஞ்சாங்கக் கணக்கு களை வைத்து நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் பார்த்து, ஒரு நாளில் ஒன்றரை மணிநேரம் மட்டும் நல்ல நேரம் என்று மற்ற காலங்களை வீணடிப்பதையா வளர்ச்சி என்று சொல்வது?
மஞ்சள் – மருத்துவ குணம் கொண்டது தான். அதை கிருமிநாசினியாகப் பயன்படுத்த வேண்டுமே யொழிய மதத்துடன் சம்பந்தப்படுத் தாதீர்கள் என்பதும் சரிதான். ஆனால் மஞ்சள் பூசுவது மகளிருக்கு மட்டும் என்றுதானே பழக்கப்படுத்தியிருக்கிறது இந்துமதம். அதையும் சுமங்கலி தான் செய்ய வேண்டும். வாசல் தெளித்து சாணி மெழுகி கோலம்போடுவது எல்லாம் பெண்களின் வேலை என்றுதானே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கோலம் போடத் தெரியாதவள் எல்லாம் பெண்ணா? என்கிற ஆணாதிக்க பழமைச் சிந்தனையைத் தானே இன்றும் கோலப் போட்டி நடத்தி, வீரத் தமிழச்சியைத் தேர்ந்தெடுக்கும் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் தமிழ்தேசிய அறிவுஜீவிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்கும், ஸ்டிக்கர் கோலம் போடுவதற்கும் ஆவேசப்படும் தமிழர்கள், அமங்கலம் என்று சொல்லி கைம்பெண்களை ஒதுக்கிவைத்ததை எந்த அறிவியலில் கீழ்க் கொண்டுசேர்ப்பார்கள். அவர்களுக்கு கிருமிநாசினி வேண்டாமா? ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வேண்டாமா?
போகிப் பண்டிகையில் நம் அறிவை அழித்துவிட்டோம்.. சரிதான். தமிழன் வரலாற்று ஆவணங்கள், ஆடிப்பெருக்கு என்று ஆற்றோடு அனுப்பிவைக்க ஆரியம் செய்த ஏற்பாடுகளால் ஒழிந்தன என்பதைச் சொல்ல வேண்டாமா? அறிவைப் பரப்பிய புத்தத்தையும் சமணத்தையும் அணைத்து அழித்து, அதன் மீது ஆரியம் விதைத்த நச்சுக் கருத்துகளைத் தானே தனது அடையாளம் என்று இன்றும் தமிழன் நம்பி வருகிறான். இந்து அடையாளத்தையும், தமிழன் அடையாளத்தையும் எப்போதும் தனித்துப் பார்க்காமல் இரண்டையும் குழப்பிக் கொள்வதால்தானே, நாங்க தமிழாளுங்க.. அவங்க முஸ்லிம் என்று இயல்பாக ஊர்களில் பேசிக் கொள்கிறார்கள். தமிழ்ப்புத்தாண்டு என்று தமிழுக்குச் சம்பந்தமில்லாத சமஸ்கிருத புராணக்குப்பைகளை நம் தலையில் திணித்தது இதன் உச்சம் அல்லவா? அப்படிப்பட்ட அடையாளக் குழப்பத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வண்ணம் கருத்துகளைத் திணிப்பதேன்? பெரியார் சொன்ன தமிழ் உணர்வுக்கும், ம.பொ.சி பேசிய தமிழ் உணர்வுக்கும் வேறுபாடு உண்டு. பகுத்தறிவுக்குப் பொருந்தாத எதையும் ஏற்காதே அது எவன் சொன்னதானாலும் என்னும் பகுத்தறிவை மொழிக்கும் உட்படுத்து என்பது தான் பெரியாரின் அணுகுமுறை.
பெண்ணடிமைத் தனத்துக்கு சப்பைக் கட்டு கட்டிய சிலப்பதிகாரத்தையும், ஆரியத்தின் கூறுகளையும் வைத்துக் கொண்டு அவாளின் சார்பாக தமிழ் உணர்வு என்று பேசியது ம.பொ.சி-யின் அணுகுமுறை. இதை மனதில் கொண்டுதான் படத்தில், நிகழ்காலக் காட்சிகளின் தொடக்கம் ம.பொ.சி சிலையிலிருந்து தொடங்குகிறதோ?
இவையெல்லாம் குழப்பத்தினாலும், ஆர்வக்கோளாறினாலும், அரைகுறையான ஆராய்ச்சிகளாலும் முருகதாஸ் அவர்களிடம் நிகழ்ந்திருக்கலாம் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்வதா என்று யோசித்தால், அதெல்லாம் தேவையில்லை… என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார் ஓரிடத்தில்.
தமிழைக் குரங்குன்னு சொன்னா மூஞ்சில குத்துவேன் என்று கோபப்படும் சுபா ஸ்ரீனிவாசன்! திறமையான இளைஞர்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போவதற்கும், தமிழர்கள் முன்னேறாமல் இருப்பதற்கும் முக்கியமான மூன்று காரணங்களை அடுக்குகிறார். முதல் காரணம் என்ன தெரியுமா? ரிசர்வேசன் — அதாவது இடஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டினால் தமிழர்கள் முன்னேறினார்களா? பின்னடைந்தார்களா? இடஒதுக்கீடு என்னும் முறை இல்லாவிட்டால் கள்ளக்குறிச்சி முருகதாஸ் பி.ஏ., படித்திருக்க முடியுமா? இடஒதுக்கீட்டின் காரணமாக திறமையாளர்கள் அமெரிக்க பறக்கிறார்கள் என்றுதானே பார்ப்பனர்கள் பல்லாண்டு காலமாக பிலாக்கணம் பாடுகிறார்கள். முருகதாசின் இந்தக் குரலை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? அரைகுறைத் தன்மையா? அறிவீனமா? ஆரிய அடிமைப் புத்தியா? ஜாதியால் ஒடுக்கப்பட்டுக்கிடந்த மக்களுக்கு கல்வியறிவு தந்த மகத்தான முறைதானே இடஒதுக்கீடு. அதைக் கொச்சைப்படுத்துவதை ஆரக்சன் செய்தால் என்ன – ஏழாம் அறிவு செய்தால் என்ன? எல்லாமே ஆபத்து தானே!
நமது கவலையெல்லாம் இத்தனை பெரிய உழைப்பும், உணர்வூட்ட எண்ணும் உத்வேகமும் முற்றிலும் அதற்கு எதிரான திசையில் இழுத்துச் செல்கிறதே என்பது தான்!
படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடுவ தில்லை என்ற கோணத்தில் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என்று இருந்துவிடமுடியுமா?
திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவரின் குடும்பத்திலிருந்து வெளிவரும் படம், அவ்வியக்கத்தின் அடிக்கட்டுமானத்திலேயே கை வைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? கல்விக்காக தன் உழைப்பிலிருந்து செலவு செய்யும் சூர்யா போன்ற தமிழர்கள் இது குறித்து அறியாமல் இருப்பார்கள் என்பதைச் சகிக்க முடியவில்லை.
மதமாற்றம், மொழிமாற்றம், இனமாற்றம் இவற்றால் நம் அடையாளங்களை இழந்தோம் என்கிறார் இயக்குநர். மொழிமாற்றம், இனமாற்றம் என்பவையெல்லாம் பொருளற்ற சொற்கள். மொழிக்கலப்பைத் தான் குறிப்பிடுகிறார் போலும். ஆனால் மதமாற்றங் கள் ஏன் நிகழ்ந்தன என்ற வரலாற்ற், சமூகக் காரணங்களை ஆராயாமல் குற்றம் சொல்வது அசல் இந்துத்துவ சிந்தனையல்லவா? நான் மலம் சுமப்பவனாகவும், வெட்டியானா கவும், இழிபிறவியாகவும், நாலாம் ஜாதியாகவும் இருந்துதான் என் அடையாளத்தைக் காக்க வேண்டுமா?
நம்மை ஆட்சி செய்தவர்கள் நம் வரலாற்றை மறைத்து, அழித்தனர் என்பதை நாமும் ஒப்புக் கொள்வோம். கூட இருந்தே அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லியாம் ஆரியத்தின் ஆபத்தை மறைப்பதேன்? அறிவியல் என்ற பெயரில் ஆன்மீக வியாபாரம் நடத்தும் பேச்சு வியாபாரிகளின் காட்சி வடிவம் தானா இது? தமிழுணர்வு என்று நாக்கில் தேன் தடவி ஏமாற்றி, அது தொண்டையில் இறங்குவதற்குள் கத்தியைச் சொருகும் ஆரியத்தனத்தைத் தான் 7-ஆம் அறிவு என்கிறார்களா? அடிமைப் படுத்துவதும், அறியாமையில் வைப்பதும் எதன் பேரால் செய்யப்பட்டாலும் அதை ஒழிப்பதே நம் முதல் வேலை!