ஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்!

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

கே: புதிய கல்விக் கொள்கையில் உள்ள காவிக் கொள்கைகளை நீக்கி அமல்படுத்த இந்திய அளவில் போராட்டம் தேவையா? தமிழ்நாடு மட்டும் போராடினால் போதுமா?

– குணா, தாம்பரம்

ப: தமிழ் நாடு வழிகாட்டினால் தான் மற்ற மாநிலங்கள் போராடும். இங்குள்ளது போல அங்கே விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை! தென் மாநிலங்களில் கூட கொரோனா பற்றிய கவலை இருக்கும் அளவுக்கு கல்விக்காக ஒடுக்கப்பட்டோர் மத ஈட்டிகளால் குத்துப்படுவது பற்றி எழுச்சி ஏற்படவில்லை ஊடகங்களின் இருட்டடிப்பதும் புரியவில்லை. தமிழ்நாடு வழமைபோல சமூகநீதி மண், கல்வியில் முன்னேறி இருப்பதால் நாம் தான் பிறருக்கு உண்மை நிலையை எடுத்து விளக்கி ஒன்று திரட்டி போராட வேண்டும்.ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெளிப்படையாக தங்கள் கொள்கையில் அறுபது விழுக்காடு அளவிற்கு இதன் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்ற ஒன்று போதாதா, இது மக்கள் விரோத கல்விதிட்டம் என்று உணர்ந்து கொள்ள! பிரச்சாரம், போராட்டம் தான் தீர்வு! -ஆச்சாரியாரின் குலக்கல்வி புதிய வடிவில்! இந்தியா முழுமைக்கும் சமூகநீதி காணாமல் போய்விட்டது.

கே: தமிழகத்தில் ‘இ’-பாஸ் முறை இனி தொடரப்பட வேண்டுமா, விலக்கப்பட வேண்டுமா அல்லது மாற்றங்கள் தேவையா?

– மகிழ், சைதை

ப: ‘இ’-பாஸ் முறை லஞ்சத்திற்கு வழிவகுத்தது. நோயைத் தடுக்க உதவவில்லை- மத்திய அரசுக்கூட கைவிட்ட பிறகு, மாநில அரசு இதில் ஏன் பிடிவாதம் காட்டுகிறது. முகக்கவசம், தனிநபர் இடைவெளி மற்ற எச்சரிக்கைகளை வற்புறுத்தினாலே போதும். அதுவே அடிக்கடி குலைகிறதே அதனால் தானே இந்த நிலை! – எனவே இ-பாஸ்முறையை ஒழிப்பது மக்களுக்கு நிம்மதி தரும்! ஊரடங்கு கூட இனியும் நீடிக்கவே கூடாது. மக்களுக்கும் பொருளாதாரம் நசிந்துக்கொண்டே வருகிறது.

கொரோனா தொற்று எச்சரிக்கையுடன் வாழ்வு என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்ட போது ஏன் இந்த நிலை. முழுக்க நனைந்த பிறகு முக்காடு தேவையா!

கே:  தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிடக் கொள்கையில் உறுதியாக இருப்பது, பாஜ.க அரசைத் துணிவுடன் எதிர்ப்பது, கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதுபோன்றப் பணிகளைச் செய்தும், அவரை ஆளுமையில்லா தலைவர் என எதிரிகள் கூறுவதின் உள் நோக்கம் என்ன?

– ராஜா, ஆவடி

ப: அந்த எதிரிகளின் எதிர்ப்புதான் அவர் ஆளுமைமிக்க தலைவர் என்பதை உறுதி செய்யும் நற்சான்று. கலைஞரை மிஞ்சும் உழைப்பும் சுறுசுறுப்பும் – கொள்கை உணர்வும் இன எதிரிகளின் வயிற்றில் புளியை கரைத்ததால் இப்படி கூறுகின்றனர்!.

 

கே: பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறதே அதற்கு தீர்வு என்ன?

– ஜான் பிரகாஷ், சென்னை

ப: தேவை, ஒரு நல்லாட்சி – நம்பிக்கையோடு காத்திருப்போம்.

கே:  சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் உள்ளவற்றை எடுத்து கூறினால் குண்டர் சட்டம் பாய்கிறதே! கருத்துரிமையைக் காக்க தாங்கள் கூறும் வழி என்ன?

– சுரேஷ், சேலம்

ப: மேற்கூறியது தான் – ஒரு நேரிய ஆட்சி மனித உரிமைகளை மதிக்கும் புதிய ஆட்சியே சரியான தீர்வு. அதற்காக உழைப்பதே இப்போது முக்கியம்!

கே: மருத்துவக்கல்லூரியில் சேர பிற்படுத்தப்பட்டோரின் 50 விழுக்காட்டிற்கான உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக மத்திய அரசு சட்டமாக மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

– நெய்வேலி க.தியாகராசன். கொரநாட்டுக் கருப்பூர்

ப: மக்கள் மன்றத்தை போராட்ட களமாக மாற்றுவதே ஒரே வழி!

கே: பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லாத நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முயல்வதேன்? கூட்டணி வைக்காமல் அக்கட்சியை எளிதில் ஒழிக்கலாமே?

– முத்துகுமார், காஞ்சி

ப: பா.ஜ.க.வின் ஆணவம் ஒன்றே போக்கு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் தமிழகத்தில்! பொறுத்திருந்து பாருங்கள்!.

 

கே: யூ,டியூப் வழியே தாங்கள் தினம் பத்து நிமிடங்கள் மக்களுக்கு வேண்டிய கருத்துகளை பேசி வெளியிட்டால் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே, செய்வீர்களா?

– கௌதம், வேலூர்

ப: வருகிற செப்டம்பரிலிருந்து தொடங்கலாம் நல்ல யோசனைக்கு நன்றி.

கே: ஊடகத்துறையினர் மீது மத்திய அரசு அழுத்தம் தந்து தனக்கு சாதகமாக செயல்பட வைப்பதை தடுத்து நிறுத்த என்ன வேண்டும்?

– அன்பு, மதுரை

ப: அனைத்து முற்போக்கு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராடுவதும், மக்களிடையே பிரச்சாரம் செய்வதும், சட்டப்போராட்டமும் சேர்த்து நடத்துவதும் ஒரே தீர்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *