கி.வீரமணி
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு – இவ்வாண்டு; அவரை நினைக்கும் பொழுது நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
ஒன்று மாணவர் பருவம்; இரண்டு – தந்தை பெரியாரோடு சேர்ந்து 1949 – ஆம் ஆண்டு வரை அவரோடு பணியாற்றியது; மூன்று 1949 முதல் 1967 வரை தி.மு.க என்ற திராவிட இயக்க அரசியல் கட்சியைத் தலைமை தாங்கி நடத்திச் சென்றது. நான்கு 1967-69 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தது.
இந்த நான்கு பருவங்களிலும் பல சிறப்புகள் உண்டு என்றாலும், தந்தை பெரியார் அவர்களுடன் உறைந்த காலம் – இக்காலகட்டத்தில் அவரின் எழுத்துகள், பேச்சுகள், பிரச்சாரமுறைகள்தான் அறிஞர் அண்ணா என்றும், சீரிய சிந்தனையாளர் அண்ணா என்றும் பெருமளவில் கூறத் தகுந்த நடப்புகள் ஏராளமாகவேயிருந்தன. தந்தை பெரியார் ஒரு தத்துவத்தைத் தந்தார். சித்தாந்தத்தைக் கொடுத்தார் என்றால், அவற்றை மக்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று விதைத்தது, அவர்களை தமது வசீகரப் பேச்சால் சுவை கூட்டும் எழுத்தால் பகுத்தறிவுப் பக்கம், தன்மானத்தின் பக்கம் இன உணர்வின் பக்கம் இழுத்து வந்தார். இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால் தந்தை பெரியார் என்ற புரட்சிகரச் சிந்தனையாளரின் பாசறைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இராமாயணச் சொற்போர் சொல்லின் செல்வர் என்று போற்றப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளையிடம் வாதப்போர் நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் கருத்துப் போர். எல்லாப் போரிலும் அண்ணாவின் ஆழமான, அழுத்தமான கருத்துக்களும் தகவல்களும் ஆதாரங்களும் தான் வெற்றியுடன் மேலெழுந்து நின்றன.
“குடிஅரசில்” அய்யாவின் அருகில் இருந்து அணுக்கமாக ஆற்றிய பணி அதன்பின் ‘திராவிட நாடு’ வார ஏட்டில் வெளிவந்த அண்ணாவின் தித்திக்கும் தமிழில் பொறி பறக்கும் கட்டுரைகள், ‘ஆரிய மாயை’ என்ற வரலாற்று ஆவணம், ஏ தாழ்ந்த தமிழகமே! ‘இலட்சிய வரலாறு’, ‘பணத்தோட்டம்’, ‘மாஜிக் கடவுள்கள்’, ‘புராண மதங்கள்’ என்று எண்ணற்ற நூல்கள் அண்ணாவின் மூலம் திராவிட இயக்கப் பாசறையிலிருந்து மக்களை கிளர்த்தெழச் செய்தது.
அதன் விளைவு ஆரியத்தின் பிடியில் கிடந்த மக்கள் நிமிர்ந்து கொண்டு வெளியேறும் ஒரு நிலையை உருவாக்கியது. அந்தப் பருவத்தில் அண்ணாவின் பேச்சும் எழுத்தும் திராவிட இயக்கத்தின் கருவூலங்களாகும்.
அடுத்து 1949 முதல் 1967 வரையிலான கால கட்டத்தின் ஓர் அரசியல் கட்சியின் தலைவராகப் பரிணமித்தவர். திராவிடர் கழகமும் தி.மு.க வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று பிரகடனப்படுத்தினார். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக ஓர்அரசியல் சூறாவளியை எழுப்பி “சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட கட்சி காங்கிரஸ்’’ என்ற எண்ணோட்டம் மக்களிடமிருப்பினும், அதனையும் தாண்டி ஆட்சியை திராவிட இயக்கத்தின் பிடியில் கொண்டு வந்த சாதனை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.
அரசியல் கட்சியை அவர் நடத்தியிருந்தாலும் 1967 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் அவருடைய பார்வை, தான் கண்ட கொண்ட ஒரே தலைவரான தந்தை பெரியார் இருக்கும் திசை நோக்கியே சுழன்றது; ஆம்! அய்யா அவர்களை தம் அமைச்சர்களுடன் திருச்சி பெரியார் மாளிகைக்குச் சென்று சந்தித்து, ஆசி கோரினார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தது மிகக் குறுகிய காலம் என்றாலும் “நான் திராவிடன் திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவன் – தந்தை பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தியவன் அதன் தத்துவத்தை செயல்படுத்த வேண்டும் என்று துடிப்பவன்’’ என்பதை வெறும் வார்த்தைகளால் அல்ல செயல் வடிவத்தில் வடித்து காட்டிய பெருமகன் அவர்
1. அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்; அங்கு எந்தவித மதச் சின்னங்களுக்கும் வழிபாட்டுக்கும் இடமில்லை என்ற ஆணை.
2. சுயமரியாதைத் திருமணச் சட்டப்படி -செல்லுப்படியாகும் என்ற ஏற்பாடு.
3. சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல்.
4. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை – இரு மொழித் திட்டமே என்ற அறிவிப்பு.
5. இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளும், செயல்பாடுகளும் அறிஞர் அண்ணாவின் முழுப் பரிமாணத்தைக் காட்டக் கூடியவையாகும்.
அண்ணா நூற்றாண்டில் அவரின் புகழைப்பாட வேண்டியதுதான்; ஆனால் அத்தோடு நம் பணி நின்று விடக் கூடாது. திராவிட இயக்க இளைஞர்களுக்கு அடிப்படையான திராவிட இயக்கச் சித்தாந்த வகுப்புகள்; மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் வளர்ப்பு; மாணவர்கள், இளைஞர்கள் மத்தியிலே இவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கான திட்டங்கள் யுக்திகள்.
பாடத் திட்டத்திலே திராவிட இயக்க வரலாறு, சமூகநீதி வரலாறு, பகுத்தறிவுக் கொள்கைகள் இவற்றை இடம் பெறச் செய்தல். இவைபற்றி போட்டிகளை நடத்தி உற்சாகப்படுத்துதல் அவற்றிற்கு வசீகரமான பரிசுகளை உண்டாக்குதல். அண்ணாவின் நாடகங்களை நடத்த முன் வருவோர்க்கு நிதி உதவி செய்தல் போன்றவைகளின் மூலம் அறிஞர் அண்ணாவை பட்டி தொட்டியெல்லாம் இந்தப் புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்! அண்ணா நமக்கு வெறும் முத்திரையல்ல நீண்ட வரலாறு படைத்த ஓர் இனத்தின் மறுமலர்ச்சிப் பாதையில் முக்கியமான கைகாட்டி வழிகாட்டி!!
வாழ்க அண்ணா ! வளர்க பகுத்தறிவு!!
(தரவு: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலர், மியான்மர்)