கரோனா வைரஸ் பரவி வரும் இந்தக் காலகட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், அரசுத் தடையை மீறி நடந்தால் கரோனா வேகமாகப் பரவுவதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். எனவே இந்து முன்னணியினர் தமிழகம் முழுக்க ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் விநாயகர் சிலைகளை நிறுவி, அதை ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன், ரிட் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கடந்த காலங்களில் எளிமையாக வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி, சிலஆண்டுகளாக பெரிய அளவு சிலைகளை வைத்து கொண்டாடப்பட்டு சுற்றுச் சூழல் சீர்கேட்டுக்கும், சட்ட -_ ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலையில் அரசு சொன்னபடி விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்து விட்டு, பின்பு மாலையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று அரசு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊர்வலமாக வலம் வருவதும், சம்பிரதாயத்திற்காக அவரையும் அவர் கூட்டத்தாரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவதும், பின்பு அவர்களை விடுவிப்பதும் ஆண்டுக்காண்டு வாடிக்கையாக நடந்து வருகிறது. அவர் மீது போடப்பட்ட வழக்குகளில் இன்று வரை குற்றப்பத்திரிகையினை போலீசார் தாக்கல் செய்ததில்லை.இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவி மக்களின் வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் விழாக்களில் பொதுமக்கள் கூடக் கூடாது என்ற வகையில் அரசு தடை விதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம்களின் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தொழுகை, கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பிரார்த்தனை ஆகியவை கூடாது என்று அரசு தடை விதித்தது. அதுமட்டுமின்றி பெரிய கோயில்கள், ஆடித்திருவிழா, சித்திரைத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறவும் அரசு தடை விதித்தது. கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவினை அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு தனது சுற்றறிக்கையில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையும், பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி தடை செய்தும் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் அரசு விதித்துள்ள தடையை மீறி ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவோம் என்றும், அதைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போம் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை இயக்குநருக்கு 14.08.2020 அன்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சு. குமாரதேவன் ஆஜரானார். கோவிட் – 19 சூழலில் 1,50,000 விநாயகர் சிலைகளைப் பொது இடத்தில் நிறுவுவதும் ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப் போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேட்டி கொடுப்பதும் அரசுக்கு சவாலாக உள்ளது என்றும், அப்படி அனுமதிப்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்து வதோடு கோவிட் 19 பரவ வழி வகுப்பதால் தடைசெய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். அரசுத் தரப்பில் அரசு பிளீடர் ஜெயப் பிரகாஷ் நாராயணன் ஆஜராகி 14 – 08-2020 GO.418 இது சம்பந்தமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அரசு உத்தரவை மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்கண்ட உத்தரவை மீறுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தனர். இதனால் தடை உத்தரவை மீறும் இந்துத்துவ இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையுமில்லை.