இன்ஜின்தான் தலை. கழுத்துக்குக் கீழிருக்கும் கைகள், நெஞ்சு, வயிறு, கால்கள் எல்லாமும் தனித்தனி கம்பார்ட்மெண்ட். பூமித் தாயின் வீதிகள் என்னும் தண்டவாளங்களில் இந்தப் புகைவண்டி நேற்றுவரை சுகமாக விசிலடித்தபடி பயணித்துக் கொண்டுதான் இருந்தது.
என்ன ஆனதோ?
இஞ்சினின் மூளை மாதிரியான பாகத்தில் கோளாறு. தலைக்குள்ளே புகுந்த பெருச்சாளிகள் மூளையைக் குதறத் தொடங்கிவிட்டன. என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையே என்னால் அனுமானிக்க முடியவில்லை.
எனது முழுப் பெயர் சந்திரபாரதி. சந்திரன் என அழைப்பர்.துணை வட்டாட்சியருக்கும் எனக்கும் நாற்பதின் அணுக்கத்தில் வயது. ஜாதி சொல்லப் பிடிப்பதில்லை எனக்கு. பாரதியின் மேல் பற்றுக் கொண்ட என் அப்பா இப்படியான அறிவை ஊட்டித்தான் என்னை வளர்த்தார். பணி சார்ந்த என் துறையில் கையூட்டு தலை விரித்-தாடினாலும் என்னளவில் நான் பரிசுத்தமானவன். ஆகவே, சக ஊழியர்கள் என்னை அழைக்கும் பெயர் பி.டி, பிழைக்கத் தெரியாதவனின் சுருக்கம்.
மனசுக்குச் சரியென்று பட்டதைச் செய்து முடிப்பேன். யாராலும் என்னைத் தடுக்க முடிந்ததில்லை; முடிவதுமில்லை.
கடலூரிலிருந்து மாற்றலில் எங்கள் அலுவலகம் வந்த கங்காவுக்கு என்னைப் பிடித்துப் போகவே, ஆதி பராசக்தி யை மட்டுமே சாட்சியாக வைத்து மாலை மாற்றி மனைவியாக்கிக் கொண்டேன். இருவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருந்ததால் எங்களுக்குள் பிணக்கு வந்ததில்லை. கங்கா எனக்காகவே எனக்குள் எப்போதும் அன்பைப் பிரவகிக்கும் நதி.
அமைதியாகவே சென்று கொண்டிருந்த இந்தப் புகைவண்டித் தடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு விரிசல் விழப்போகிற செய்தி அந்தக் கடிதத்தில் வந்தது.
பத்து ரூபாயைச் செலுத்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில விபரங்கள் கேட்டு கோபாஜி பான்ஸ்லே என்பவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
தன்னை மராட்டிய மன்னர் வம்சத்தின் வாரிசுகளில் ஒருவராய்க் காட்டிக் கொண்ட அந்த போன்ஸ்லே கேட்டிருந்த விபரங்கள் அரதப் பழையது. நூறு ஆண்டுகளுக்கு முந்தியது.
அவரது மூதாதையர்கள் காலத்தில் கோட்டையூர் பகுதியில் இருந்த நிலங்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசு அதிகாரிகளால் வன்முறையாய்ப் பறிக்கப்-பட்டதாகவும், தான் இப்போது வறுமையில் வாடுவதால் அரசுக்கு எதிராய் வழக்குப் பதிவு செய்ய, அபகரிக்கப்பட்ட நிலங்களின் விபரங்-கள் தேவையெனவும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது.
அவர் கேட்டிருந்த விபரங்களைத் தேடுவது என்பது குதிரைக்குக் கொம்பைத் தேடுகிற கதை.
ஆனாலும் அவரது விண்ணப்பத்தை நான் அலட்சியம் செய்துவிடவில்லை. துன்பத்தில் உழல்கிற அந்த மனிதரின் கடிதத்தில் கேட்டிருந்த விபரங்களைத் தருவதற்கான முயற்சியில் இறங்கினேன்.
பியூன் ரெங்கசாமியிடம் மன்றாடி, விடுப்பு நாள் ஒன்றில் வரச் சொல்லி பழைய தஸ்தாவேஜூகளும், பதிவேடுகளும் இருந்த அறைக்குள் நுழைந்து தேடினேன். எனக்குத் தூசி ஒவ்வாமை நோயுண்டு. அதையும் பொருட்படுத்தாமல் ரெகார்டுகளைப் புரட்டிப்போட்டேன். பலனில்லை. நாள் முழுக்கத் தேடியும் தோற்றுத்தான் போனேன். பல பதிவேடுகளைக் கரையான்கள் தின்றுவிட்டிருந்தன.
இக்காலமெனில் விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. விரல் முனையால் தட்டினால் விபரங்கள் திரையில் தோன்றுகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முந்திய விபரத்தை எங்கு சென்று தேடுவது – எப்படிக் கண்டறிவது. களைத்துப் போனேன்.
வட்டாட்சியரிடம் விபரம் சொன்னேன்.
சந்திரன், இவ்வளவு சிரமப்பட்டு நீங்க அந்த விபரங்களைத் தேடியிருக்கவே வேண்டாம்…பத்து ரூபாய் பணத்தைக் கட்டிப்புட்டு நூறு வருசத்துக்கு முந்தின விஷயத்தைக் கேட்டா எப்படித் தர முடியும்… அந்த ரெகார்டு கிடைக்கலைன்னு பதில் எழுதிப் போட்ருங்க! – என்றார்.
அப்படி நிர்த்தாட்சண்யமான பதில் எழுதிட என் மனது இடம் தரவில்லை. நாவினால் சுடுகிற வடு காலத்துக்கும் நிலைத்திருக்கும் என்பதை நன்கறிந்தவன் நான். ஆகவே, அய்யா, தாங்கள் கேட்டிருக்கும் விபரங்கள் பல ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதால் பதிவேடுகளில் கண்டறிவது கடினம். கோட்டையூர் பகுதியில் தங்களின் மூதாதையர்களுக்கு நிலம் இருந்ததை ஊர்ஜிதம் செய்திட ஏதாவது ஆவணங்கள் தங்கள் வசமிருப்பின் தந்துதவினால் பதிவேடுகளைத் தேடிப் படிக்க ஏதுவாகும்! என்கிற ரீதியில் பணிவோடு ஒரு கடிதம் எழுதி நானே கையெழுத்திட்டு கோபாஜி பான்ஸ்லேக்கு அஞ்சல் செய்தேன். ஆசுவாசமானேன்.
புகைவண்டி, இடைப்பட்ட அந்த ஜங்ஷனில் நின்று பெருமூச்செறிந்தது. தாக சாந்திக்கு ஏராளமாய் தண்ணீர் குடித்தது. வியர்வையைத் துடைத்துவிட்டு விசில் கொடுத்தது.
நான் அந்தக் கடிதத்தில் போட்ட கையெழுத்து என் வாழ்க்கையையே மாற்றி-யெழுதுகிற ஆயுதமாகுமென அப்போது நான் துளியும் கருதவில்லை!
என் கடிதத்தின் நகலை வைத்து கோபாஜி பான்ஸ்லே தீர்ப்பாணையத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார். என் கடிதம் அவரது ராஜவம்சத்தையே பழிப்பதாக அவர் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார்.
கோட்டையூரில் கோட்டை இருந்ததற்கு அடையாளமாய் இப்போது கோட்டை சிவன் கோவில், கோட்டைக் குளம், கோட்டைத் தெரு ஆகியன இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். தனது மூதாதையருக்கு அந்தப் பகுதியில்தான் நிலங்கள் இருந்தன என்றும், இப்போது அங்கே கட்டிடங்கள் எழும்பி அதில் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதையும் குறிப்-பிட்டிருந்தார். தனது கடிதத்துக்கு முறையான பதில் தர வேண்டுமெனவும், தன்னையும் தன் வம்சத்தையும் மான-பங்கப்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காரணத்திற்காக தனிப்பட்ட நஷ்ட ஈடு எனக்கு விதிக்க வேண்டுமெனவும் அவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
என்னை முதன்மைக் குற்றவாளியாக்கி தீர்ப்பாணையத்தில் அவர் பதிவு செய்திருந்த வழக்கின் நகலை எனக்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.
சத்தியத்துக்கு ஏன் இந்த சோதனை? மனமுடைந்து போனேன்.
அடுத்த சந்திப்பில் கூட்ஸ் வண்டி நிற்பதால் சற்று காலம் தாழ்த்தி வரும்படி இந்தப் புகைவண்டிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அந்த வழக்குக்காக நான் அடிக்கடி சென்னைக்குச் செல்ல நேர்ந்தது. என் பக்கத்து நியாயங்களைக் கேட்க தீர்ப்-பாணையத்தில் எந்தச் செவியுமில்லை. போன்ஸ்லே அழுது கதறி நீதிபதியையே கண்கலங்க வைத்தார். அவர் நியமித்திருந்த வழக்குரைஞர் ராஜவம்சத்துக்கு நீதி மறுக்கப்படுவதை வன்மையாய்க் கண்டித்து வழக்-குரைத்தார். மௌனம் காப்பதைத் தவிர அங்கே எனக்கு வேறு வழியில்லாமல் போனது. வழக்கின் தீர்ப்பு, கடிதம் மூலம் வருமென எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இறுகிய மனத்தோடு வீடு திரும்பினேன். சுற்றிலும் ஆயிரம் சிலந்திகள் ஒன்று சேர்ந்து பின்னிய பெரிய வலையில் சிக்கிக் கொண்ட சிற்றெறும்பாய் மனது பரிதவித்தது.
என் மீது என்ன தவறு இருக்கிறது? என்று கங்காவைக் கேட்டேன்.
என்னங்க இது அநியாயமா இருக்கு… நீங்க என்ன தப்புச் செய்தீங்க? …ரெகார்ட்ஸ் இல்லைன்னா நீங்க என்ன செய்ய முடியும்? கவலைப்படாதிருங்க…சத்தியம் எப்படியும் ஜெயிக்கும்…கடவுள் நம்மைக் கைவிட மாட்டான்! – என்றாள்.
ஆனால், கடவுள் கைவிரித்துவிட்டார்!
தீர்ப்பாணையம் வழங்கிய தீர்ப்பின் நகலை இன்று என்னிடம் வழங்கிய வட்டாட்சியர், வெரி ஸாரி சந்திரன்….உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சிட்டாங்க! என்றார்.
கடிதத்தை வாங்கிக் கொண்டு மௌனமாக என் அறைக்கு வந்தேன். எல்லாக் கண்களும் என்னைக் குற்றவாளியாக்கிப் பார்ப்பதை என் ரோமக் கால்கள் ஒவ்வொன்றிலும் உணர்ந்-தேன். இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குக் கிடைக்கவிருந்த பதவி உயர்வு இனி நிச்சயம் கிடைக்காது!
என்னைச் சுற்றிலும் வெறுமை, வெட்ட-வெளி, அகண்ட பாலைவனத்தில் நான் மட்டும் தனியே.
கங்காவின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன்? என் சிறு மூளைக்குள் பெருச்சாளிகள் கூர் நகங்களால் பிறாண்டின. காட்டு வெள்ளம் என்னை அடித்துச் சென்றது.
அறைக் கதவைத் தாழிட்டுவிட்டு, மேஜை மீதேறி நின்றேன். தலைக்கு மேலே மின்விசிறி வேகமாய்ச் சுழன்றது.
யாரோ சதிகாரர்கள் செய்த வேலையால் தண்டவாளங்கள் பெயர்ந்து கிடப்பதை ஆடு மேய்க்க வந்த அந்தச் சிறுவன் பார்த்து அதிர்ச்சியானான். தூரத்தில் புகைவண்டி வரும் சத்தம். இங்கே வந்தால் நிச்சயம் புகைவண்டி தடம் புரளும். ஏராளமானோர் இறந்து போவார்கள். கூடாது. புகைவண்டியை எப்படியாவது நிறுத்த வேண்டும். எப்படி? அவனது சிறு மூளை சட்டென்று ஒரு யோசனை சொன்னது. தான் அணிந்திருந்த சிகப்புச் சட்டையைக் கழற்றி, கொண்டு வந்திருந்த கொம்பின் முனையில் கொடி போலக் கட்டினான். புகை வண்டி வரும் திசை நோக்கி கொம்பை ஆட்டிய-படியே வேகமாய் ஓடினான்…
அறைக் கதவை யாரோ படபடவென்று தட்டினார்கள். சுவாதீனமடைந்து மேசையை விட்டு இறங்கினேன். கதவைத் திறந்தேன். வட்டாட்சியர் நின்றிருந்தார்.
என்னாச்சு சந்திரன், ஏன் கதவைத் தாழ் போட்டீங்க? ஏன் உங்க முகம் இப்படி வெளிறிக் கிடக்கு?
எனக்குப் பதில் வரவில்லை. பதிலாகக் கண்ணீர் வந்தது. மேசை மீதிருந்த என் கால் அச்சுகள் வட்டாட்சியருக்கு நான் செய்யவிருந்த செயலை உணர்த்திவிட்டது. அறைக் கதவை மீண்டும் தாழிட்ட வட்டாட்சியர் என் தோள் பற்றினார்.
சந்திரன், என்ன முட்டாள்தனமான காரியம் செய்ய இருந்தீங்க… உங்க குடும்பத்தை நீங்க நெனச்சுப் பார்க்கவே இல்லையா? … தீர்ப்பாணையம் அபராதம் விதிச்சிட்டா அதனால் உங்க மானம் போய்ட்டதா ஏன் நீங்க நெனைக்கணும்…அதுக்காக உங்களையே நீங்க மாய்ச்சிக்க முடிவு பண்ணிட்டா அந்தக் குற்றத்தை நீங்க ஏத்துக்கிட்டதால்ல ஆகிவிடும்… அப்பீல் பண்ணுவோம்…வழக்கை உடைப்போம்… ஜெயித்துக் காட்டுவோம்…. உங்களைப் போல நல்ல மனிதர்தாங்க இந்தச் சமுதாயத்துக்கு வேணும்!
வட்டாட்சியர் பேசப் பேச எனக்-குள்ளிருந்த வெறுமை விலகிப்போனது, சோகம் கவ்விக் கொண்டது. வெட்கமும் சேர்ந்து கொள்ள அவர் மார்பில் முகம் புதைத்து அழத் தொடங்கினேன்.